Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 31, 2016

காதலிக்க மறுத்தால் கொலை... கொடூர காதலர்கள்.. தமிழகத்தில் தொடரும் கோரக் கொலைகள்!



காதலிக்க மறுத்த காரணத்தால் ஒரு தலைக்காதலர்கள் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் நிலை அதிகரித்து வருகிறது. நுங்கம்பாக்கம் சுவாதி, விழுப்புரம் நவீனா போல தற்போது மானாமதுரை சோனாலியும் ஒருதலைக்காதல் விவகாரத்தில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்
 காதலிக்க மறுத்த காரணத்தால் கல்லூரிக்குள் புகுந்து மாணவி சோனாலியை முன்னாள் மாணவர் உதயகுமார் என்பவர் கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார்.
தன்னை காதலிக்க மறுத்தால் இதுதான் கதி என்று எச்சரிப்பது போல நடந்தேறியுள்ளது இந்த சம்பவம்.

சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த ஜூன் 24ம் தேதியன்று பணிக்கு செல்வதற்காக காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தார். ரயிலுக்காக காத்திருந்த சுவாதியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிவிட்டார் மர்மநபர்.
ஒரு தலை காதலால் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகப்பட்ட போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் ஜூலை 1ம் தேதி செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கணபதியேந்தலைச் சேர்ந்தவர் கார்த்திக், இவரது உறவினர் ஜெயாவின் மகள் காளீஸ்வரி 6ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியை பள்ளியில் இருந்து அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இந்த சம்பவம் ஜூலை மாதம் நிகழ்ந்தேறியது.
12 ஆம் வகுப்பு மாணவி நவீனாவுக்கு விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா காலனியைச் சேர்ந்த செந்தில் என்ற இளைஞர் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். நவீனாவின் வீட்டிற்கு அவரது பெற்றோர் இல்லாத நேரத்தில் சென்ற செந்தில், தன்னை காதலிக்க வேண்டும் என்று நவீனாவை மிரட்டியுள்ளார்.
செந்திலின் காதலை நவீனா ஏற்க மறுத்துவிட்ட நிலையில், தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு, மாணவி நவீனாவைக் கட்டிப்பிடித்துள்ளார். இதில் தீக்குளித்த செந்தில் உயிரிழந்து விட்ட நிலையில், ஒரு பாவமும் அறியாத மாணவி நவீனாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொடூர கொலை சம்பவமும் கடந்த மாதம் நடந்தேறியது.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை சம்பவங்கள் இன்னும் மனதை விட்டு அகலாத நிலையில் கரூரில் இதே போன்ற பயங்கர சம்பவம் நடந்து இருப்பது தமிழகத்தில் மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் பொறியியல் கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் சோனாலி, 20 விடுதியில் தங்கி 3ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலையில் கல்லூரிக்கு சென்றார். வகுப்பறையில் பேராசிரியர் சதீஷ் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். காலை 10.10 மணி அளவில் அங்கு வந்த மாணவர் ஒருவர் கையில் கட்டையுடன் வகுப்பறைக்குள் புகுந்தார். மாணவி சோனாலி அருகே சென்றதும் அந்த கட்டையால் சோனாலியின் தலைப்பகுதியில் சரமாரியாக அடித்தார். இதில் சோனாலி தலைசிதறி ரத்தவெள்ளத்தில் வகுப்பறைக்குள் மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்த பேராசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பின்னர் பேராசிரியர் சதீஷ் சுதாரித்துக் கொண்டு மாணவி சோனாலியை காப்பாற்ற அங்கு ஓடோடி சென்றார். சோனாலியை தாக்கிய அந்த மாணவரை தடுத்தார்.
கொலை வெறியுடன் நின்று கொண்டு இருந்த அந்த மாணவன் பேராசிரியர் சதீசையும் கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் பேராசிரியரும் மயங்கி விழுந்தார்.
தகவல் அறிந்ததும் கல்லூரி நிர்வாகத்தினரும் மற்ற மாணவ, மாணவிகளும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கு மயங்கி கிடந்த மாணவி சோனாலி, பேராசிரியர் சதீஷ் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது மாணவியின் நிலைமை கவலைக்கிடமாக மாறியதை தொடர்ந்து மாணவி சோனாலியை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மாணவி சோனாலி மாலை சுமார் 4 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்தினரிடமும், மாணவ, மாணவிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
கொலை செய்த மாணவனின் பெயர் உதயகுமார் என்பதாகும். ராமநாதபுரம் மாவட்டம் வெங்கனூரைச் சேர்ந்தவர் பெரியசாமி என்பவரின மகனாவார். இவர் சரியாக படிக்காமலும் சரிவர கல்லூரிக்கு வருவது இல்லையாம். இதனால் கல்லூரி நிர்வாகம் உதயகுமாரை கல்லூரியில் இருந்து நீக்கி வைத்திருந்தது.
மாணவர் உதயகுமார் சோனாலியை ஒரு தலையாய் காதலித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. பல முறை தனது காதலை சோனாலியிடம் தெரிவித்ததாகவும் அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததாகவும் அதனால் ஆத்திரம் அடைந்த உதயகுமார் மாணவியை கல்லூரிக்குள் புகுந்தேஆத்திரம் தீர கட்டையால் அடித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட அந்த மாணவர், தனக்கு முன்பு வழங்கப்பட்ட சீருடையை அணிந்து கொண்டு சக மாணவர்களோடு கலந்து கல்லூரிக்கு வந்து உள்ளார். சோனாலி இருந்த வகுப்பறையை தெரிந்து கொண்டு அவரை அடித்துக் கொன்று உள்ளார்.
இதையடுத்து போலீசார் உதயகுமார் பயன்படுத்திய கட்டையை கைப்பற்றினர். இது குறித்து கரூர் டவுன் போலீசார் உதயகுமார் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய உதயகுமாரை போலீசார் தேடி வந்தனர். பதுங்கியிருந்த உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பட்டப்பகலில் கல்லூரிக்குள் நடந்த இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தினரிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து மாணவியின் உறவினர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோனாலியின் அப்பா இறந்து 3 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் சோனாலியையும் கொன்று விட்டனர். சோனாலியை வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியர்கள் இருக்கும்போது மாணவன் வந்து தாக்கியிருக்கிறான். தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வன்கொடுமைகள் நடைபெறுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் அச்சத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் காதலிக்க மறுத்த பெண்களின் மீது ஆசிட் வீசப்பட்டது. இப்போது அரிவாளால் கழுத்தை அறுத்தும், தீவைத்து எரித்தும் கட்டையால் அடித்து கொலை செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.