Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 29, 2016

சிங்கம் கொன்ற பசுவின் தோலையே தலித் இளைஞர்கள் உரித்தார்கள்: சிஐடி போலீஸ் விசாரணையில் அம்பலம்


குஜராத்தில் தலித் இளைஞர்கள் தோலுரித்த பசு சிங்கத்தால் வேட்டையாடப்பட்டது என சிஐடி போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில், உனா தாலுக்காவுக்கு உட்பட்ட மோட்டா சமாதியாலா கிராமத்தில் தோலுக்காக பசுவை கொன்றதாக கூறி கடந்த 11-ம் தேதி தலித் இளைஞர்கள் சிலரை, பசு ஆர்வலர்கள் நடுவீதியில் கட்டி வைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். மேலும் உனா நகருக்கு அழைத்து வந்து இரும்பு கம்பிகளால் அவர்களை தாக்கி நடுவீதியில் பொதுமக்கள் முன்னிலையில் அரைநிர்வாணமாக அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, மாநிலம் முழுவதும் தலித் அமைப்பினர் நடத்திய போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டது. மேலும் ஒரு சிலர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதால், நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை வலுவாக எழுந்தது. இதைத் தொடர்ந்து தலித் இளைஞர்களை தாக்கிய பசு ஆர்வலர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பசுவை தலித் இளைஞர்கள் கொன்றார்களா? அல்லது ஏற்கெனவே உயிரிழந்த பசுவை கொண்டு வந்து தோலுரித்தார்களா? என சிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் சிங்கம் வேட்டையாடி அடித்துக் கொன்ற பசுவைத்தான் கிராமத்துக்கு கொண்டு வந்து தலித் இளைஞர்கள் தோலுரித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து சிஐடி ஐஜி எஸ்.எஸ்.திரிவேதி கூறும்போது, ‘‘பேடியா கிராமத்தில் சிங்கம் அடித்த பசுவைத் தான் தலித் இளைஞர்கள் அங்கிருந்து மோட்டா சமாதியாலா கிராமத்துக்கு கொண்டு சென்றதாக நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். அந்த கிராமத்தில் அன்றிரவு மேலும் மூன்று பசுக்களையும் சிங்கம் கொன்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதன் மூலம் தலித் இளைஞர்கள் பசுவை கொல்லவில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது’’ என்றார்.

அதே சமயம் தோலுக்காகவே பசுவை கொன்றதாக பசு ஆர்வலர்களிடம் புகார் அளித்தவர்கள் யார்? எதற்காக பொய்யான தகவல்களை அவர்களுக்கு அளித்து அங்கு அழைத்து வந்தார்கள்? அதற்கான நோக்கம் என்ன? என்பது குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட்டு வருவதாக திரிவேதி தெரிவித்தார்.

கிர் சரணாலயத்தில் இருந்து பேடியா கிராமம் சற்று தொலைவில் இருந்தாலும், அவ்வப்போது இரை தேடி சிங்கங்கள் அந்த கிராமத்துக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் கால்நடைகள் மட்டுமின்றி மனிதர்களும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.