Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 18, 2016

உயிரியல் போர் ஆயுதமா டெங்கு!? - இந்தியாவை அலற வைக்கும் பின்னணி


இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் வீரியமாகி வருகிறது. சென்னையில் மட்டும் இதுவரையில் நான்கு பேர் பலியாகி உள்ளனர். ' நமது சூழலுக்கு சிறிதும் சம்பந்தமில்லாத இந்த வைரஸ் பரவுவதற்குப் பின்னால் அதிர்ச்சியூட்டும் பல காரணங்கள் உள்ளன' என்கிறார் மருத்துவர். புகழேந்தி.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் ஆதிக்கம் தலைதூக்கத் தொடங்கிவிட்டது. இதுவரையில், மதுரவாயல் மாணவர் சுதர்சன், திருத்தணி சிறுமி லதாஞ்சலி என மரணங்கள் ஒருபுறம் வாட்டி வதைக்கிறது. மறுபுறம் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே இருக்கின்றன. தலைநகர் டெல்லியில் இதுவரையில் 1,100 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரையில் 18 பேர் இறந்துவிட்டனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம்.

" சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சத்து 28 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இதில், சுமார் இரண்டாயிரம் பேர் வரையில் மரணத்தைத் தழுவுகின்றனர். இந்தியத் தட்பவெப்ப நிலைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத இந்தக் கொசுக்குள், உயிரியல் போர் ஆயுதமாக இருக்கலாம் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன" எனக் கவலையோடு பேசத் தொடங்கினார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் டாக்டர். புகழேந்தி. தொடர்ந்து அவர், " டெல்லியில் 1996-ம் ஆண்டுதான் டெங்கு காய்ச்சலின் வீரியம் உச்சத்தைத் தொட்டது. அந்த ஆண்டில் 10,252 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள். 423 பேர் இறந்தார்கள். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, ' காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் பெயரைச் சொல்லுங்கள்' என நீதியரசர்கள் கோபத்தை வெளிப்படுத்திய செய்திகளும் வெளிவந்தன.

காய்ச்சல் குறித்து தீவிரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ' இந்த மண்ணிற்கு சிறிதும் சம்பந்தமில்லாத கொசுக்கள்' என்ற உண்மையும் தெரியவந்தன. ஏடிஸ் எஜிப்த் மற்றும் ஏடிஸ் அல்போபிக்சஸ் போன்ற பெயர்கள் மருத்துவ உலகில் பேசப்பட்டன. இது ஒரு மாற்றமடைந்த வைரஸ்(ஜீனோ டைப் 4) எனக் கண்டறிந்தனர். இந்தக் கொசுக்கள் சுத்தமான நீரில் வளரும்; காலை நேரத்தில் மட்டுமே கடிப்பவை. மற்ற காய்ச்சல்களைப் போல் அல்லாமல், உயிர் குடிக்கும் தன்மைதான் டெங்குவைத் தனித்துக் காட்டுகிறது. டெங்கு பாதிப்பு தொடங்கிவிட்டால், ரத்த பிளேட் லெட்டுகள் குறைவது; ரத்த ஓட்டம் தடைபட்டு முக்கிய உறுப்புகள் செயல் இழப்பது என பாதிப்புகள் அளவிட முடியாதது. ஒவ்வொரு ஆண்டும் டெங்குவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போனது. ஆய்வு முடிவுகளும் தொடர்ந்து கொண்டே இருந்தன. அந்த சமயத்தில், 2001-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி இந்திய உள்துறை செயலர் கமல் பாண்டே, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ஓர் அறிக்கையில், ' இது ஓர் உயிரியல் போர் ஆயுதமாக இருக்கலாம். இந்தியா அதை எதிர்கொள்ளும்' எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னதாக, 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அமெரிக்கா நிறுவனம் ஒன்று ஏடிஸ் ஆய்வு மையம் ஒன்றை சிலிகுரியில் தொடங்கியது. இந்த ஆய்வின் நோக்கமே, ஏடிஸ் கொசு தொடர்பானதுதான். இந்த மையம் தொடங்கப்பட்ட சில காலங்களில் பிரதமர் இந்திராவுக்கு சில தகவல்கள் வருகின்றன. ' இந்த மையத்தின் மீது சந்தேகம் எழுகிறது. அமெரிக்க உளவு நிறுவனம் இதன் பின்னால் இருக்கிறது' என பிரதமருக்குத் தெரிவிக்கப்பட, அந்த ஒப்பந்தமே ரத்து செய்யப்பட்டது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், 96-ம் ஆண்டு டெல்லியில் 423 பேர் இறந்தபோது, அமெரிக்க ஆய்வகம் அமைந்திருந்த சிலிகுரியில் 43 பேர் டெங்குவால் இறந்தார்கள் என்பதுதான். எனவே, இது ஓர் உயிரியல் போர் ஆயுதமாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது. 2015-ம் ஆண்டு 'பிளாஸ்' என்ற அமைப்பின் மூலம் டெங்கு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் மட்டும் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் பாதிக்கின்றனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இது வெறும் மர்மக் காய்ச்சல் என்ற ஒற்றைச் சொல்லோடு, அரசு அமைப்புகள் மூடி மறைக்கும் வேலையில் ஈடுபடுகின்றன. ஏனென்றால், டெங்குவுக்கு என எந்த மருந்துகளும் கண்டறியப்படவில்லை.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.