Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2016

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவு நியாயம் வெளிச்சத்துக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது


“ டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் குறித்து மாநிலப் போலீசாரின்  விசாரணையில் தங்களுக்கு திருப்தி இல்லை எனக் கூறி  சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது். தாமதமானாலும் நியாயம் வெளிச்சத்துக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது”  என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: திருச்செங்கோட்டில் பணியாற்றி வந்த 27 வயதான விஷ்ணுப் பிரியா என்ற பெண் டி.எஸ்.பி., பணியில் சேர்ந்த ஏழு மாதக் காலத்திலேயே,  குரூப் 1 தேர்வில், காவல்துறையைத் தவறாகத் தேர்ந்தெடுக்க நேரிட்டது  என்றும்,  பணியில் பயங்கரமான நெருக்கடிகளால் ஏற்படும் மன உளைச்சல்களைத் தாங்க முடியவில்லை என்றும், அதனால் தற்கொலை முடிவை நாடுவதாகவும் எழுதி வைத்துவிட்டு,  அதிமுக ஆட்சியில் வேறு சில அதிகாரிகள் செய்ததைப் போல 18-9-2015 அன்று  தூக்குப் போட்டுக் கொண்டு தன்னைத்தானே பரிதாபமாக மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பான  வழக்கினை  முதலில்  திருச்செங்கோடு  போலீசார் பதிவு செய்தனர்.  பின்னர் அந்த வழக்கினை  சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. விஷ்ணுப்பிரியாவின் மரணம் குறித்து  தமிழக  அரசின் ஏற்பாட்டிலான  விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், அவருடைய தந்தை ரவி, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கில்தான் எனது அறிவுரையின் பேரில் திமுக வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தகுந்த அடிப்படைகளுடன் வலியுறுத்தி மிகச் சிறப்பாக வாதிட்டு, அந்த வழக்கில்  உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், எம்.பி. முரளிதரன் ஆகியோர் கடந்த 1ம் தேதி வழங்கிய தீர்ப்பில், “வாதங்களின் அடிப்படையில் பார்க்கும் போது இறந்துபோன விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி தொடர்ந்திருக்கும்  மேல் முறையீட்டு மனுவை ஏற்கிறோம்.

மாநிலப் போலீசாரின் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை. எனவே விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடுகிறோம். சிபிஐ மூன்று மாதங்களுக்குள் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும்””  என்று அனைவரும்  வர வேற்கத்தக்க முடிவைக் கூறியிருக்கிறார். இந்த நிலையில், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மாநிலக் காவல்துறை மீது  நம்பிக்கையை இழந்து விட்டதாக வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் வெளிப்படையாக தெரிவித்தார் என்று அதிர்ச்சியூட்டும் செய்தி வந்தது. இதற்கு காவல்துறை பொறுப்பேற்றுள்ள முதல்வர் மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டுமா?  வேண்டாமா? மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே இவ்வாறு கருத்துக் கூறியிருக்கிறார் என்றால், எதிர்க்கட்சிகள் காவல்துறை மீது கொண்டுள்ள கருத்துகள் முற்றிலும் உண்மை என்று தானே ஆகிறது?
சென்னை நுங்கம்பாக்கம் புகைவண்டி நிலையத்தில் பட்டப்பகலில் சுவாதி  என்ற இளம் பெண்ணைக் கொலை செய்த சம்பவத்திற்காக காவல்துறைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்த நான்,  தற்போது அந்தக் கொலை செய்த குற்றவாளியைக் கண்டுபிடித்த செயலுக்காக காவல்துறை அதிகாரிகளைப் பாராட்டுகிறேன்.

அதே நேரத்தில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று தமிழகச் சட்டப்பேரவையில் முதல்வர் கூறியதற்குப் பிறகு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாநிலப் போலீசாரின்  விசாரணையில் தங்களுக்குத் திருப்தி இல்லை எனக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, அதிமுக அரசின் மீது தெரிவித்த கடுமையான கண்டனம் என்பதையும்;  இந்த ஆட்சியின் மீது தொடர்ந்து விழுந்து வரும் கறுப்புப் புள்ளிகளில் இதுவும் ஒன்று என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தற்கொலை சம்பவத்தில் சிபிஐ விசாரணை  மூன்று மாதங்களில் முற்றுப்பெற்று, புதைந்திருக்கும்  உண்மைகள் வெளிக் கொணரப்படுமானால்; தாமதமானாலும் நியாயம் வெளிச்சத்திற்கு வருவதை யாராலும் தடுத்திட இயலாது என்பது புலப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.