Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 30, 2016

மீண்டும் ஃபிளிப்கார்ட்டின் ‘தி பிக் பில்லியன் டேஸ்’..! சொதப்புமா... சொல்லி அடிக்குமா? #bigbillionday


தள்ளுபடி விற்பனை என்ற பெயரில் ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்கள் செய்யும் அலப்பறை சொல்லி மாளாது. இந்த முறையும் விழாக்காலத்தை முன்னிட்டு இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃபிளிப்கார்ட் 'தி பிக் பில்லியன் டேஸ்' என்ற பெயரில்  5 நாள் புதிய தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.

கவர்ச்சி சலுகைகள்! 

இந்த முறை 2016, அக்டோபர் 2 தொடங்கி 6 வரை ஃப்ளிப்கார்ட்டின் ‘தி பிக் பில்லியன் டேஸ்’ விற்பனை நடைபெறுகிறது. ஏராளமான பிரிவுகளில், குறைந்த விலையில் அதிகமான பொருட்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு மகத்தான வாய்ப்பு கிடைக்கும்; ஃபேஷன் பிராண்ட்கள் தொடங்கி சமீபத்திய ஸ்மார்ட்போன்கள், மின்னணு சாதனங்கள், டிவி, வீட்டு அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை இந்த பிக் பில்லியன் விற்பனையில், கவர்ச்சியான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வாங்கி மகிழலாம் என ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்! 

ஃபிளிப்கார்ட் கடந்த 2014ம் ஆண்டு 'தி பிக் பில்லியன் டேஸ்' என்ற மாபெரும் தள்ளுபடி அளிப்பதாக அதிரடியான விளம்பரங்கள் செய்தது. இந்த அறிவிப்பால் இணையவாசிகள், எதிர்பார்ப்புடன் அன்று காலை முதலே ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் பொருட்களை வாங்க காத்திருந்தனர் . ஒரே சமயத்தில் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் ஃபிளிப்கார்ட் தளம் முடங்கியது. பொருட்களை தேர்வு செய்த சிலருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. பொருட்களுக்கான டெலிவரி சேவை உங்கள் பகுதிக்கு இல்லை, விற்று தீர்ந்துவிட்டது என பலருக்கும் ஏமாற்றமான பதில்களே கிடைத்தன. இதனால் ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் ஃபிளிப்கார்ட் நிறுவனம் முறையற்ற ரீதியில் விளம்பரம் செய்து ஏமாற்றியதாக மத்திய அரசிடமும் புகார்களை அளித்தனர்.

மன்னிப்பு கோருகிறோம்! 

'தி பிக் பில்லியன் டேஸ்' முடிவில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்ததால் ஃபிளிப்கார்ட் நிறுவனர்கள் தங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்தனர். அந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் இது தொடர்பாக கூறும்போது, "எங்கள் நிறுவனத்தின் அறிவிப்பால், நிஜமாகவே அந்த தினம் பிக் பில்லியன் டேவாக இருந்தது. ஆனால் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த முடியாதது வருத்தம் அளிக்கிறது. வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்காததும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்கும் மனதார மன்னிப்பு கோருகிறோம்" என்றனர்.

மூன்றாவது எடிஷன்! 

இந்த நிலையில் இந்த ஆண்டும் 'தி பிக் பில்லியன் டேஸ்' என்ற பெயரில் இந்தியாவின் மிகப் பெரிய ஷாப்பிங் திருவிழாவாக ஃபிளிப்கார்ட் கொண்டாட உள்ளது. இது இந்த நிறுவனத்தின் மூன்றாவது எடிஷன் ஆகும்.  முந்தைய தி பிக் பில்லியன் டேஸ் விற்பனையைப்போல இந்த முறையும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் விற்பனையில் சொதப்புமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.





No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.