Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 16, 2016

வீட்டுக்குள் குழந்தையை அடைத்து வைத்த கொடூரம்..! வேலைக்கு செல்ல தாய் எடுத்த விபரீத முடிவு


தன்னுடைய இரண்டரை வயது குழந்தையை பெற்ற தாயே வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் புனேவைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஸ்வாதி சித்தால்கர், குழந்தையுடன் அலுவலகத்தில் பணியாற்றிய புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இது இந்தியா முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஸ்வாதி சித்தால்கர், படித்தவர் என்பதால் குழந்தையை கவனிக்க வீட்டில் யாரும் இல்லை என்பதால் அலுவலகத்துக்கு அழைத்த வந்திருந்தார். ஆனால் திருத்தணியை சேர்ந்த அருணா என்ற பெண், தன்னுடைய இரண்டரை வயது குழந்தையை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி கீழபஜார் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் இருந்து குழந்தை அழுகுரல் தொடர்ந்து கேட்டது. வீட்டின் அருகில் உள்ளவர்கள் விரைந்து பார்த்த போது, அந்த வீடு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து அதிரடியாக வீட்டை உடைத்து உள்ளே சென்றனர் அப்பகுதி மக்கள். அங்கு இரண்டரை வயதான பெண் குழந்தை இருந்தது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, அந்த குழந்தையை மீட்ட பொது மக்கள், இந்த சம்பவம் தொடர்பாக வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் படையுடன் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) விமல்ராஜ் அங்கு வந்து குழந்தையை மீட்டார்.

விசாரணையில், குழந்தையின் பெயர் கீர்த்தனா என்பதும், அவரது அம்மா பெயர் அருணா என்பதும் தெரியவந்தது. இதன்பிறகு அருணாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரிடம், ஆர்.டி.ஓ விமல்ராஜ் விசாரித்தார். அப்போது அருணா, "தினமும் எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு வேலை செல்கிறேன். தனியாக வசிப்பதால் கீர்த்தனாவை கவனித்துக் கொள்ளயாரும் இல்லை. இதனால் அவளுக்குத் தேவையானவற்றை அருகிலேயே வைத்து விட்டு செல்வேன். இதுவரை அமைதியாக இருந்ததால் யாருக்கும் இந்த விவரம் தெரியவில்லை. கீர்த்தனா, அழுததால் அவர் தனியாக இருந்த விவரம் தெரிந்து விட்டது. இனிமேல் இதுபோல தவறு செய்ய மாட்டேன்" என்று ஆர்.டி.ஓவிடம் கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து ஆர்.டி.ஓ விமல்ராஜ், இதுபோல இனிமேல் தவறு செய்தால் சமூகநலத்துறையிடம் கீர்த்தனா ஒப்படைக்கப்படுவார் என்று எச்சரித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், "இன்றையக் காலக்கட்டத்தில் பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அருணா, சமீபத்தில் தான் இந்த பகுதிக்கு வாடகைக்கு குடிவந்தார். வீட்டின் உரிமையாளர்கள் வயதானவர்கள். அக்கம் பக்கத்திலும் அவருக்கு பழக்கம் இல்லை. இதனால் யாரிடமும் உதவி கேட்காமல் குழந்தையை தனியாக விட்டு சென்று இருக்கிறார். வேலையா.... குழந்தையா என்ற இக்கட்டான நேரத்தில் வாழ்க்கையை நடத்த அருணா இந்த முடிவை எடுத்துள்ளார்" என்றனர்.

பெற்ற தாயே, குழந்தையை வீட்டில் அடைத்து வைத்து சென்ற சம்பவம் திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.