Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 31, 2016

இன்று ஞாயிற்றுக் கிழமை கொண்டாட்டங்கள்



அதிகாலை நேரத்தில் 30 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் எங்கள் ஊரில் நடக்கிற ஒரு திருமணத்திற்குக் கிளம்பிப் போக வேண்டியிருந்தது. புறப்பட்டவுடன் சேலத்திலிருந்து ஒரு காட்சியை சாலையின் இரண்டு பக்கங்களிலிருந்தும் தொடர்ச்சியாக வருவதைப் பார்த்துக்கொண்டே வந்தேன்.

ஆம் எல்லா இடங்களிலும் கறிக்கடைகள் அந்த நேரத்தில் பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருந்ததை நான் பார்த்துக்கொண்டே வந்தேன்.

கறிக்கடைகள் என்றால் அவை ஆட்டுக் கறிகள் போடுகிற மட்டன் ஸ்டால்கள் மட்டுமல்லாமல் கூடவே பிராய்லர் கோழிக்கறி போடுகிற கடைகளும் இருந்தன. சில இடங்களில் அபூர்வமாக நாட்டுக் கோழியும கிடைக்கும் எனவும் அறிவிப்புகளோடு இருப்பதையும் கவனித்தேன்.

நான் சின்ன வயதிலிருக்கும்போது எங்கள் கிராமத்தில் ஏதாவது ஒரு திருவிழா நடக்கும்போது கறிக்கடையைப் பார்த்திருக்கிறேன். நன்றாக இந்த வரியைத் திரும்பப் படியங்கள். ஒருமையில்தான் சொல்லியிருக்கிறேன். ஆமாம் கறிக்கடையைதான் பார்த்திருக்கிறேன்.

70 களின் தொடக்கத்தில் ஆடிமாதத்தின் முதல் நாளான தலை ஆடி அன்று இட்லி சுட்டு கறி சமைப்பார்கள்.ஆட்டுக்கறிக்கும் இட்லிக்கும் அவ்வளவு ருசியாக இருக்கும். எங்கள் அம்மாவின் கைப்பக்குவத்தில் காரசாரமாகக் குழம்பு மணக்கும். குழம்பில் சேர்மானங்கள் சேர்த்து கொதித்த சில நிமிடங்களில் ஒரு டம்ளர் தனியாக எடுத்து அதில் கொஞ்சம் நல்லெண்ணையை ஊற்றி அதை நன்றாக ஆற்றிக்கொடுப்பார். இதைக் குடித்தால் நெஞ்சில் இருக்கிற சளி ஒன்றாகக் கோர்த்துக்கொண்டு வரும். இதனால் உடலில் இருக்கிற காய்ச்சல் நோயின் தொடக்கத்திலியே கிள்ளி எறிகிற ஒரு மருந்தாகவே அம்மா கொடுப்பார். ஒருவேளை அம்மா மறந்துவிட்டால் இந்த சூப்பைப் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை அப்பா நினைவூட்டுவார்.

ஆடி முடிந்ததும் தீபாவளி மற்றும் எங்கள் கிராமத்தில் பங்குனியில் நடக்கிற மாரியம்மன் திருவிழா இப்படிதான் ஊரில் பெரும்பாலானவர்கள் கறி சமைப்பார்கள். கொஞ்சம் வசதிகூட இருப்பவர்கள் அந்த ஊரில் வார சந்தை நடக்கிற புதன் கிழமையன்று கறி சமைப்பார்கள்.அவர்கள் சந்தையில் இருக்கிற ஒரு பெரிய கறிக்கடையில இருந்து கறியை வாங்கி வந்து சமைப்பார்கள்.

பெரிய கறிக்கடை என்றால் கடை பெரிதல்ல. அங்கே நான்கு பக்கங்களிலும் திறந்திருக்கும் ஒரு வீடு போன்ற ஓடுகள் போடப்பட்ட ஒரு பெரிய இடம் இருக்கும். அங்கே மட்டும்தான் வாரத்தில் ஒரு நாள் கறிக்கடை இருக்கும். எட்டுப்பட்டியிலிருந்தும் வருகிற கிராமத்து மக்கள் அந்த வார சந்தை கூடுகிற புதன் கிழமையில் மட்டும்தான் கறியை வாங்கிக்கொண்டு போய் சமைப்பார்கள்

அந்தக் கறிக்கடையில் எங்கள் தாத்தாவின் கறிக்கடையும் இருந்தது என என் அப்பாவும் பெரியப்பாக்களும் அத்தைகளும் பாட்டிகளும் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் பூர்வீக தொழிலே ஆடுகளை மேய்ப்பதும் அதை வாங்கி விற்பதும் மற்றும் கறிக்கடை போட்டு வியாபாரம் செய்வதும்தான் என அவர்கள் நிறையக் கதை சொல்லி கேட்டிருக்கிறேன்.

அந்த வாரச் சந்தை கறிக்கடையில் இப்போது போல மின்னணு தாரசுகளில் எடை போட்டு கறியை கொடுக்க மாட்டடார்கள். மாறாக கறியைக் கூறுகூறாகப் பிரித்து வைத்திருப்பார்கள். அந்தக் கறியின் அளவைப் பொறுத்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என விலை இருக்கும்.அதில் ஒரு கூறோ அல்லது அவர்களின் தேவைக்கேற்ப இரண்டு கூறோ வாங்கிப் போவார்கள்.

இந்தக் கறியை ஒரு பாக்கு மட்டையில் வைத்து மடித்துக் கட்டிக்கொடுப்பார்கள். இந்த பாக்குமட்டையைக் கழுவி அப்படியே பத்திரமாக மடித்து கூரையில் சொருகி வைப்பார்கள். அப்போது பெரும்பாலும் பனைவோலை வேய்ந்த கிராமத்து வீடுகள் என்பதால் கூரையில் சொருகி வைத்து யாராவது விருந்தினர்கள் வந்தால் அவர்களுக்கு அந்தப் பாக்கு மட்டையில் சாப்பாடு போடுவார்கள்.

எனக்குத் தெரிந்து எண்பதுகளின் தொடக்கங்கள்வரை எங்கள் ஊரில் வாரச் சந்தை நடக்கிற நாளில் மட்டும்தான் கறிக்கடை இருந்தது. பின்னால் அந்த ஊரிலேயே ஒன்றிரண்டு இடங்களில் கறிக்கடைகள் முளைக்க ஆரம்பித்திருந்தன. அதிலேயும் தினசரி கறிக்கடைகள் இருக்காது. புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை என இரண்டு நாட்கள் மட்டும அந்தக் கறிக்கடைகள் இருக்கும்.

இந்தக் கறிக்கடைகள் புதிதாக வந்தபிறகுதான் கறியை கூறாகக் கட்டி விற்பது போய் எடை போடுகிற பழக்கம் வந்தது. நான் அநேகமாக எடை போடுகிற தராசை இங்கேதான் முதன்முதலாகப் பார்த்த நினைவிருக்கிறது. ஒரு கிலோ மற்றும் அரைக்கிலோ இதற்கு மட்டும்தான் எடைக்கற்கள் இருக்கும். கால்கிலோ மற்றும் 100 கிராம்கள் போன்ற அளவுகளுக்கு அவர்களாகவே சில கூழாங்கற்கள் போல சில கற்களை தாயரித்து வைத்திருப்பார்கள். அது உண்மையிலேயே அந்த எடை அளவில்தான் இருந்ததா என்பது பற்றியெல்லாம் யாருக்கும் கேள்விகூட எழுப்பத் தெரியாது என்பதுதான் உண்மை. கறிக்கடைகாரர்கள் எடைபோட்டு கொடுப்பது நியாயமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் எல்லாமே இயங்கி வந்தன. பெரும்பாலும் இரண்டு தரப்பிலும் யாரும் யாரையும் ஏமாற்றும் நோக்கம் அப்போது இருந்ததாக நான் அறிந்திருக்கவில்லை.

எண்பதுகளின் பின் ஆண்டுகளில் ஊரின் நிறைய இடங்களில் கறிக்கடைகள் தொடங்கியிருந்தார்கள். அதாவது தெருவின் ஒரு மூலையில் இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் ஒரு புளியமரம் இருந்தால் போதும் அதன் அடியில் ஒரு கயிற்றை கட்டி ஆட்டை உரிக்க தொடங்கியிருந்தார்கள்,. புளிய மரத்தின் ஒரு அடிப்பாகத்தை வெட்டி அதை கறிவெட்டும் கட்டையாகயாகவும் பயன்படுத்த தொடங்கி கடையை போட்டுவிடுவார்கள். குடல் கழுவி ஆட்டின் இரைப்பையை சுத்தம் செய்த கழிவுகள் சேர்ந்து ஈக்களும் நாய்களும் போட்டிப் போட்டுக்கொண்டு சண்டையிட்டுக் கொள்வதையும் பார்த்திருக்கிறேன்.

நான் தொடக்கத்தில் சொன்ன கறிச் சந்தையில் ஒரே இடத்தில் ஆடுகளை அறுப்பார்கள். இதனால் அந்தக் கழிவுகளை குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கொட்டிவைப்பார்கள். பின்னாட்களில் ஆட்டுத் தொட்டிகளில் மட்டும்தான் ஆடுகளை அடிக்க வேண்டும் என பஞ்சாயத்துகளில் ஒரு விதி இருப்பதும் அறிந்தேன். அந்த விதிகளின்படிதான் அந்த வாரச் சந்தைஅப்போது இயங்கி வந்ததையும் அறிந்தேன்.

ஆனால் பின்னால் இந்த விதிகளை பஞ்சாயத்துகார்கள் கண்டுகொள்ளவில்லையா? அல்லது தனியாக கவனிக்கப்பட்டார்களோ தெரியாது. தெருவிற்கு தெரு கறிக்கடைகள் அவர்கள் இஷ்டம்போல வசதி போல சௌகர்யம் போல வைத்துக்கொண்டார்கள்.

இடையில் சில ஆண்டுகள் நான் சென்னையில் குடியிருந்த சமயங்களில் அங்கே கறிவாங்க போகும்போது கவனித்த ஒரு விஷயம் அங்கே எந்தக் கறிக்கடையிலும் ஆடுகளை உரிப்பதை பார்த்திருக்கவில்லை. எங்கேயிருந்து கறியை மட்டும் எடுத்து வருகிறீர்கள் என விசாரித்ததில் அவர்கள் மொத்தமாக ஒரிடத்தில் ஆடுகளை உரித்து சுத்தம் செய்து அங்கேயிருந்த அவர்களும் ஆடுகளை எடை போட்டு வாங்கிவருவதையும் சொன்னார்கள். சென்னை மாநகராட்சி இந்த விஷயத்தில் சுகாதாரத்தை பேணியதை கவனித்தேன். ஆனால் இந்த ஸ்லாட்டர் ஹவுஸ்களில் உரித்து தொங்கவிடப்பட்ட ஆடுகளை எப்போது உரித்தார்கள் என்பதெல்லாம் நமக்கு தெரியாது.

ஒருமுறை ஆட்டுக்கறியை சமைத்து சாப்பிட்ட போது அது நெடுநாளைக்குமுன் உரித்து ஐஸ்ஸில் வைத்திருந்த கறியைப் போட்டு அனுப்பிவிட்டார்கள் போல. அந்த மாமிசத்தை சமைத்து சாப்பிடும்போது கெட்டுப்போன வாசனை வந்ததாலும் வாயில் ஒருவித மோசமான வாசனை வந்ததாலும் அருவறுப்புடன் அந்தக் கறியை எடுத்து சாக்கடையில் கொட்டியதும் நினைவிற்கு வந்தது.

இந்த ஞாயிறுதான் அந்தக் கறிக்கடைகளை அதிகாலையில் கிளம்பியபோது கவனித்தேன் என முதல் வரியைத் தொடங்கினேன் அல்லவா-? சேலத்திலிருந்து எங்கள் மல்லசமுத்திரம் ஊருக்கு 30 கிலோ மீட்டர் தொலைவிற்கும் வரிசையாக ஒவ்வொரு ஊரிலும் சாலை ஓரங்களில் கறிக்கடைகள் இருப்பதையும் அங்கே கறியை வாங்க கூட்டமாக நிற்பதையும் பார்த்தேன்.

எங்கள் அப்பா புதன் கிழமைகளில் கறியை வாங்கி வருவதையும் பண்டிகை காலங்களில் அவை எந்த நாளில் வந்தாலும் அன்று கறி சமைப்பதையும் பார்த்திருக்கிறன். பின்னாட்களில் எண்பதுகளின் தொடக்கங்களில் நான் மேல்நிலை படிப்பை முடித்து கல்லூரியில் படிப்பதற்காக ஈரோட்டிற்குப் போன சமயங்களில் அங்கேயே விடுதியில் தங்கிப் படிக்க வேண்டியிருந்தது. நான் வீட்டில் செல்லப் பிள்ளை என்பதாலும் எனக்கு ஹோம் சிக் அதிகமென்பதாலும் வாரம் தவறாமல் சனி ஞாயிறுகளில் வீட்டிற்கு வந்துவிடுவேன். இந்த சமயத்தில்தான் ஞாயிற்றுக் கிழமைகளில் கறி சமைப்பது என்கிற பழக்கத்திற்கு குடும்பத்தை அப்பா மாற்றினார்.

அந்த ஞாயிற்றுக் கிழமைகளில் கறி வாங்க வேண்டும் என்றால் 5 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கிற பக்கத்து ஊரான ஆட்டையாம்பட்டிக்குப் போக வேண்டும். காரணம் அன்றுதான் ஆட்டையாம்பட்டியில் வார சந்தை . மேலும் என் அப்பாவின் நண்பர் அங்கே கறிக்கடை போடுவார் என்பதும் உபரி காரணங்கள்.



ஞாயிற்றுக் கிழமையானால் நான் சைக்கிளை எடுததுக்கொண்டு உற்சாகமாக கறி வாங்குவதற்காக அந்த ஊருக்குப் புறப்படுவேன். அநேகமாக அந்தக் கடையில் அப்பா பெரும்பாலும் இருப்பார். காரணம் என் அப்பா கிராமங்களில் தோட்டம் தோட்டமாக போய் ஒவ்வொன்றாகவோ அல்லது மொத்தமாகவோ ஆடுகளை வாங்கிவந்து ஞாயிற்றுக் கிழமை சந்தையில் விற்பார். அப்போது புதன் கிழமை மல்லசமுத்திர சந்தை வெள்ளிக்கிழமை மோர்பாளைய சந்தை செவ்வாய் திருச்செங்கோட்டு சந்தை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆட்டையாம்பட்டி சந்தை. இவ்வளவுதான என் அப்பா அபப்போது போகிற வார சந்தைகள் . பெரும்பாலும் அப்பா வாங்கி விற்கிற சந்தைகள் இவ்வளவுதான்.

அப்பாவின் அந்தக் கறிக்கடை நண்பர் ஒரு நாளும் கறியை எடைபோட்டு எங்களுக்கு கொடுப்பதை நான் பார்த்திருக்கவில்லை. கூறுபோட்டு கறி விற்ற காலத்திலும் சரி அதன் பின்னால் எடைபோட்டு விற்ற காலத்திலும் சரி அவர் இரண்டு கைகளால் கறியை அள்ளி அள்ளி ஒரு பாக்கு மட்டையில் போட்டு கட்டி கொடுத்து அனுப்புவார். அப்பா பக்கத்தில் இருந்த சமயங்களிலும் சரி அவர் இல்லாத சமயங்களில் நான் மட்டும் போய் வாங்கி வந்த சமயங்களிலும் சரி அவர் இதே முறையில்தான் கறியை அள்ளிப்போடுவதை கவனித்திருக்கிறேன். மற்றவர்களுக்கு இப்படி செய்யாததையும் பார்த்திருக்கிறேன்.அதேபோல ஒரு நாளும் நான் அவரிடம் காசு கொடுத்து வாங்கிவந்திருக்கவில்லை. அப்பாவிடம் வாங்கிக்கொள்கிறேன் என சொல்லிவிடுவார். அதனால்அப்போது கறி என்ன விலைக்கு விற்றது என்பதுகூட எனக்கு தெரியாது.

புதன் கிழமைகளில் கறி சாப்பிடகிற வழக்கம் என்னால்தான் எங்கள் வீட்டில் ஞாயிற்றுக் கிழமைக்கு மாறியது என்பதை இப்போது தான் நினைத்தால் புரிந்தது. ஆனால் மொத்த ஊரும் ஞாயிற்றுக் கிழமை என்றால் கறி சாப்பிட வேண்டும் என்பது எப்போது மாறியது என்று கவனித்தர்ல் அல்லது இப்போது நினைத்து பார்த்தால் ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது.

எண்பதுகளின் பின் ஆண்டுகளில் இது நடக்கத் தொடங்கியிருந்தது. பெரும்பாலான அரசாங்க பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்களுக்கு வார விடுமுறையாக ஞாயிறு மட்டும்தான் விடுமுறை என்பதால் தங்களது வார விடுமுறையைக் கறி சாப்பிடும் நாளாக மாற்றிக்கொண்டார்கள் .

இந்த வழக்கம் மெல்ல மெல்ல மற்றக் குடும்பங்களுக்கும் பரவி இப்போது இந்த இருபது வருடங்களுக்கும் மேலாக எல்லாக் குடும்பங்களிலும் வார விடுமுறை என்பது ஞாயிறு எனவும் அன்று கறியோடு மற்ற சமாச்சாரங்களையும் இணைத்து கொண்டாட்டங்களுக்கு உரிய நாளாக மாற்றியிருந்தார்கள்.

இன்னும் சொல்லப் போனால் பின்னாட்களில் உலக தொலைக்காட்சிகள் கேபிள் வழியாக வீடுகளில் புகுந்த பிறகு ஞாயிறுகள் கறி சாப்பிடுவதோடு சில படங்களை வீட்டு தொலைக்காட்சிகளில் பார்க்கிற நாளாகவும் மாறத் தொடங்கியிருந்தன.

இந்த வழக்கம் தற்போது பெரியளவில் குடும்பங்களில் பரவத் தொடங்கியிருந்ததன் விளைவுதான் நான் பயணம் செய்த 30 கிலோ மீட்டர் தொலைவிற்கும் கறிக்கடைகள் மற்றும் அங்கே போட்டிப் போட்டுக்கொண்டு கறி வாங்க இருந்த கூட்டம். முன்பு ஆட்டுக் கறி அதிகம் போனால் பன்றிக் கறி எங்கேயாவது அதிசயமாக ஒரு கடை இருக்கும் . மாட்டுக் கறிக்கடையை நான் அதிகமாக பார்த்ததில்லை. கோழிக்கடைகள் என்பதெல்லாம் அப்போது அதிகமாக இல்லை.

ஆனால் கொங்கு நாட்டில்தான் பிராய்லர் கோழி வளர்ப்பு பண்ணைகள் உருவானதாலோ என்னவோ தெரியவில்லை இங்கேதான் நிறைய கோழிக்கடைகள் தொடங்கியிருந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில்தான் கறி சாப்பிடுகிற வழக்கத்தையும் இக்கடைகள்தான் மாற்றியமைத்தன. தினசரியும் கோழிகளை வாங்கி சமைக்க இயலும் என்பதை இந்த சிறு சிறு கோழிக்கடைகள் தான் தொடங்கி வைத்தன.

இவர்கள் இன்னொரு காரியத்தையும் செய்தார்கள். தினசரி உங்கள் வீட்டில் கோழிக்கறி சமைக்க இயலவில்லை என்றால் கவலை வேண்டாம். அதற்கும் நாங்களே வழி செய்து கொடுக்கிறோம் என்ற ரீதியில் அவர்களே சில்லி சிக்கன் என்ற பெயரில் கோழிக்கறியை வாரத்தின் எல்லா நாட்களில் கிடைக்க செய்தார்கள்.அவ்வளவு ஏன் தினசரி எந்தநேரமும் கோழிக்கறியை வறுத்து விற்றார்கள்.கூடவே கோழி முட்டைகள் வேகவைத்தும் ஆப் பாயில் மற்றும் புல் பாயில் மற்றும் கலக்கி என விதவிதமாக சமைத்து அந்த கோழிக்கடைகளிலேயே விற்றார்கள்.

ஆக தினசரி கறி சாப்பிடுகிற பழக்கம் மெல்ல மெல்ல சமூகத்தில பரவ வசதியாக தொன்னூறுகளின் தொடக்கத்தில ஏற்பட்ட குளோபல் எக்கானமிக் மாற்றங்களும் மன்மோகன்சிங்கின் பொருளாதார கொள்கைகளும் காரணங்கள் என்று சொன்னால்அது கொஞ்சம் கூடுதலான கதையாகக்கூட நிறையப் பேருக்கு தோன்றாலாம். ஆனால் அதுதான் உண்மை.


மக்களிடம் பணப்புழக்கம் என்பது சரளமாகயிருந்தது. அதாவது பணத்தின் மதிப்பு குறைந்தது ஆனால் புழக்கம் அதிகமாகியிருந்தது. இதனால் சாதரணமாக கூலி வேலை செய்பவர்கூட ஒரு நாளுக்கு 500 ரூபாய் சம்பாதிப்பதும் அதிலிருந்து நிறையப் பொருட்களை வாங்கி நுகிர்கிற காலச்சாரம் தொடங்கியிருந்ததும் நிகழ்ந்தது.இதை தொலைக்காட்சி விளம்பரங்களும் கட்டமைத்திருந்தன.
இதன் தொடர்ச்சியாகவே மக்கள் நினைத்த நேரங்களில் நினைத்த பொருட்களை வாங்க வேண்டும் என்ற பழக்கம் உருவாகவும் இந்தக் கறிக்கடைகள் அதிலொன்றாகவும் மாறத் தொடங்கியிருந்தன.

சேலத்திலிருந்து ஒரு மணி நேரத்தில் எங்களூருக்கு பைக்கில் போய்விடலாம் என்பதால் நான் திருமண நேரத்திற்கு கல்யாண மண்டபத்திற்குப் போய் சேர்ந்துவிட்டேன். வழியெங்கும் கறிக்கடைகளைப் பார்த்து வந்திருந்தாலும் கல்யாண வீட்டில் சைவ சமையல்தான் என்பது கொஞ்சம் வருத்தமாகதான் இருந்தது. விருந்து முடித்து நண்பர்களை உறவினர்களை சந்த்தித்து பேசிவிட்டு மகிழ்ச்சியோடு மதிய நேரத்திற்கு திரும்பவும் சேலம் பயணம் தொடங்கினேன்.

இப்போது வழி நெடுக வேறு ஒரு காட்சியைப் பார்த்தேன். வேறு ஒரு கடையில் கூட்டம் அலைமோதுவதைப் பார்த்துக்கொண்டே வந்தேன். ஆம் வழிநெடுக இருந்த ஊர்களில் இருந்த டாஸ்மாக் அரசு மதுவிற்பனைக் கூடங்களில் மது விற்பனை ஜோராக தொடங்கியிருந்ததும் அதற்கு காரணம்.

காலையில் வீட்டில் எடுத்துக்கொடுத்துவிட்டு வந்த கறியை சமைத்து சாப்பிட்டுவிட்டு மதியத்திற்கு நண்பர்களோடு அந்த ஞாயிற்றுக் கிழமையைக் கொண்டாடுவதற்காகக் குடிமக்கள் இப்போது சாராய கடைகளை நோக்கி படைபடையாக வரத் தொடங்கியிருந்தார்கள் என்ற உண்மைதான் அது.

காலையில் கறிக்கடைகளில் கூட்டம் கறி வாஙக இருந்ததைப் போலவே இப்போது அரசு சாராய கடைகளில் கூட்டம் இருந்தார்கள். இப்போது ஞாயிறுகள் என்பது கறி சாப்பிடவும் சாராயம் குடிப்பதற்கும் ஆன கொண்டாட்ட நாளாகவும் மாறியுள்ளது. அப்புறம் மாலைவேளைகளில் போனால் போகிறதென இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முதலாக ஒரு திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படியாக ஒரு ஞாயிற்றுக்கிழமையை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.


படித்ததில் பிடித்தது

நன்றி
சிபிச்செல்வன்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.