காமராஜர் சொன்னது போன்று அ.தி.மு.க., தி.மு.க. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதற்கு சான்றாகவே இந்த சட்டசபை அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக இவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த தி.மு.க.வினரை அவைக்காவலர்களை வைத்து கூண்டோடு வெளியேற்றியதையும், மேலும் அவர்களை ஒரு வார காலத்திற்கு இடைநீக்கம் செய்து அறிவித்து இருப்பதும் வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிய கதையையே நினைவுபடுத்தி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தே.மு.தி.க. தினந்தோறும் மக்கள் பிரச்னைகளையும், தொகுதி பிரச்னைகளையும் பேச முற்பட்டபோதெல்லாம் இது போன்ற முறையற்ற நிகழ்வுகளையே அ.தி.மு.க. அரசு அரங்கேற்றியது.
அவையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை முற்றிலும் செயல்படவிடாமல் தடுத்து, அரசுக்கு எதிராக யாரும் பேசிவிடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களின் மைக்குகளை செயல்படவிடாமல் செய்வதும், அவைக்காவலர்களை வைத்து வெளியேற்றுவதும், நீண்ட நாட்களுக்கு இடைநீக்கம் செய்வதும் என்று சட்டமன்ற மரபுகளை கேள்விக்குறியாக்கும் அளவுக்கு செயல்பட்டனர். நியாயத்தை கேட்ட தே.மு.தி.க.வினரின் உண்மை நிலையை மக்களிடையே கொண்டு செல்லவிடாமல் பல்வேறு வகையிலும் தடுத்தனர். அதனால் தான் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது அவசியம் என்று வலியுறுத்தி பல தடவை அரசிடம் கேட்டும் பலனில்லாமல் போனது. நேரடி ஒளிபரப்பு செய்ய பல கோடி ரூபாய் செலவாகும் என்று காதில் பூ சுற்றுவதை போல சாக்குப்போக்கு சொல்லி நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை.
தே.மு.தி.க. கடந்த 5 ஆண்டுகளில் பட்ட கஷ்டத்தின் தொடக்கமாக தி.மு.க.வின் இன்றைய நிகழ்வு ஏற்பட்டுள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. இவர்கள் இருவரும் மாறி, மாறி இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தி தமிழக சட்டசபையின் கலாசாரத்தை மாற்றிவிட்டார்கள். மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் இந்த சட்டசபையில், மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், இவர்கள் இரண்டு பேர்களுக்கும் (தி.மு.க., அ.தி.மு.க.) இடையே நடக்கும் போர்க்களமாகவே இந்த சபையை மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
காமராஜர் சொன்னது போன்று இந்த (அதி.மு.க., தி.மு.க.) 2 கட்சிகளுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதற்கு சான்றாகவே இந்த சட்டசபை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைகள் தமிழகத்தில் முற்றிலும் மாற, இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக புதிய ஆட்சி வரும்போது தான் இது போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்" என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.