Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2016

அத்தனையும் ஆரோக்கியம்!


ஃப்ரிட்ஜில் குளிர வைத்த தண்ணீரை எத்தனை பாட்டில்கள் குடித்தாலும் தீராத தாகம், மண்பானையில் இருந்து மொண்டு  குடிக்கிற ஒரு டம்ளரிலேயே தீர்ந்து விடுவதை உணர்ந்திருக்கிறீர்களா? கேனிலும் பாட்டில்களிலும் அடைக்கப்பட்டு  வருகிற தண்ணீரில் செயற்கையான இனிப்புச் சுவையை உணர்வோம் அல்லது தண்ணீருக்கான இயல்பான ருசியே  இல்லாததாக உணர்வோம். ஆனால், மண்பானையில் தண்ணீர்கூட அமிர்தமாக ருசிக்கும் என்பதை அனுபவித்தவர்கள்  மட்டுமே அறிவார்கள்.

சாதாரண தண்ணீரே இப்படி என்றால் காலையில் இருந்து இரவு வரை உண்கிற எல்லாமே மண்பானையில்  சமைக்கப்பட்டதாக இருந்தால்?  ருசி என்பதை மீறி, அது ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரம் என்பதையும் பழகிய சில  நாட்களிலேயே உடல் காட்டிக் கொடுக்கும்.காபியில் தொடங்கி பிரியாணி வரை சகலத்தையும் ‘சமைக்க வேண்டாம்...

அப்படியே சாப்பிடலாம்’ என்கிற இன்ஸ்டன்ட் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற நமக்கு, இது ஆச்சரியமாக  இருக்கலாம். திருச்சியைச் சேர்ந்த பட்டதாரி செல்வி நடத்துகிற உணவகத்தில் விறகடுப்பிலும்மண்பாண்டங்களிலும்தான்  சமையல் நடக்கிறது. செல்லம்மாள் சமையல்’ என்கிற பெயரில் இவர் நடத்துகிற உணவகத்தில், சமைப்பது முதல்  பரிமாறுகிற பாத்திரங்கள் வரை எல்லாமே மண்பாண்டங்கள்தான்.

புதுமை இது மட்டுமல்ல... இன்னும் இவர்களது மெனு, அதை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் விதம் என  எல்லாவற்றிலும் தொடர்கிறது.எனக்கு சொந்த ஊர் துறையூர் பக்கத்துல உள்ள உப்பிலியாபுரம். பி.ஏ. படிச்சிருக்கேன்.  கல்யாணத்துக்குப் பிறகு திருச்சிக்கு வந்தேன். என் கணவர் மோகன் ‘டாமின்’ல புராஜெக்ட் ஆபீசரா வேலை  பார்த்திட்டிருந்தார். சும்மா இருக்கப் பிடிக்காம ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்கலாமேனு நினைச்சேன். முதல்ல லேடீஸ்  ஹாஸ்டல் தொடங்கினோம்.

வேலையை விட்டுட்டு என் கணவரும் எனக்கு பிசினஸ்ல உதவியா இருக்க சம்மதிச்சார். ஊரை விட்டு, வீட்டை விட்டு  வெளியில வந்து தங்கறவங்க முதல்ல மிஸ் பண்றது வீட்டுச் சாப்பாடுதானே... அதனால ஹாஸ்டல்ல தங்கியிருந்த  பெண்களுக்கு வீட்டுச் சாப்பாடு செய்து கொடுக்க ஆரம்பிச்சேன். எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சது. ‘நீங்க கேட்டரிங்  பண்ணலாமே’னு சொன்னாங்க நிறைய பேர். அப்பதான் சமையலை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு போகிற ஐடியா  வந்தது. செல்லம்மாள் சமையல் உருவானது இப்படித்தான்...’’ - ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக அறிமுகம் சொல்கிறார்  செல்வி.

செல்லம்மாள் சமையலின் சிறப்பு வெறும் வீட்டுச் சாப்பாடு மட்டுமல்ல... மண்பானை சமையல். சமைப்பதில் தொடங்கி  பரிமாறுகிற வரை எல்லாவற்றுக்கும் மண்பாண்டங்களையே பயன்படுத்துகிறார்கள் இங்கே. விறகடுப்பில்தான்  சமைக்கிறார்கள். அதோடு, இவர்களது இரண்டு கிளைகளிலும் வேலை பார்ப்பவர்கள் முழுக்க முழுக்க பெண்களே!

ஹோட்டல் தொடங்கறதுக்கு முன்னாடியே எங்க வீட்ல மண் பாத்திரங்கள்லதான் சமைச்சுக்கிட்டிருந்தோம். அப்படி  சமைக்கிறதால காய்கறி, கீரைகளோட கலர் மாறாம இருக்கிறதையும், சுவை ஒருபடி தூக்கலா இருக்கிறதையும்,  எங்களால உணர முடிஞ்சது. ஹோட்டல்லயும் அதையே முயற்சி பண்ணலாம்னு நினைச்சோம். வீட்ல சின்ன அளவுல  சமைக்கிறதுக்கும் ஹோட்டலுக்கு பெரிய அளவுகள் சமைக்கிறதுக்கும் நிறைய சவால்கள் இருந்தது.

மண்பாண்டங்களுக்குத் தேய்மானம் அதிகம். ரொம்ப கவனமா கையாளணும். சமைக்கிறபோது விரிசலோ ஓட்டையோ  விழலாம். சமைச்சு முடிச்ச பிறகு கசியும்போதுதான் அது தெரிய வரும். பல நேரங்கள்ல சமைக்கிறபோதே பாத்திரம்  உடைஞ்சு சமைச்சது மொத்தமும் வீணாகறதும் நடக்கும். ஆனாலும், அதையெல்லாம் மீறி, மக்களுக்கு சுவையான  சத்தான சாப்பாடு கொடுக்கணும்கிற எண்ணத்துலதான் மண்பானை சமையலைத் தொடர்ந்துக்கிட்டிருக்கோம்’’ என்கிற  செல்வி, தனது உணவகத்தின் மெனுவிலும் வித்தியாசம் காட்டத் தவறவில்லை. தினமும் 9 வகையான குழம்பு, 5  வகை கீரைகள், 5 வகையான பொரியல், விதம் விதமான பச்சடி, துவையல், ரசம், கூட்டு என வெரைட்டியான  லிஸ்ட்டுடன் கவனம் ஈர்க்கிறது இவர்களது மெனு கார்டு.

வாழைப்பூ உருண்டை குழம்பு, மிளகு குழம்பு, கொள்ளுத் துவையல், மல்லித் துவையல், முளைகட்டிய  கொண்டைக்கடலை, இடித்த பொடியும் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயும், கைக்குத்தல் அரிசி சாதம், அவல் பாயசம்,  சுட்ட அப்பளம் என அத்தனையும் ஆரோக்கிய சமையல். சிறுதானிய உணவுகளுக்கும் இங்கே முக்கியத் துவம்  கொடுக்கிறார்கள். ‘பருமன், நீரிழிவு என எல்லா பிரச்னைகளுக்கும் சிறுதானிய உணவுகளின் மூலம் தீர்வு காண  முடியும்’ என்கிற விழிப்புணர்வை இங்கே இவர்களது உணவுகளின் மூலம் வலியுறுத்துகிறார்கள். தினசரி மெனுவில்  சிறுதானிய உணவுகளுக்கென்றே ஒரு பட்டியல் உண்டு இவர்களிடம்.

ஒரே ஆள் எப்படி இத்தனையையும் ருசிப்பது என்கிற கேள்விக்கும் வித்தியாசமான ஐடியா வைத்திருக்கிறார்கள்  இவர்கள். நிச்சயமா இவ்வளவு அயிட்டங்களையும் ஒருத்தரால சாப்பிட முடியாது. தவிர, எல்லாருக்கும் எல்லா  அயிட்டங்களும் பிடிக்கும்னு சொல்ல முடியாது. ஃபுல் மீல்ஸ் என்ற பேர்ல பிடிக்காததையும் தேவையில்லாததையும்  வாங்கி வீணாக்கறதுல எங்களுக்கு உடன்பாடில்லை. அதனால எல்லா அயிட்டங்கள்லயும் கொஞ்சம் கொஞ்சம் வச்சு  வாடிக்கையாளர்களோட டேபிளுக்கு எடுத்துட்டுப் போய் விளக்குவாங்க.

யாருக்கு என்ன தேவையோ அதை மட்டும் ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக்கலாம். மெனு கார்டுல ஒரு அயிட்டத்தோட  பேரை மட்டும் படிச்சிட்டு செலக்ட் பண்றதுக்கும் ஒரு உணவை கண்ணால பார்த்துட்டு செலக்ட் பண்றதுக்கும்  வித்தியாசம் இருக்கில்லையா?’’ என்கிறார். கிராமத்து உணவுகளும் மருத்துவ குணம் பொருந்திய உணவுகளும்  சமீபகாலமாக நட்சத்திர ஓட்டல் மெனு கார்டில் இடம் பெறுகிற அளவுக்கு மவுசு கூடியதால், அவற்றின் விலையும்  எக்குத் தப்பாகவே எகிறியிருக்கிறது.

செல்வியின் செல்லம்மாள் சமையல் உணவகத்தில் அந்தப் பிரச்னையும் இல்லை. 350 கிராம் அளவுள்ள சாதம் 15  ரூபாய் மட்டுமே. குழம்பு வகையறாக்கள் ஒரு கப் 15 ரூபாய். சாம்பார், ரசம், கீரை, பொரியல் போன்றவை 10 ரூபாய்.  வயிற்றையும் பர்ஸையும் பதம் பார்க்காத பட்ஜெட் உணவு இவர்களது இன்னொரு ஸ்பெஷல்.

பரிமாறுவதில் தொடங்கி, டேபிளை சுத்தப்படுத்துவது வரை சகல வேலைகளுக்கும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து  ஆட்களை வேலைக்கு எடுக்கும் கலாசாரம் இன்று ஹோட்டல்களில் அதிகரித்திருக்கிறது. செல்வியின் உணவகத்திலோ  வேலை பார்க்கிற அத்தனை பெண்களும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். உணவையும் விருந்தோம்பலையும் உண்மையாக  நேசித்துச் செய்கிறவர்கள்!

சமைக்க, காய்கறி, கீரை நறுக்க, பாத்திரங்கள் கழுவ, பரிமாற, பாக்கெட் போட... இப்படி எல்லா வேலைகளுக்கும் இங்கே  பெண்கள்தான். மெனுவை திட்டமிடறதும், மேற்பார்வையும் என் வேலைகள். காலையில 7:30 மணிக்கே எங்க இடம்  களைகட்டும். 10 மணிக்கெல்லாம் பரபரப்பா சமையல் வேலை ஆரம்பமாயிடும். இப்போதைக்கு வெறும் மதிய உணவு  மட்டும்தான் வச்சிருக்கோம்.

காலை உணவுக்கும் இரவு சாப்பாட்டுக்கும் நிறைய டிமாண்ட் இருக்கிறதால கூடிய சீக்கிரமே அதையும் ஆரம்பிக்கிற  ஐடியா இருக்கு. காலை உணவுக்கு கஞ்சி கொடுக்கிற யோசனை இருக்கு.  சென்னை யிலயும் கிளை தொடங்க  யோசிச்சிட்டிருக்கோம்...’’ என்கிறார் செல்வி.சவால்களைக் கடந்த செல்வியின் சாதனைகள் பரவட்டும்... தொடரட்டும்! 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.