Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2016

சொகுசு வாழ்க்கை வாழ தவறான பாதை தேர்வு : இளம் குற்றவாளிகளின் கூடாரமாகும் சென்னை


சென்னையில் கடந்த 2 நாட்களில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 வாலிபர்களும், கத்தியுடன் திரிந்ததாக 6 கல்லூரி மாணவர்களும், தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குண்டர் சட்டத்தில் 5 வாலிபர்களும் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   சென்னையில் செயின்  பறிப்பு, திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள்  நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இவற்றை தடுக்க போலீசார் ரோந்து பணி,  முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள்  மேற்கொண்டாலும், குற்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. சமீப காலமாக மேற்கண்ட குற்ற செயல்களில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பலர் கல்லூரி  மற்றும் பள்ளி மாணவர்களாக இருக்கின்றனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பழைய குற்றவாளிகளை காட்டிலும், இளம் குற்றவாளிகளே தற்போது அதிகளவில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.

ரவுடிகள், பழைய குற்றவாளிகளை பிடிக்க ஆர்வம் காட்டும் போலீசார், இளம் குற்றவாளிகள் உருவாகாமல் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், இளம் குற்றவாளிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.தண்டயார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர்  விஜயலட்சுமி (45). இவர், கடந்த சில தினங்களுக்கு முன் வண்ணாரப்பேட்டை  அவதான ராமசாமி தெருவில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த  2 பேர், விஜயலட்சுமி அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயன்றனர். ஆனால்  செயினை விடாமல் பிடித்துக்கொண்டு அவர் கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு  அப்பகுதியினர் திரண்டுவந்து, மர்ம நபர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர்  அவர்களை தண்டையார்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், எண்ணூரை சேர்ந்த அரவிந்த் (20), டில்லிபாபு  (20) என தெரிந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்படி அவர்களது கூட்டளி புது  வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சதீஷ்பாபு (24) என்பவரை கைது செய்தனர். இவர்கள் மயிலாப்பூர், அடையாறு, கோபாலபுரம் உள்பட பல  பகுதிகளில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.  இவர்களிடம் இருந்து 3 பட்டா கத்தி, வழிப்பறி செய்த 15 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

சென்னையில் சமீப காலமாக வழிப்பறி வழக்கில் கைதாவோர் 20 வயதில் இருந்து 35 வயதுக்குள் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுஒருபுறம் இருக்க சென்னையில் கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் சம்பவம் நடந்து வருகிறது. இதனை தடுக்க  போலீசார், கல்லூரி நிர்வாகம் மற்றும் பெற்றோர் கொண்ட கூட்டுக்குழு அமைத்தனர். இதன்பிறகு கல்லூரி மாணவர்கள் இடையிலான மோதல் ஓரளவு குறைந்தது. இந்நிலையில் நேற்று காலை புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி பஸ் நிலையத்தில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்தனர்.

 இதை பார்த்த பொதுமக்கள் புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு கத்தியுடன் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில், எண்ணூரை சேர்ந்த வினோத், சந்தோஷ், விஜய், புருஷோத்தமன், லோகேஷ், கணேஷ் என தெரிந்தது. அவர்களிடம் இருந்து 3 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கத்தியுடன் எதற்காக சுற்றினார்கள் என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களை தடுக்க, தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு  வந்தவர்களை குண்டர்  சட்டத்தில் போலீசார் சிறையில் அடைத்து வருகின்றனர். கடந்த 2  தினங்களில் சென்னையில் 20 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில்  அடைக்கப்பட்டனர். அவர்களை தொடர்ந்து, தொடர் குற்றங்களில் ஈடுபட்ட நெற்குன்றம்  ராஜ் கமல் (30), கொருக்குப்பேட்டை  ஜாபர் என்ற அப்துல் மஜீத் (28), தேனி  மாவட்டம் குமரேசன் (24), தரமணி  தனராஜ் (22), கே.கே நகர் சரோ என்ற சரவணன்  (27) ஆகிய 5 பேரை போலீசார் குண்டர்  சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர்.

இவ்வாறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, கைதாகும் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறுகிய வழியில் சம்பாதித்து, ஆடம்பர வாழ்க்கை நடத்தவே பலர்  சிறு வயதிலேயே குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. ஒரு சிறிய  தவறினால் அவர்களின் வாழ்க்கையே தடம் மாறி தவறான பாதைக்கு செல்லும் அபாயம்  உள்ளது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க...

குறுக்கு வழியில்,  எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும், ஆடம்பரமாக வாழ வேண்டும், பெண்  தோழிகளுக்கு செலவு செய்து உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக குற்ற செயல்களில் ஈடுபடுவதாக வழக்குகளில் கைதானவ இளைஞர்கள் போலீசாரிடம்  தெரிவித்துள்ளனர்.  இவர்களுக்கு போட்டியாக சிறுவர்களும், வழிப்பறி, செயின்  பறிப்பு, பைக் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெற்றோர் கண்காணிப்பு அவசியம்

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு வீட்டில் தாய், தந்தை இருவருமே வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. இதனால், பல பெற்றோர் தங்களது குழந்தைகளை முறையாக  கண்காணிப்பதும் இல்லை. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மகன் எவ்வாறு  படிக்கிறான், யாருடன் பழகுகிறான், நட்பு வட்டாரங்கள் எப்படி உள்ளது என்பதை  அறிந்துகொள்ள வேண்டும். அவர்களது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தால், சிறந்த  ஆலோசனை வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.