September 19, 2016
ராம்குமாரின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை தேவை: அரசியல் தலைவர்கள் கோரிக்கை
ராம்குமாரின் மர்ம மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மு.க.ஸ்டாலின்:
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் வயரைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் எனப் புழல் சிறை நிர்வாகம் தெரிவித்திருப்பது ஏற்கக் கூடியதாகவும், நம்பும்படியாகவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
ராம்குமார் தற்கொலை அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் தருவதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், சிறையில் ராம்குமாரின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்பது பல சந்தேகங்களை எழுப்புவதாகக் கூறியுள்ளார்.
எனவே, ராம்குமார் தற்கொலை குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், நீதி விசாரணை நடத்த வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
ஜி.ராமகிருஷ்ணன்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் தற்கொலை செய்து கொள்ளும் வரை, சிறை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருந்தது எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
ராம்குமாருக்கு சிறை நிர்வாகம் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லையா என சந்தேகம் எழுப்பியுள்ள ஜி.ராமகிருஷ்ணன், ராம்குமார் மரணம் குறித்து உயர்மட்ட நீதி விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
ஜி.கே.வாசன் :
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராம்குமார் மரணம், சிறைச் சாலையில் கைதிகளைக் கண்காணிக்க வேண்டிய காவலர்களின் அலட்சியப் போக்கையும், போதிய பாதுகாப்பற்ற தன்மையையும் எடுத்துக் காட்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நடந்து வந்த நிலையில் ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராம்குமார் மரணம் குறித்த உண்மை நிலையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை என்றும் ஜி.கே. வாசன் வலியுறுத்தி உள்ளார்.
திருமாவளவன்:
ராம்குமாரின் சாவில் மர்மம் இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நீதித்துறை மற்றும் சிறைத்துறையின் கவனக்குறைவாலேயே இந்த மரணம் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
ஜவாஹிருல்லா:
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ராம்குமாரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால் ராம்குமார் மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ராம்குமார் மரணத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டுமென கூறியுள்ள ஜவாஹிருல்லா, இது தொடர்பாக உயர் நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளார்.
ராம்குமாரின் மர்ம மரணம் குறித்து உரிய விசாரணை தேவை: அரசியல் தலைவர்கள் கோரிக்கை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
September 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.