Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 2, 2016

கருணாநிதி கேள்விக்கு, முதல்வர் கொடுத்த அதிரடி..! பற்ற வைத்த பாலாறு


பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டிவருவதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை விட்ட சில மணி நேரத்தில், ஆந்திர முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக கடிதம் எழுதியுள்ளார்.

ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை 10 அடியாக உயர்த்தும் பணி, 45 இலட்சம் ரூபாய்ச் செலவில் துவக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வருவதாகவும், இதனை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். மேலும், "முதலமைச்சர் ஜெயலலிதா எதற்கெடுத்தாலும் மற்றவர்கள் மீது குறை சொல்லித் தப்பிக்கும் போக்கினை கை விட்டு, காவேரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு அமைக்கும் பிரச்சினை ஆனாலும், முல்லைப் பெரியாறு பிரச்னை ஆனாலும், பாலாற்றுப் பிரச்னை ஆனாலும் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி தமிழகத்திலே உள்ள விவசாயிகள் நிம்மதியாக வாழ்வதற்கான வழிவகைகளைக் காண வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.

கருணாநிதி அறிக்கை வெளியிட்டு சில மணி நேரத்தில், "பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை உயர்த்தக்கூடாது" என்று வலியுறுத்தி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், "ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பெரும்பள்ளம் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை 5 அடியில் இருந்து 12 அடியாக அதிகரிக்கும் நடவடிக்கையில் ஆந்திர நீர்ப்பாசனத்துறை ஈடுபட்டுள்ளதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். பாலாறு மாநிலங்களுக்கிடையே ஓடும் ஆறு என்பதால் ஆந்திர அதிகாரிகளின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை தமிழகத்தில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

பாலாறு மாநிலங்களுக்கிடையே ஓடும் ஆறு என்பதால் அட்டவணை ‘அ’-வில் 1892 ஆண்டின் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் 2-வது உட்பிரிவின் படி மேல் பாசன மாநிலங்கள் கீழ் பாசன மாநிலங்களின் அனுமதியின்றி ஆற்றின் குறுக்கே புதிய அணைகளையோ அல்லது ஆற்றின் நீரை திருப்பும், தடுக்கும், சேமிக்கும் எந்த விதமான கட்டுமானங்களையோ கட்டக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது 1892-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறும் செயல் என்பதால், இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் 2006ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த சூழ்நிலையில், பெரும்பள்ளம் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்கு தமிழக அரசு தனது கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது. அத்துடன், இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, தடுப்பணையை உயர்த்தும் நடவடிக்கையை தடுக்கவும், தடுப்பணையில் நீர்மட்டத்தைக் குறைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.