Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 3, 2016

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது: கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு


காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு வரும் 6-ம் தேதி வரை காவிரியில் 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “1-ம் தேதியில் இருந்து வரும் 6-ம் தேதி வரை தமிழகத்துக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். மத்திய அரசு வரும் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்” என நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து விவாதிப்பதற்காக அவசரமாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கர்நாடக அரசு நேற்று மாலை கூட்டியது. முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, ரமேஷ் ஜிகஜினகி, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நாரிமனுக்கு பாஜக எதிர்ப்பு

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜக சார்பாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா பேசும்போது, “காவிரி வழக்கில் வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் சரியாக வாதிட்டு இருந்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பேச்சுக்கே இடமில்லாமல் போயிருக்கும். எனவே உடனடியாக அவரை நீக்கிவிட்டு வேறு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும்” என்றார்.

மஜத மாநில தலைவர் குமாரசாமி பேசும்போது, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவை பிரதமர் நரேந்திர மோடி நிராகரிக்க வேண்டும். கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்களும், அனைத்துக்கட்சி எம்பிக்களும் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்திற்கு கர்நாடக சார்பாக பிரதிநிதியின் பெயரை பரிந்துரைக்க கூடாது.

மீண்டும் சட்டப்பேரவையை கூட்டி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது என சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேவைப்பட்டால் அதைத் தடுக்கும் வகையில் கர்நாடகாவின் நீர் உரிமைக்காக தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இல்லாவிடில் உச்ச நீதிமன்ற உத்தரவை ஆட்சேபித்து மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்து, சிறப்பாக வாதிட்டு வெற்றி பெற வேண்டும்” என்றார்.

இதேபோல அனைத்துக் கட்சியை சேர்ந்த தலைவர்களும், அமைச்சர்களும் தமிழகத்துக்கு நீரை திறக்கக் கூடாது எனவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்கக் கூடாது எனவும் ஒருமித்த கருத்தாக வலியுறுத்தினர்.

அனைத்துக்கட்சி தலைவர் களின் கருத்துகளை கேட்டறிந்த முதல்வர் சித்தராமையா உடனடி யாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அதிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடக்கூடாது எனவும், தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

கர்நாடகா மீண்டும் கைவிரிப்பு

அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சரவை கூட்ட முடிவுகளை அடிப்படையாக வைத்து மீண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுப்பது என சித்தராமையா முடிவெடுத்துள்ளார். காவிரியில் உள்ள நீரை பெங்களூரு, மைசூரு, மண்டியா ஆகிய மாவட்டங்களின் குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். எனவே தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட முடியாத நிலை தொடர்வதாக அவர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.