August 25, 2016
நீர் மூழ்கி கப்பல் ரகசியம் கசிந்தது எப்படி: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
நீர் மூழ்கி கப்பல் ரகசியம் வெளியானதில் முன்னாள் பிரான்ஸ் கடற்படை அதிகாரிக்கு தொடர்பு இருக்கலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ராணுவத்துக்காக பிரான்ஸ் நாட்டின் டிசிஎன்எஸ் என்ற கப்பல் கட்டும் நிறுவனத்துடன் தொழில் நுட்ப ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 3.55 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.23,562 கோடி) மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, இந்நிறுவனம் இந்தியாவுக்கென்றே பிரத்தியேகமான தொழில்நுட்பத்துடன், பல்வேறு மேம்பட்ட வசதிகளை இணைத்து ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பலை வடிவமைத்துள்ளது.
இந்த கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்திய கடற்படையில் மிகவும் வலிமையான அதி நவீன நீர்மூழ்கி கப்பலாக இது இருக்கும் என சொல்லப்பட்டது. ஐ.என். எஸ். கேல்வரி என்று அழைக்கப்படும் முதல் நீர்மூழ்கி கப்பல், கடந்த மே மாதம் கடலில் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இந்தக் கப்பல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட உள்ளது. மீதமுள்ள 5 நீர்மூழ்கி கப்பல்கள் கட்டும் பணி மும்பையில் உள்ள ‘மசாகான் டாக் லிமிடெட்’ நிறுவனத்தில் தொடர்ந்து நடக்கிறது. இதற்கான வடிவமைப்பு, தொழில்நுட்பங்களை பிரான்சின் டிசிஎன்எஸ் நிறுவனம் அளித்து வருகிறது.
இந்த சூழலில் இந்த கப்பல் குறித்த அனைத்து ரகசியங்களும் தற்போது வெளியாகியுள்ளன. தி ஆஸ்திரேலியன் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில் இந்த கப்பல் குறித்த 22400 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் கசிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவற்றில் 4457 பக்கங்களில் கப்பல் நீருக்கு அடியில் இருக்கும் போது செயல்படும் சென்சார் பற்றிய விவரங்களும், 4209 பக்கங்களில் நீருக்கு வெளியில் செயல்படும் போது சென்சார் செயல்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 4,301 பக்கங்களில் போர் யுக்திகள் குறித்தும், 6,841 பக்கங்களில் தொலை தொடர்புகள் குறித்தும், 2,138 பக்கங்களில் நேவிகேஷன் கட்டமைப்பு குறித்தும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
ரகசிய தகவல்கள் வெளியே கசிந்தது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளியான ஆவணங்களின் மதிப்பு சுமார் ரூ.23 ஆயிரம் கோடி மதிப்புடையவை என்று சொல்லப்படுகிறது. இந்தியாவுடன் இணைந்து டிசிஎன்எஸ் என்ற நிறுவனம் கப்பலின் தகவல்களை தொகுக்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. தற்போது இதன் மூலமாகவே தகவல் கசிந்திருக்க வாய்ப்புள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் கருதுகின்றனர். இதுகுறித்து பிரானஸ் அதிகாரிகள் கூறுகையில், இது மிகவும் தீவிரமான விஷயமாகும். இதுகுறித்து ராணுவ பாதுகாப்புதுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.
தற்போது இந்த விவகாரத்தில் தகவல் கசிந்துள்ளதற்கு பின்னணியில் பிரான்ஸ் கடற்படை அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என தி ஆஸ்திரேலியன் என்ற பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது. அப்படி செய்தவர் அந்த நேரத்தில் டிசிஎன்எஸ் நிறுவனத்தின் சப் கான்ட்ராக்டராக இருந்துள்ளார் என்று ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆனால் தொடக்கத்தில் இந்திய தரப்பில் இருந்துதான் தகவல்கள் கசிந்திருக்கலாம் என பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தகவல்கள் அனைத்தும் பிரான்ஸ் நாட்டின் டிசிஎன்எஸ் நிறுவனத்தால் உள்ளீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மனோகர் பரிக்கர் கூறுகையில், முதலில், இந்த ஆவணங்கள் கப்பலுடையதுதானா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியது முதல் நடவடிக்கை ஆகும். எனினும், 100 சதவீத விபரங்கள் கசியவில்லை. கப்பலின் எந்த விஷயங்கள் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளது என்பதை ஆய்வு செய்யுமாறு கடற்படை தளபதி சுனில் லம்பாவுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த ஆவணங்கள் இந்தியாவில் இருந்து கசிந்ததாக தெரியவில்லை. கம்ப்யூட்டர்களில் இருந்து ஹேக்கிங் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறோம். இதை நாங்கள் விரைவில் கண்டறிவோம் என்றார். அதே நேரத்தில் தகவல் கசிந்துள்ளது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும். இந்த விவகாரத்தில் விசாரணைக்கு இந்திய அரசுடன் ஒத்துழைப்பு அளிப்போம் என பிரான்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் தூதர் அலெக்சாண்டேரா ஜிக்லெர் பெங்களூருவில் கூறுகையில், ஸ்கார்பின் ஆவண கசிவு விவகாரம் இந்திய ராணுவத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது மிகவும் கவலை அளிக்கும் விஷயமாகும். தற்போது இந்த விவகாரம் குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர் என்றார்.
இந்நிலையில் நீர்மூழ்கிக் கப்பல் ரகசியங்கள் கசிந்தது குறித்து உயர்மட்ட அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.அந்தோணி வலியுறுத்தியுள்ளார். அதே நேரத்தில் பாதுகாப்பு விவகாரத்தில் மத்தியஅரசு மெத்தனமாக இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பலின் ஆவணங்கள் கசிந்துள்ளதன் மூலம் இந்திய தேசத்தின் பாதுகாப்பு கொள்கை சமரசம் செய்யப்ட்டுள்ளதையே காட்டுகிறது.
பாதுகாப்பு தணிக்கை குறித்து முழுமையான ஆய்வு நடத்தப்பட வேண்டும். குறிப்பாக மும்பையில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனமான மஸ்கான் டாக்ஸ் லிட் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பாதுகாப்பு தணிக்கை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் இந்திய கடற்படையின் பாதுகாப்பையே கேள்விக்குரியதாக மாற்றியுள்ளது. இந்த நடவடிக்கையானது மற்ற நீர்மூழ்கி தயாரிப்புகளின் பாதுகாப்பு அம்சங்களையும் பாதிக்கக் கூடியது. மோடி, பரிக்கர், கடற்படை ஆகியவை பொறுப்பு ஏற்பதற்கு பதிலாக இதில் கூட்டு சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர். பரிக்கர் தொடர்ந்து முரண்பாடாக பேசி வருகிறார் என்று தாக்கியுள்ளார்.
நீர் மூழ்கி கப்பல் ரகசியம் கசிந்தது எப்படி: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
Reviewed by மறத்தமிழன்
on
August 25, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
August 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.