Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 29, 2016

கலங்க வைக்கும் தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளை!



கல்வியும் சுகாதாரமும் மனிதனின் அடிப்படை உரிமை என்கிறோம். ஆனால்,  இந்த இரண்டிலும்தான் அதிக முறைகேடுகள் நடக்கின்றன. குறிப்பாக, சில தனியார்  மருத்துவமனைகளில் நடக்கும் கட்டணக் கொள்ளைகள் பற்றி நாம் கேள்விப்படும்  சம்பவங்கள் ஒவ்வொன்றும் திகீர் ரகம்…


சமீபத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்றை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் வாசகர் ஒருவர்... ‘‘என்னுடைய  மகள் 4 மாதக் கர்ப்பிணி. கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக  இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஒரு மருத்துவரிடம் சென்றோம். அவர். ‘உங்கள்  குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் இருக்க வாய்ப்பு உண்டு அதனால், Triple  screen test எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னார்.

ஏற்கனவே டவுன்  சிண்ட்ரோம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதனால், பதறிப் போய் அவர்  பரிந்துரைத்த ரத்தப் பரிசோதனை நிலையத்தில் 1,500 ரூபாய் கட்டணத்தில் டெஸ்ட்  எடுத்தோம். அங்கு பரிசோதனை செய்த பிறகு, ‘எதற்கும் ஒரு ஸ்கேன்  எடுத்துப் பாருங்கள்’ என்று சென்னையில் இருக்கும் பிரபல ஸ்கேன்  மையத்துக்குப் பரிந்துரைத்தார்கள்.

அடுத்த நாளே அங்கு சென்றோம். 4 மணி  நேரத்துக்கும் அதிகமாகக் காக்க வைத்து, ஸ்கேன் எடுத்தார்கள். ‘கவுன்சலிங்கில் விவரம் சொல்வார்கள்’ என்று அனுப்பி வைத்தார்கள். கவுன்சலிங் அறையில், ‘இன்னொரு ஸ்கேன் எடுத்தால்தான் உறுதியாகச் சொல்ல  முடியும். அதற்கு 19 ஆயிரம் செலவாகும்’ என்றார்கள். அதற்கும் ஒப்புக்கொண்டு  ஸ்கேன் எடுத்தோம். ‘ரிசல்ட் ஹைதராபாத் சென்று வர வேண்டும். உடனடியாக  ரிப்போர்ட் வேண்டும் என்றால் 23 ஆயிரத்து 500 ஆகும்’ என்றார்கள். மகளுக்கு  முதல் பிரசவம், சம்பந்தி வீட்டுக்கும் பதில் சொல்ல வேண்டிய நெருக்கடி என்று பல எண்ணங்கள் மனதில் ஓடிக் கொண்டிருந்ததால் சொன்ன தொகையைக் கொடுத்து  ரிப்போர்ட் வாங்கினோம்.

அதன்பிறகு, ‘குழந்தை நார்மல்தான்’ என்றார்கள். முதல் ஸ்கேன் ரிப்போர்ட்டையும் அப்போதுதான் கொடுத்தார்கள். தற்செயலாக,  இன்னொரு மருத்துவரிடம் இந்தச் சம்பவத்தைச் சொன்னோம். ‘

முதல்  ரிப்போர்ட்டிலேயே நார்மல் என்றுதானே இருக்கிறது? எதற்காக, இரண்டாவது  டெஸ்ட்?’ என்று கேட்டார். அதன்பிறகுதான் நாங்கள் ஏமாந்தது தெரிய  வந்தது. இதுபோல பரிசோதனை செய்யச் சொல்லிப் பணம் பிடுங்குவது பல இடங்களில்  நடக்கிறது என்றும் அந்த மருத்துவர் கூறினார். இதில் பணம் செலவானது  கூட கவலையில்லை. ஆனால், அதுவரை நாங்கள் அனுபவித்த மன உளைச்சல் கொஞ்ச  நஞ்சமல்ல.

முதல் குழந்தை, முதல் பிரசவம் என்பதால் என் மகளுக்கு எந்த அளவு  மன வேதனை இருந்திருக்கும் என்று நினைத்தாலே இன்னும் கண்ணீர் வருகிறது’’  என்றார்.

தேவையற்ற பரிசோதனைகள் பற்றியும், சிகிச்சை என்ற பெயரில் நடக்கும் கொள்ளைகள் பற்றியும் இதுபோல அதிகம் கேள்விப்படுகிறோம். இதற்கு என்ன காரணம்? என்ன தீர்வு ? நிபுணர்களின் கருத்துகள் அடுத்தடுத்த பக்கங்களில்…

அரசு மருத்துவமனைகள் நம்பகத்தன்மையை இழந்ததுதான் காரணம்! பொது மருத்துவர் மணிமேகலை ராம்குமார்

‘‘சேவையாக இருந்த மருத்துவம் எப்போது தொழில்மயமானதாக மாறியதோ, அப்போதே அது பணம் சம்பாதிப்பதற்கான இடமாக மாறிவிட்டது. கோடிக்கணக்கான ரூபாயை தனியார் மருத்துவமனைகள் முதலீடு செய்கின்றன. அதனால், செலவு செய்த பணத்தை எடுத்தாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு வந்துவிடுகிறது.

அதற்குப் பிறகு லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற அடுத்த கட்ட நெருக்கடியும் இருக்கிறது. இதனால்தான் சேவையாக நடக்க வேண்டிய மருத்துவம் இன்று இலக்கு நிர்ணயித்து செயல்படும் இண்டஸ்ட்ரியாக மாறியிருக்கிறது. லாபம் என்ற விஷயத்தை ஏற்றுக் கொள்ளலாம்தான். ஆனால்,‘கொள்ளை லாபம்’ என்று அளவு தாண்டுவதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

மருத்துவமும் மருத்துவக் கல்லூரிகளும் அரசு மயமாக இருந்தவரையில் இந்த அளவு மோசடிகள் நடக்கவில்லை. தனியார் மயமான பிறகுதான் இந்த ‘கொள்ளை லாபம்’ என்ற முறையே உருவானது. அதனால், மருத்துவம் என்பது மீண்டும் அரசு மயமாவதுதான் இதற்குத் தீர்வு. அரசு மருத்துவமனைகள் மக்களிடம் தங்கள் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதும் தனியார் மருத்துவமனைகளின் விஸ்வரூப வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகிவிட்டது.

கட்டுப் போட வேண்டும் என்றால், ‘அந்த ஆயின்மென்ட் இல்லை’ என்பார்கள். பரிசோதனை செய்ய வேண்டும் என்றால், ‘அந்த மெஷின் ரிப்பேர்’ என்பார்கள். போதுமான மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். மத்திய அரசு மருத்துவர்கள் தனியாக கிளினிக் நடத்தக் கூடாது. ஆனால், தமிழக மருத்துவர்களில் பலர் தனியாக கிளினிக் நடத்துவதால் மருத்துவமனைகளில் அவர்கள் இருக்கும் நேரமும் குறைகிறது.

இந்த நிலையை எல்லாம் மாற்ற சில அதிரடியான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களைப் பொறுத்தவரை 85 சதவிகித நிதி ஊதியத்துக்கும், மருத்துவமனைப் பராமரிப்புக்குமே செலவாகிறது.

மீதி 15 சதவிகிதம்தான் மருத்துவத்துக்கு செலவாகிறது என்று புள்ளிவிபரம் கூறுகிறது. அதனால் போதுமான நிதி ஒதுக்கி தரமான மருந்துகள், நவீன பரிசோதனைகள் என்று இன்னும் சிகிச்சையின் தரத்தை அரசாங்கம் மேம்படுத்த வேண்டும்.’’

தனியார் மருத்துவமனைகளை குற்றம் சொல்லாதீர்கள்! ரேடியாலஜிஸ்ட் அய்யப்பன்

‘‘தேவையில்லாத பரிசோதனைகளைச் செய்யச் சொல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு அடிக்கடி வருகிறது. இதுபோன்ற பரிசோதனைகள் செய்கிறவன் என்ற முறையில் மருத்துவமனை தரப்பில் இருக்கும் சில நியாயங்களைச் சொல்ல விரும்புகிறேன். ஏதோ ஒரு நோய் அபாயம் இருக்கிறது என்ற சந்தேகத்தில்தான் மருத்துவர்கள் பரிசோதனை செய்யச் சொல்கிறார்கள். பரிசோதனையின் முடிவில் பாதிப்பு இருக்கிறது என்று வந்துவிட்டால், மக்கள் ஒன்றும் சொல்வதில்லை.

ஆனால், ‘பாதிப்பு இல்லை… நார்மல்’ என்று ரிசல்ட் வந்துவிட்டால் மருத்துவமனையில் எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஒருவேளை நோயின் அபாயம் பற்றிச் சொல்லாமல் விட்டு, பாதிப்பு ஏற்பட்டுவிட்டால் அதன்பிறகு மருத்துவரையே வந்து கேள்வி கேட்பார்கள்.

‘ஏன் எங்களுக்கு முன்னரே சொல்லியிருந்தால் பரிசோதனை செய்திருப்போமே’என்பார்கள். இதனால் பல மருத்துவர்கள் பிரச்னைகளுக்கும் வழக்குகளுக்கும் கூட ஆளாகியிருக்கிறார்கள். சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளத்தான் பரிசோதனை. அவசியம் இல்லாமல் மருத்துவர்கள் பரிசோதனை செய்யச் சொல்வதில்லை.

அப்படி ஏதாவது சந்தேகம் இருந்தால் மருத்துவரிடமே விளக்கம் கேட்கலாம். ‘இந்த பரிசோதனை செய்துதான் ஆக வேண்டுமா, வேறு வழிகள் இருக்கிறதா, பாதிப்பு ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் என்ன, இதைவிட குறைந்த கட்டணம் கொண்ட பரிசோதனை இருக்கிறதா’ என்று நோயாளியோ, அவருடன் வந்திருக்கும் அட்டென்டரோ கேள்வி கேட்கலாம். அந்த உரிமை நோயாளியின் தரப்புக்கு உண்டு. மருத்துவர்களுக்கும் அந்த பதில்களைச் சொல்ல வேண்டிய கடமை உண்டு.

அப்படியும் மருத்துவர் மீதோ, மருத்துவமனையின் மீதோ சந்தேகம் வரும் பட்சத்தில் ‘செகண்ட் ஒப்பீனியன்’ என்று இன்னொரு மருத்துவமனையிலும் கேட்டுக் கொள்ளலாம். இப்போது மக்கள் நிறைய விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். எல்லா சந்தேகங்களுக்கும் இணையதளங்களைப் பார்க்கும் பழக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

அதனால் இப்படி எளிதாக எல்லாம் மக்களை ஏமாற்றிவிட முடியாது. சிகிச்சை என்ற பெயரில் கட்டணக் கொள்ளை ஒருசில இடங்களில் நடக்கலாம். அதற்காக, எல்லா தனியார் மருத்துவமனைகளையுமே குற்றம் சொல்வது நியாயம் இல்லை. ஒருவேளை, உண்மையிலேயே பணம் பிடுங்கும் நோக்கத்தோடு ஒரு தனியார் மருத்துவமனை செயல்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்பதில் சந்தேகம் இல்லை!’’

காப்பீட்டுத் திட்டங்களை கண்காணிக்க வேண்டும்! உணவியல் நிபுணர் அம்பிகா சேகர்

‘‘மருத்துவம் சார்ந்த துறையில் இருக்கும் நானே சமீபத்தில் இதுபோன்ற கசப்பான சம்பவத்தைச் சந்தித்தேன். என் அம்மாவையும் பறிகொடுத்து விட்டேன்...என் அம்மாவுக்கு கடந்த மாதம் வயிற்று வலி ஏற்பட்டது. ஓய்வூதியதாரர் என்பதால் அவருக்கு மருத்துவக் காப்பீடு உண்டு. இதனால், சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றிருந்தோம்.

உடனே அட்மிட் செய்ய வேண்டும் என்று வார்டில் சேர்த்தார்கள். சி.டி. ஸ்கேன் எடுத்தார்கள். Internal bleeding இருக்கிறது என்று 2 யூனிட் ரத்தம் வேண்டும் என்றார்கள். புரதம் குறைவாக இருக்கிறது என்று அல்புமின் ஏற்றினார்கள். பிறகு, நான் இன்வேஸிவ் வெண்டிலேட்டர் வைத்தார்கள். சில தினங்களிலேயே அவர்கள் செய்த ஒவ்வொரு வேலையும் பணம் கொள்ளையடிக்கும் முயற்சி என்பது அப்பட்டமாக புரிந்துவிட்டது.

ஏற்கனவே அம்மாவுக்கு பார்க்கின்ஸன் என்ற நரம்பியல் பாதிப்பு இருந்தது. சர்க்கரை நோய்க்குண்டான மருந்துகளையும் எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர் வழக்கமாக எடுத்துக் கொண்டிருந்த மருந்துகளைக் கொடுக்க விடவில்லை. அவருக்கு சரியான நேரத்தில் சாப்பாடுகூட கொடுக்கவிடவில்லை.

சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தியதாகவே தெரியவில்லை. அந்த வயிற்றுவலிக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவே இல்லை. ஒருவர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைக்காக வருகிறார் என்றால் எப்படியெல்லாம் அவரைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ, அந்த அளவுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் புரிந்தது. அதுவும் முதியோர் என்றால் அவர்களுக்கு வரப்பிரசாதம் போல…

கிட்டத்தட்ட 18 நாட்கள் கழித்து அவர்களின் அடாவடி தாங்க முடியாமல் வேறொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். முதலில் சேர்த்த இடத்தில் உருவாக்கிய சிக்கல்களை, புதிய மருத்துவமனையில் திடீரென்று அவர்களால் சமாளிக்க முடியவில்லை. அதனால், சில தினங்களிலேயே என்
அம்மாவை நாங்கள் இழக்க வேண்டியதாகிவிட்டது.

மருத்துவமனையில் இப்படியெல்லாம் மோசடிகள் நடக்கிறது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். காப்பீட்டுத் திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கொள்ளை அடிக்கும் மருத்துவமனைகள் பற்றிப் புகார் வந்தால், அவற்றை சரிபார்த்து இன்ஸ்யூரன்ஸ் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்...’’

பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் ! ராதாகிருஷ்ணன் (தமிழக அரசு சுகாதாரத் துறைச் செயலாளர்)

‘‘தேவையில்லாமல் பரிசோதனைகள் செய்யச் சொன்னாலோ, அதிகக்கட்டணம் வாங்கினாலோ அந்த மருத்துவமனையின் மீது தாராளமாகப் புகார் அளிக்கலாம். சென்னையில் ‘சுகாதாரத் துறை இயக்குநர், மருத்துவர் பணிகள், தேனாம்பேட்டை’ என்ற முகவரியில் புகார் அளிக்கலாம். மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் செயல்படும் ‘இணை இயக்குநர், மருத்துவ பணிகள்’ அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம்.

புகாருடன் தாங்கள் செலுத்திய கட்டணம் பற்றிய விவரங்கள், சோதனைகளின் சான்றிதழ்கள் போன்றவற்றையும் இணைக்க வேண்டும். புகார் மீதுள்ள உண்மை நிரூபணமானால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீதும், மருத்துவர் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் இன்னொரு முக்கியமான வேண்டுகோள் ஒன்றையும் வைக்கிறேன்...பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குப் போக வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், அரசு மருத்துவமனைகள் இன்று எவ்வளவோ நவீனமயமாகிவிட்டன.

தனியார் மருத்துவமனைகளுடன் போட்டி போடும் அளவு பரிசோதனைகளும் சிகிச்சைகளும் வந்துவிட்டன. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில்தான் அதிக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், மாவட்ட தலைமை மருத்துவமனைகளும் இருக்கின்றன.

43 பெரிய மருத்துவமனைகள், தாலுகா வாரியாக 302 மருத்துவமனைகள் இருக்கின்றன. இவற்றைத் தவிர்த்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கின்றன.
ஒருநாளில் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் மட்டும் 6 லட்சம் பேர் வருகிறார்கள். உள்நோயாளியாக 70 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய அரசு மருத்துவமனைகளின் மாற்றத்தால் ஒரு முறை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அதன்பிறகு தனியார் மருத்துவமனைகளுக்குப் போவதில்லை. இதைப் பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

எங்கள் குடும்பத்தினருக்கு உடல்நிலை சரியில்லை என்றால், அரசு மருத்துவமனைகளுக்குத்தான் செல்கிறார்கள். என்னுடைய அம்மா தொடர்ச்சியாகவே அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார். சுகாதாரத்துறை செயலாளர் என்பதற்காக தனி மருந்துகளோ, சிகிச்சைகளோ இல்லை என்பதையும் குறிப்பிடுகிறேன்.

ஆனாலும், மக்களிடம் அரசு மருத்துவமனை பற்றி தவறான அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கிறது. இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் கிடைத்தும் அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது வருத்தம் தருகிறது. இந்த எண்ணத்தை மக்களிடம் மாற்ற வேண்டும் என்று முயற்சித்து வருகிறோம். தனியார் மருத்துவமனைகளைப் போல அரசு மருத்துவமனைகளிலும் தவறுகள் நடந்தால் தயங்காமல் புகார் அளிக்கலாம்...’’

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.