Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 7, 2016

'துப்பாக்கிக் குண்டுகள் தீர்வாகாது!’ - திருச்சி சிவாவின் காஷ்மீர் அனுபவம்


கொதிக்கும் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய 30 பேர் கொண்ட குழு கடந்த 3-ம் தேதி காஷ்மீர் சென்றது. இந்தக்குழு 3 மற்றும் 4-ம் தேதி அன்று காஷ்மீரில் பொதுமக்கள், வியாபாரிகள், தன்னார்வ அமைப்புகள், லோக்கல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்துப் பேசி இருக்கின்றனர். டெல்லி திரும்பிய இந்த குழுவினர் 7-ம் தேதி மீண்டும் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். இதனைத்தொடர்ந்து தங்கள் அறிக்கையை அரசிடம் அளிக்க உள்ளனர்.

அனைத்துக் கட்சிகளின் குழுவில் தி.மு.க-வின் சார்பில் மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவாவும் இடம் பெற்றிருந்தார். அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

"காஷ்மீர் இப்போது எப்படி இருக்கிறது?"


"ஊரடங்கு உத்தரவு சில இடங்களில் இருக்கிறது. கல்லெறி சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. காஷ்மீர், ஜம்மு, லடாக் மூன்று பகுதிகளைக் கொண்ட காஷ்மீரில் இப்போது காஷ்மீரில் மட்டும்தான் பிரச்னை. காஷ்மீரின் பிரச்னை மற்ற பகுதிகளுக்கும் பரவி ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

காஷ்மீரில், இதுவரை தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்துவார்கள். அவர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படைகள் பதிலடி கொடுக்கும். ஆனால், இந்த முறை மிகவும் வித்தியாசமான சூழல் அங்கு நிலவுகிறது. இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் கும்பலாக நின்று கொண்டு பாதுகாப்புப் படையினர் மீது கற்களால் எறிகின்றனர். பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது பெல்லட் குண்டுகளால் தாக்குதல் நடத்தியதாக மக்கள் பலர் குழுவினரிடம் தெரிவித்தனர்."

"அனைத்துக் கட்சிகளின் குழுவினரிடம் மக்கள் என்ன சொன்னார்கள்?"

"அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழு திறந்த மனதுடன், திறந்த புத்தகமாகத்தான் காஷ்மீருக்குச் சென்றது. எங்களைச் சந்தித்த அரசியல் கட்சிகளின் பிரநிதிகள், காஷ்மீர் பிரச்னைக்கு ஒவ்வொவருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா முதல் எல்லா அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வந்து எங்களைச் சந்தித்தனர். அவர்களுக்குத் தெரிந்த காரணங்களை, தீர்வாக உணரும் காரணங்களை எங்களிடம் எடுத்து வைத்தார்கள். சில ஐயப்பாடுகளை கேள்வி கேட்டுத் தெளிவு பெற்றோம். பல குழுக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கருத்துக்களைத் தெரிவித்தனர். வியாபாரிகள் எங்களிடம் பல்வேறு குறைகளைத் தெரிவித்தனர். 15 ஆயிரம் ரூபாய் வியாபாரம் நடந்துகொண்டு இருந்த கடைகளில் சில நூறுகள் மட்டுமே விற்பனை ஆகிறது என்று கூறினர். காஷ்மீரின் சூழல்களால் தற்போது அங்கு சுற்றுலாப்பயணிகளே வருவதில்லை. ஆள் நடமாட்டமே இல்லை. அமைதி திரும்ப வேண்டும் என்று மக்கள், வியாபாரிகள் கூறி உள்ளனர். இந்தியா உடன்தான் இருக்க விரும்புகின்றோம் என்று சொல்கின்றனர்."

"பிரிவினைவாத அமைப்பினர் சந்திக்க மறுத்து விட்டார்களே?"

"அனைத்துக் கட்சி குழுவினரை சந்திக்க ஹூரியத் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அழைப்பு அனுப்பப்பட்டது. அவர்கள் வரவில்லை. தனிநாடு கேட்பவர்கள், பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்களைச் சந்திக்க வரவில்லை. அதற்கான காரணத்தை குழுவைச் சேர்ந்தவர்களுடன் பேசி அதுகுறித்து மத்திய அரசுக்கு அறிக்கையாக அளிப்போம்."

"காஷ்மீர் பிரச்னை குறித்துத் தனிப்பட்ட வகையில் என்ன உணர்ந்திருக்கிறீர்கள்?"

"காஷ்மீர் பிரச்னை திடீரென இன்று உருவானதுஅல்ல. வரலாற்றுப் பிழைகள் இருக்கின்றன. முந்தையகாலத்தில் இருந்தே இருக்கின்றன. காஷ்மீர் அருகே பாகிஸ்தான் இருக்கிறது. சீனா இருக்கிறது. இந்த அண்டை நாடுகளின் தூண்டுதல்களுக்குப் பலியாகக்கூடிய வகையில் காஷ்மீர் மக்கள் இருக்கின்றனர். பாகிஸ்தான்தான் குறிப்பாக இந்த வேலையைச் செய்கிறது. காஷ்மீரில் வன்முறை ஏற்படும் போதெல்லாம் அந்தப் பிரச்னையில் மத்திய அரசும், மாநில அரசும் வேகவேகமாகத் தலையிடுகின்றனர். அப்போதைக்குத் தற்காலிகமாக ஒரு தீர்வை முன் வைக்கின்றனர். பிரச்னை முடிந்த உடன் தொடர் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கமால் விட்டு விடுகின்றனர். எதைச் செய்தாலும் அதைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்று காஷ்மீர் மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்கள் மனதில் சில ஆதங்கங்களை உணரும் போது ராணுவத்தின் மூலமும் துப்பாக்கிக் குண்டுகள் மூலமும் அதனைத் தீர்த்துவிட முடியாது. காஷ்மீர் வீதிகளில் ஆயுதம் தாங்கிய காவலர்கள், ஆள்நடமாட்டம் அற்ற வீதிகள், வெறிச்சோடிக் கிடைக்கும் கடைகள், கோபாமாகத் திரியும் இளைஞர்கள் என்ற நிலை மாறி பரபரப்பான வீதிகள், சுற்றுலாப்பயணிகள், அங்கிருக்கும் ஆண்களும், பெண்களும் கையில் குல்மோஹர் மலர்களோடு நடமாடும் சூழல் வர வேண்டும் என்பதே என் ஆசை."

"அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா உடனான சர்ச்சைகளுக்குப் பின்னர் இப்போது எப்படி உணர்கிறீர்கள்?"

"இப்போது நாம் பேசும் பிரச்னையோடு இது தொடர்புடையது அல்ல. இருந்தாலும் சொல்கின்றேன். இந்தப் பிரச்னை ஒரு கெட்ட கனவு. அதில் இருந்து நீண்டதூரம் வந்து விட்டேன். அப்போதே அவர் (சசிகலா புஷ்பா) இந்த விஷயத்துக்காக மன்னிப்புக்கேட்டு விட்டார். அத்தோடு இந்த விவகாரம் முடிந்துவிட்டது. இப்போது நாட்டில் நிறைய விஷயங்கள் பேசுவதற்கு இருக்கிறது. அதைப்பற்றி மட்டும் பேசுவோம்"

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.