உலகில் 10ல் ஒருவருக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதாவது, 66 கோடியே 30 லட்சம் பேருக்கு! இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னைகளில் தண்ணீருக்குதான் முதல் இடம். தொழில்நுட்பம் அதிநவீனமாகிவிட்ட இன்றைய காலகட்டத்திலும் மூன்றில் ஒரு பள்ளிக்கூடத்தில் கூட சுத்தமான நீரும் கழிவறை வசதியும் இல்லை. தண்ணீரை தங்கத்தைப்போல கையாளவேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம். பாலுக்கு நிகராக தண்ணீரையும் விலை கொடுத்து வாங்க ஆரம்பித்திருக்கிறோம்.
நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானவை உணவும் தண்ணீரும். உணவு இல்லாமல் ஒரு மனிதன் ஐந்து நாட்கள் வரை வாழலாம். ஆனால், தண்ணீர் இல்லாமல் ஒரு நாள்கூட வாழ முடியாது. விரதம் இருப்பவர்கள்கூட சாப்பிட மாட்டார்களே தவிர, நீர் அருந்துவார்கள். நம் உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. ஒருவரின் உடல் எடையில் 70 சதவிகிதம் தண்ணீர்தான்.
தண்ணீர், உடல் இயக்கம் சீராக இருக்க உதவுகிறது; உடலின் தட்பவெப்ப நிலையைப் பராமரிக்கிறது. நாம் ஒவ்வொருவரும் உடலுக்குத் தேவையான தண்ணீரை எப்படிப் பயன்படுத்துகிறோம், அதாவது, எவ்வளவு அருந்துகிறோம், எவ்வளவு வெளியேற்றுகிறோம் என்பது மிக முக்கியமானது.
ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது 1,500 மி.லி நீர் அருந்த வேண்டும். நாம் சாப்பிடும் உணவில் இருந்து (சாம்பார், ரசம், மோர்) நீராக 1,000 மி.லி எடுத்துக்கொள்ள வேண்டும். செரிமான மண்டலம் உணவைச் செரித்து கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து எனப் பிரித்துக் கொடுக்கும்போது, (கார்போஹைட்ரேட் மெட்டபாலிசம்) கொஞ்சம் தண்ணீர் (சுமார் 300 மி.லி.) வெளியேறி, உடலுக்குக் கிடைக்கும். ஆக, மொத்தமாக நம் உடலுக்கு 2,800 மி.லி தண்ணீர் அவசியத் தேவை.
எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ, அந்த அளவுக்கு அது வெளியேறவும் வேண்டும். குறைவாக வெளியேறினாலோ, அதிகமாக வெளியேறினாலோ பிரச்னைதான். சாதாரண தட்பவெப்ப நிலையில் நாம் குடிக்கிற 1,500 மி.லி தண்ணீரையும் சிறுநீராக வெளியேறிவிடும். 800 மி.லி நீரை வியர்வை மூலமாக தோல் வெளியேற்ற வேண்டும். இப்போது அந்த அளவுக்கு யாருக்குமே வியர்ப்பது இல்லை என்பதால்தான், உடலுக்கு பல பிரச்னைகள் வருகின்றன. நுரையீரலிலும் தண்ணீர் இருக்கும். நாம் விடும் மூச்சு மூலமாக அந்தத் தண்ணீர் நீராவியாக வெளியேறும். அந்த வகையில் தினமும் 400 மி.லி நீர் வெளியேற வேண்டும். மலத்தின் மூலமாக ஒரு 100 மி.லி வெளியேறும். ஆக மொத்தம், 2,800 மி.லி தண்ணீர் நம் உடலில் இருந்து வெளியே போக வேண்டும்.
வெயில் காலத்தில் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். அது சிறுநீராக 1,500-லிருந்து 1,700 மி.லி வரை வெளியேற வேண்டும். வெயில் காலத்தில் நிறையத் தண்ணீர் குடிக்காவிட்டால், சிறுநீரகத்தில் கல் உருவாகிவிடும் வாய்ப்பு அதிகம். மூச்சு வழியாக, வியர்வையாக, மலம் மூலமாக ஒரு நாளைக்கு மொத்தமாக 3,300 மி.லியில் இருந்து 7,300 மி.லி வரை நீர் வெளியேற வேண்டும்.
தண்ணீர் குடிப்பது எப்படி?
காலையில் எழுந்ததும் இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். அது சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது. வயிறு முட்ட இரண்டு, மூன்று சொம்பு தண்ணீர் எல்லாம் குடிக்கவேண்டிய அவசியம் இல்லை.
சாப்பிடுவதற்கு முன்னர் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும்போது தேவைப்பட்டால் சிறிது அருந்தலாம். சாப்பிட்ட பிறகு கொஞ்சமாகத் தண்ணீர் குடிக்கலாம்.
இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். அதைத் தண்ணீராகத்தான் அருந்த வேண்டும் என்பது இல்லை. ஜூஸ் மற்றும் ஆரோக்கியமான பானங்களாகவும் அருந்தலாம்.
குழந்தைகளுக்கு ஆறு மாதம் வரைக்கும் தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும். ஒரு வயது நிரம்பிய பின்னர், தினமும் 1 லிட்டர் வரை குழந்தைகள் தண்ணீரை அருந்தலாம்.
தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த...
1 சாப்பிடும்போது அல்லது சாப்பிட்டு முடித்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.
2 எங்கே சென்றாலும் கையில் ஒரு வாட்டர் பாட்டிலை எடுத்துச்செல்லுங்கள். அது ஸ்டீல், தாமிர பாட்டிலாக இருப்பது நல்லது. பிளாஸ்டிக் பாட்டிலைத் தவிர்க்க வேண்டும்.
3 வேலைசெய்யும் இடத்தில், உங்கள் மேசைக்கு மேல் வாட்டர் பாட்டிலை வைத்திருக்க வேண்டும்.
4 நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால், முதலில் தண்ணீர் அருந்துங்கள்.
5 குளிர்பானம், ஃபிரெஷ் ஜூஸ், காபி, டீ-க்கு பதில் தண்ணீர் அருந்தும் பழக்கத்தைக் கடைப்பிடியுங்கள்.
6 தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என குறித்துவைத்தாலே போதுமான அளவுக்குத் தண்ணீர் அருந்தும் பழக்கம் தானாக வந்துவிடும்.
கோடைகாலத்தில், நாம் நிறையச் சாப்பிட மாட்டோம்; திரவங்களைத்தான் அதிகம் உட்கொள்வோம். தண்ணீர், ஜூஸ், மோர், இளநீர், சோடா குடிப்போம். இந்த நீர் வடிவில் எடுக்கும் அளவு ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து 2,000 மி.லி-யில் இருந்து 5,000 மி.லி வரை இருக்கும்.
வெயில் காலத்தில், ஒவ்வொருவரும் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப 3,300 மி.லி-யில் இருந்து 7,200 மி.லி வரை தண்ணீர் அருந்த வேண்டும். வயலில் வேலை செய்பவர்கள், சாலைப் பணியாளர்கள் என வெயிலில் உழைப்பவர்கள் சாதாரண தினங்களிலேயே நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
செரிமானத்துக்கு, ஊட்டச்சத்தை கிரகிப்பதற்கு, சீரான ரத்த ஓட்டத்துக்கு, எச்சில் உள்ளிட்ட செரிமான திரவங்கள் சுரப்பதற்கு, ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் கொண்டு செல்வதற்கு, உடலின் தட்பவெப்பநிலையை பராமரிப்பதற்கு என எல்லாவற்றுக்கும் காரணமாக தண்ணீர் இருக்கிறது.
பிட்யூட்டரி சுரப்பியில் இருந்துவரும் சிக்னல், `சிறுநீரகத்தைத் தூண்டி உடலில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. அதை வெளியேற்று’ என சொல்லும். தண்ணீர் குறைவாக இருந்தால், `போதுமான அளவு தண்ணீர் இல்லை. எனவே, வெளியேற்றுவதை நிறுத்து’ என உத்தரவிடும். உடனே, மூளையில் இருந்து தாகமாக இருப்பதற்கான சிக்னல் வெளிப்படும். உடனே, தண்ணீரோ, பழச்சாறோ அருந்த வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.