Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

October 20, 2016

புற்றுநோய்க்கு ஒரு அடி!


புற்றுநோய்க்குக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தடுப்பு மருந்து பக்க விளைவுகள் இல்லாதது

குழந்தைகளுக்குத் தொற்றுநோய் ஏற்படாமல் இருக்க, பிறந்ததிலிருந்தே வரிசைகட்டித் தடுப்பூசிகள் போடுவதைப் போல, பெரியவர்களுக்குப் புற்றுநோய் வருவதைத் தடுக்கவும், ஏற்கெனவே புற்றுநோய் இருந்தால் குணப்படுத்தவும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டிய காலம் வெகுதொலைவில் இல்லை. உலக அளவில் அறிவியலாளர்களின் அயராத உழைப்பாலும், மருத்துவத் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுவரும் மகத்தான முன்னேற்றங்களாலும் இது சாத்தியமாகிவருகிறது. புற்றுநோய் இல்லாத உலகம் படைப்பதற்குப் பாதை போடும் ‘தடுப்பு மருந்து சிகிச்சை’(Immunotherapy) எனும் இந்தப் புதிய தொழில்நுட்பம், நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம்.

புற்றுநோய் என்றால் என்ன?

நம் உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரும் நிலையில் இருந்தால், அந்த செல்களைப் புற்றுநோய் செல்கள் என்கிறோம். இத்தகைய செல்கள், அவை இடம்பெறும் உடலுறுப்பை அழிப்பதோடு மட்டுமல்லாமல், அருகில் உள்ள ஆரோக்கிய செல்களையும் அழிக்கத் தொடங்குகின்றன. மேலும், ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் ஓர் உறுப்பிலிருந்து மற்றொரு உறுப்புக்குப் பரவி, அந்த உறுப்பையும் பாதிக்கின்றன. நாளடைவில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கெடுத்து உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது, புற்றுநோய்.

இத்தகைய ஆபத்தான புற்று செல்கள் உருவாவதற்கு மரபுரீதியான காரணங்கள் முதலிடம் வகித்தாலும், புகைப் பழக்கம், மதுப் பழக்கம், நார்ச்சத்து இல்லாத உணவுப் பழக்கம், உடல்பருமன், சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட நம் வாழ்க்கை முறைகளும் முக்கியக் காரணங்களாகின்றன.

வலியில்லாத கட்டி, பல வாரங்களுக்கு விடாத இருமல், குரலில் மாற்றம், உணவு விழுங்குவதில் சிரமம், நாள்பட்ட அஜீரணம், ஆறாத காயம், மலத்தில், சிறுநீரில் அல்லது மூக்கிலிருந்து ரத்தம் வெளியேறுவது, ஏற்கெனவே இருந்த மரு அளவிலோ, நிறத்திலோ மாற்றம் அடைவது, காரணமில்லாமல் எடை குறைவது, நீடித்த சோர்வு போன்றவை புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள். இவற்றில் ஏதாவது ஒன்று தெரிந்தாலே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அப்போதுதான் புற்றுநோய்க்கு ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்று, உயிருக்கு ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்ளலாம்.

மேலை நாடுகளில் முன் பரிசோதனை முறைகள் வழக்கத்தில் உள்ளன. ஆனால், நம் நாட்டிலோ புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் வசதிகள் உள்ள போதிலும், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், பலரும் நோய் முற்றிய நிலையில்தான் சிகிச்சைக்கு வருகின்றனர். இதுவே இறப்புக்கு வழி அமைக்கிறது.

நவீன தடுப்பூசிகள்

பொதுவாக, ஆரோக்கியமாக உள்ளவர் களுக்குப் பின்னாளில் நோய் வராமல் தடுப்பதற்குத்தான் தடுப்பூசிகள் பயன்படுத்தப் படுவது வழக்கம். கருப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பூசிகள் இந்த வகையைச் சேர்ந்தவை. ஆனால், புற்றுநோயைப் பொறுத்த அளவில் நோய் ஏற்பட்டவருக்கும் தடுப்பூசி பயன்படுகிறது. எப்படி? உடலிலுள்ள நோய்ப் பாதுகாப்பு செல்களுக்கு (T cells) புற்றுநோய் செல்களைப் பிரித்துணரும் ஆற்றலை இத்தடுப்பூசி வழங்குகிறது. அப்போது ஓர் உறுப்பில் புதிதாகத் தோன்றும் புற்று செல்களை இவை உடனே கண்டறிந்து, அவற்றைத் தாக்கி அழிக்கின்றன. இதன் பலனால் அந்த உறுப்பில் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

இந்த வழியில் புராஸ்டேட் புற்றுநோய்க்கு இரண்டு வகைத் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இப்புற்றுநோய் உள்ளவரின் டி செல்களை அகற்றி, மரபணுப் பொறியியல் தொழில்நுட்பம் மூலம் GM-CSF எனும் புரதத்துடன் கலந்து அல்லது கதிரியக்கம் மூலம் பக்குவப்படுத்தி, மீண்டும் அதே நோயாளிக்கு அதைச் செலுத்துகின்றனர். இப்போது இந்த செல்கள் புராஸ்டேட் புற்று செல்களை அழிக்கும் தன்மையைப் பெற்றுவிடுவதால். நோய் கட்டுப்படுகிறது. இந்தத் தடுப்பூசிகளை மார்பகப் புற்றுநோய், சிறுநீர்ப்பைப் புற்றுநோய், குடல் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் ஆகியவற்றுக்கும் பயன் படுத்த முயற்சிகள் நடக்கின்றன.

‘பேரிகாட்’ செல்கள்

சாலையில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ‘பேரிகாட்கள்’ வைத்திருப் பதைப் பார்த்திருப்பீர்கள். அதுபோல் உடலுக்குள் அந்நியப் பொருட்கள் நுழைவதைத் தடுப்பதற்கென சிறப்பு செல்கள் (Check points) உள்ளன. சிலருக்கு இந்த செல்கள் உறக்க நிலையில் இருக்கும். இதைப் பயன்படுத்தி, புற்று செல்கள் அவர்கள் உடலில் பரவத் தொடங்கும். இவர்களுக்கு உறக்க நிலையில் உள்ள ‘பேரிகாட்’ செல்களைத் தட்டி எழுப்பும் விதமாகச் சில தடுப்பூசிகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். உதாரணமாக, ‘மெலனோமா’ எனும் சருமப் புற்றுநோய் செல்கள் PD-1 எனும் புரத மூலக்கூறை உற்பத்தி செய்து ‘பேரிகாட்’ செல்களை உறங்க வைத்துவிடுகிறது. இதனால், அந்தப் புற்றுநோய் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வளர்ந்து, சருமத்தைப் பாதிக்கிறது. இவர்களுக்கு, PD-1 எனும் புரதத்தை அழிக்கும் விதமாகத் தடுப்பூசி கண்டுபிடித்திருக்கின்றனர். இதைப் போட்டுக்கொண்டவர்களுக்கு, உறக்க நிலையில் உள்ள ‘பேரிகாட்’ செல்கள் விழிப்புற்று, உடலில் வளரும் புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்கத் தொடங்குவதால், நோய் குணமாகிறது. இந்த இரண்டுமே அமெரிக்க அறிவியலாளர்களின் சாதனை!

அரசு சிந்திக்க வேண்டும்

பொதுவாக, இப்போதுள்ள புற்றுநோய் சிகிச்சைகளுக்கு உடல் மெலிதல், முடி உதிர்தல், வாய்ப்புண், உணவு சாப்பிட முடியாத நிலை, சோர்வு போன்ற பக்கவிளைவுகள் உண்டு. இதற்குப் பயந்தே பலரும் புற்றுநோய்க்கு முறையான சிகிச்சை எடுக்கத் தயங்குகின்றனர். ஆனால், இந்தப் புதிய நவீன மருந்துகளுக்கு எவ்விதப் பக்கவிளைவுகளும் இல்லை என்பது முக்கியமான பாதுகாப்பு அம்சம். இதனால்தான் உலக அளவில் இவற்றுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. விரைவில் இந்தியாவுக்கும் வந்துவிடும்.

அதே வேளை, இந்த மருந்துகளின் ஒரு டோஸ் விலை பல லட்சங்கள். ஒருவருக்குக் குறைந்தது மூன்று டோஸ் தேவை. புற்றுநோய் என்பது ஏழை, பணக்காரன் என்று தகுதி பார்த்து வருவதில்லை. இன்னும் சொல்லப்போனால், ஏழைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு இந்த மருத்துவ வசதிகள் எட்ட வேண்டுமானால், மத்திய அரசு இப்புதிய மருந்துகளைத் தயாரிக்கும் உரிமையை வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்று, உள்நாட்டிலேயே தயாரித்தால்தான் இவற்றின் விலை குறையும். ஏழைகளுக்கும் பயன்படும். இதை அரசு சிந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.