Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 25, 2016

’மேதகு’ இல்லை.. இனிமேல் ’மாண்புமிகு ’ஆளுநர் - இந்த அறிவிப்பு எதற்காக ?


தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ‘‘தன்னை, இனி ‘மேதகு’ என்று அழைக்கவேண்டியதில்லை. ‘மாண்புமிகு’ என்று அழைத்தால் போதும்’’ அறிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை கடந்த 23-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், அரசு விழாக்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் ”மேதகு ஆளுநர்’’ என்பதற்குப் பதிலாக, ‘மாண்புமிகு ஆளுநர்’ எனப் பயன்படுத்துமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருப்பதாகஅவரின் செயலாளர் மீனா தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘‘தற்போது வழக்கத்திலுள்ள ‘மேதகு ஆளுநர்’ என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம். அதேநேரத்தில், வெளிநாட்டினருடனான கலந்துரையாடலின்போது ஆளுநரை, ‘மேதகு ஆளுநர்’ என அழைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். எதற்காக இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்? மேதகுவுக்கும், மாண்புமிகுவுக்கும் என்ன வித்தியாசம்? இதுகுறித்து சட்டத்துறை நிபுணர்களிடம் பேசினோம்.

மூத்த வழக்கறிஞர் விஜயன், “இது அரசியல் அமைப்புச் சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. இந்த மாற்றத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ‘ரோஜாவை வேறு எந்தப் பெயரில் அழைத்தாலும் அது ரோஜாதான்’ என்று ஷேக்ஸ்பியர் கூறியுள்ளார். சாதாரண பொதுமக்களுக்கு கவர்னர், ஆளுநர் என்றுதான் தெரியும். இதைப் பெரிய மாற்றமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

‘‘தமிழகத்துக்கு தற்போது முழுநேர கவர்னர்தான் தேவை!’’

முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், “மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஜனாதிபதியையும், ஆளுநரையும் ‘மேதகு’ என்று அழைப்பதற்குப் பதிலாக ‘மாண்புமிகு’ என்றே அழைக்கலாம் என்று ஏற்கெனவே முடிவெடித்து உள்ளது. அந்த அடிப்படையில்தான், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ‘தன்னை மாண்புமிகு என்று அழைத்தால் போதும்’ என்று கேட்டுக்கொண்டார். அதன் வழியாகத்தான் இப்போது தமிழக பொறுப்பு ஆளுநரும், ‘தன்னை மேதகு என்று அழைக்கவேண்டாம்’ என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் பெயர் மாற்றத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்று சென்னை. இதற்குரிய முக்கியதுவத்தை மத்திய அரசு தரவேண்டும். இங்கு இப்போது உள்ள சூழ்நிலையில் கவர்னருடைய பணிகள் மிக முக்கியதுவம் வாய்ந்ததாகக் கவனிக்கப்படுகிறது. ஒரு மாதத்துக்கு மேலாக முதலமைச்சர் ஜெயலிலதா அம்மையார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். எல்லாக் கண்களும் கவர்னரை நோக்கியே இருக்கின்றன. ஒவ்வொரு விஷயத்துக்கும் கவர்னர் பதில் சொல்லி ஆகவேண்டிய நிலையில் இருக்கிறார். அதில்தான் அதிக அக்கறை எடுக்கவேண்டும்.

மிகப்பெரிய மாநிலமான மஹாராஷ்டிர கவர்னராக இருக்கும் வித்யாசாகர் ராவ், தமிழகத்தைக் கூடுதல் பொறுப்பாகத்தான் கவனித்து வருகிறார். சென்னைக்கு அவ்வப்போது வந்துசெல்லும் நிலையைவிட,  உடனடியாகத் தமிழகத்துக்கு முழு நேர கவர்னர் ஒருவரை மத்திய அரசு நியமிக்க வேணடும். இதுதான் இப்போது தேவை. அதைவிடுத்து பெயர்களை மாற்றுவதால், ஆட்சி நிர்வாகத்துக்கு எந்த வகையிலும் பயன்தராது” என்றார்.



‘‘இது மனிதநேயத்தின் வெளிப்பாடு’’

மூத்த வழக்கறிஞர் விடுதலை, ‘‘அரசியலமைப்புச் சட்டத்தில், ‘மேதகு’, ‘மாண்புமிகு’ என்ற பதங்கள் எல்லாம் இல்லை. இது நாம் வைத்துக்கொன்டதுதான். முன்பெல்லாம், ‘கனம் பொருந்திய’ என்றுதான் ஆட்சியாளர்களை அழைத்தார்கள். ஜனநாயகத்தின் நீட்சியாக அந்த வழக்கம் ஒழிந்துவிட்டது. மக்கள் பிரதிநிதிகளை, ‘மாண்புமிகு’ என்று அழைக்கும் பழக்கம் இப்போது வந்துவிட்டது. இது, ஜனநாயகத்தில், மக்களோடு தங்களுக்கு இருக்கும் தொடர்பை எளிமையாக்கியதன் வெளிப்பாடு என்றுதான் பார்க்க வேண்டும். தமிழக ஆளுநர், தன்னை, ‘மேதகு’ என்று அழைப்பதற்குப் பதில், ‘மாண்புமிகு’ என்று அழைத்தால் போதும் என்று கூறுவது அவர் தன் நிலையைக் குறைத்து மக்களோடு ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நடைமுறையை ஜனநாயகத்தின் ஆரோக்கியமாகத்தான் பார்க்க வேண்டும். இது மனிதநேயத்தின் வெளிப்பாடு’’ என்றார்.

மக்கள் பிரதிநிதியின் பணிகளைச் செய்ய ஆசைப்படுகிறாரோ ஆளுநர்?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.