“நாங்கள் இவளை மகிழ்ச்சியாக வளர்த்தோம். ஆனால் இவளது புகுந்த வீட்டு வாழ்க்கை முறை தலைகீழாக இருக்கிறது. அதனால் என் மகள் ரொம்பவும் குழம்பிப் போயிருக்கிறாள்” என்று தாயார் சொன்னார்.
‘எப்படி உங்கள் மகளை வளர்த்தீர்கள்?’ என்று தாயாரிடம் கேட்டேன்.
“எங்கள் வீட்டில் எப்போதும் சிரிப்பும், விளையாட்டுமாக இருக்கும். மூன்று பேரும் நண்பர்கள் போன்று பழகுவோம். விளையாடுவோம். என் கணவர் தொழிலில் எவ்வளவு ‘பிசி’யாக இருந்தாலும், தினமும் இரவு சாப்பாட்டிற்கு நாங்கள் ஒன்று சேர்ந்து விடுவோம். அப்போது ஆண்- பெண் உறவுகளில் இருந்து, உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்கள் பற்றியும் நாங்கள் அலசுவோம். அப்படி மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் வளர்க்கப்பட்ட எங்கள் பெண்ணை, வாழத் தெரியாத குடும்பத்தில் உள்ளவருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டோம்” என்று வருத்தத்தோடு சொன்னார்.
‘வாழத் தெரியாத குடும்பம்’ என்று தாயார் குறிப்பிட்டதற்கு, மகள் விளக்கம் கொடுத்தாள்.
“எனது மாமனார் கருணையும்,கட்டுப்பாடும் கொண்டவர். அவரைப் போல்தான் குடும்பத்தில் அனைவருமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதனால் எனது கணவரும் சிரிக்கத் தெரியாதவராகிவிட்டார். மனம் விட்டு என்னிடம் பேசவும் மாட்டார். நான் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றால் கூட முதலில் என் கணவரிடம் சொல்ல வேண்டும். அவர் தனது தந்தையின் முன்னால் போய் கையை கட்டிக் கொண்டு நின்று அனுமதி கேட்பார். அவர் ஆயிரம் விளக்கம் கேட்டு விட்டு அனுமதி கொடுப்பார்” என்று விளக்கினாள்.
சுதந்திரமாக வளர்க்கப்பட்ட இவள், எல்லோரிடமும் நிமிர்ந்து நின்று, முகத்திற்கு நேராய் பேசிப் பழக்கப்பட்டவள். ஆனால் மாமனாரோ, ‘மகனே தன் முன்னால் கையை கட்டிக் கொண்டு நின்று பேசும்போது, மருமகள் தன் முன்னால் தலைநிமிர்ந்து நின்று பேசலாமா?’ என்பது போல் நடந்து கொள்கிறாராம்.
அவளது கணவரை பற்றி கேட்டேன்.
“அவர் கட்டுப்பாடான குடும்பத்தில் வளரும் வெகுளிப் பெண்போல் நடந்து கொள்கிறார். தனது அப்பா எது சொன்னாலும் அதற்கு ஆமாம் போடுவார். தனிப்பட்ட முறையில் என் கணவரை குறை எதுவும் சொல்லமுடியாது. ஆனால் பணமிருந்தும் வாழ்க்கையை ரசிக்கத் தெரியாதவர். மனம் இருந்தும் மனைவியை நேசிக்கத் தெரியாதவர். இளமையிருந்தும் வாழ்க்கையை ருசிக்கத் தெரியாதவர்” என்றாள்.
மாமியாரை பற்றி கேட்டதும், “அவர் மட்டும்தான் எனக்கு ஆறுதலும், தேறுதலும் தந்து கொண்டிருக்கிறார்” என்றாள்.
மாமியாரை பற்றி அவள் சொன்ன தகவல்கள் இன்னொரு விதமாக இருந்தன.
“என் மாமியார் கல்லூரியில் படித்தவர். அவருக்கு புத்தகங்கள் வாசிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. தனது பிறந்த வீட்டில் சேகரித்து வைத்திருந்த ஏராளமான புத்தகங்களை புகுந்த வீட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார். அதை அப்படியே அவரது கணவர் (எனது மாமனார்) அள்ளி, அருகில் உள்ள வாசிப்புசாலைக்கு இனாமாக கொடுத்துவிட்டு, ‘இனிமேல் குடும்பத்தை மட்டும்தான் கவனிச்சுக்கணும். புத்தகம் வாசிக்கிறதை எல்லாம் மூட்டைகட்டி வைச்சிடு’ என்று கூறியிருக்கிறார். என் மாமியாரை அன்றிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட ஒரு அடிமைப்போலத்தான் நடத்திக்கொண்டிருக்கிறார். என் கணவரும் அப்படித்தான் இருக்கிறார்..” என்றாள்.
‘மாமியார் உன்னிடம் என்ன சொல்கிறார்?’
“நான் ஒரு அடிமைபோல் மாறி, இங்கே வீட்டுச் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறேன். எனக்கு வேறுவழியில்லை. ஆனால் நீ இந்த குடும்பத்தில் இருந்து விடுபட்டு, வேறு வாழ்க்கை அமைத்துக் கொள்ள விரும்பினாலும் நான் அதை தடுக்க மாட்டேன்’ என்று கூறினார்” என்றாள்.
‘நீ என்ன நினைக்கிறாய்?’
“புன்னகையையும், மகிழ்ச்சியும், சுதந்திரமும்தானே வாழ்க்கை. அவை எதுவும் கிடைக்காத போது நான் அந்த வீட்டில் இருந்து என்ன பலன்?” என்று கேட்டாள்.
நான் அவளுக்கு வாழ்க்கையின் பல்வேறு பரிணாமங்களை உணர்த்தினேன்.
‘மகிழ்ச்சி என்றால் என்னவென்றே தெரியாதவர்களாகத்தான் இன்று நிறைய மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உன் கணவரின் குடும்பமும் அப்படிப்பட்டதுதான். ஆனால் ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு வரும்போது அவளை, விளக்கேற்ற வந்தவள் என்று சொல்வார்கள். அது நிஜம்தான். விளக்கை உன்னைப் போன்ற பெண்கள் வீட்டில் அல்ல, வீட்டில் உள்ள மனிதர்களின் மனதில் ஏற்ற வேண்டியதிருக்கிறது. அதன் மூலம் அவர்கள் மனதில் உள்ள இருட்டை அகற்ற வேண்டியதிருக்கிறது. நீ பேச தெரிந்தவள், நீ சிரிக்க தெரிந்தவள், நீ சிந்திக்க தெரிந்தவள். வாழத் தெரிந்தவள். அவைகளில் எதுவும் தெரியாததாய் உன் மாமனார் குடும்பம் இருக்கிறது. நீ நினைத்தால் அவர்களையும் உன்னைப்போல் உருவாக்கி, வாழச் செய்ய முடியும். உன் மாமியாரையும் உடன் சேர்த்துக்கொண்டு அதற்கான முயற்சியை நீ செய்தால், உள்ளபடியே நீ அந்த குடும்பத்திற்கு விளக்கேற்றியவள் ஆகிவிடுவாய்’ என்றேன். சிந்தித்தாள்.
‘அப்படி ஒரு முயற்சியை மகள் செய்து பார்க்கட்டும்’ என்ற எண்ணம் தாயிடமும் இருந்தது. மாமியாரிடம் பேசியபோது அவரும் ஆதரவுக்கரம் நீட்டினார்.
நல்லமாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கை எல்லோருக்குமே உருவானது.
இன்று கிட்டத்தட்ட எல்லா பெண்களும் பிறந்த வீட்டில் மகிழ்ச்சியான சூழலில், சுதந்திரமாக வாழ்கிறார்கள். புகுந்த வீட்டில் அவர்களை அடிமைகளாக்கும் முயற்சி நடந்தால், அங்கு இல்லறம் நல்லறமாக இருக்காது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.