Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 23, 2016

ஒலிம்பிக்: ஹாக்கியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு எப்படி?


ஒலிம்பிக் பயிற்சி முகாமுக்கு சற்று முன்னதாக, இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார்சிங்கின் கேப்டன் பதவி பறிக்கப்பட, 'ஆரம்பமே குழப்பமா...' என கேள்வி எழுந்தது. லண்டனைச் சேர்ந்த சீக்கிய பெண் ஒருவர்,  சர்தார் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அதனடிப்படையில் சர்தாரின் கேப்டன் பதவி பறி போனதாக  சொல்லப்படுகிறது. சர்தாரின் நீக்கம், அணிக்குள் எந்த சலசலப்பையும் உண்டு பண்ணவில்லை. அணியில் அவர் தொடர்கிறார். புதிய கேப்டனாக ஸ்ரீஜேஷ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 1980 ம் ஆண்டுக்குப் பிறகு,  ஒலிம்பிக்கில் ஹாக்கி அணிக்கு தங்கம் கைகூடவில்லை. 1984 ல் நடந்த லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிலேயே 5வது இடத்தைதான் பிடிக்க முடிந்தது. அப்போதிருந்தே வீழ்ச்சிதான்.  கடந்த  1992, 2000, 2004 ம் ஆண்டுகளில் 7வது இடம். 1988, 96 ம் ஆண்டுகளில் 6வது இடம். 2008 ம் ஆண்டு,  80 ஆண்டு கால இந்திய ஹாக்கி வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறவே இல்லை. 2012 ம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் கடைசி இடம்.  தொடர்ச்சியாக சந்தித்த தோல்விகள் ஏராளம்.

நீண்ட காலத்திற்கு பிறகு கடந்த 2014 ம் ஆண்டு,  இன்ஷியான் ஆசியப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது. அத்துடன் ஒலிம்பிக் போட்டிக்கு முதல் அணியாக நேரடியாகவும் தகுதி பெற்றது. அண்மையில் முடிந்த 6 நாடுகள் ஹாக்கித் தொடரில், வெள்ளிப் பதக்கம் வென்ற உற்சாகமும் இந்திய அணிக்கு சற்று நம்பிக்கை அளித்திருக்கிறது.

ஆட்டம் தொடங்கியதுமே கோல் வாங்கி விடுவது  இந்திய அணிக்கு  பெரும் பலவீனம். பிற்பகுதி ஆட்டத்தில் வீரர்கள் சோர்வடைந்து விடுவதால் ஆஸ்திரேலியா ,ஜெர்மனி , நெதர்லாந்து போன்ற அணிகள்  பலவீனமடைந்த தடுப்பாட்டத்தை எளிதாக உடைத்து விடுகின்றன. இந்த சமயத்தில் அதிக கோல்களும் கூட வாங்க நேரிடுகிறது. அண்மையில் நடந்த  6 நாடுகள் ஹாக்கித் தொடரில் கூட ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனி, அர்ஜென்டினா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக எடுத்தவுடனேயே கோல் வாங்கி விட்டது இந்திய அணி.

மற்றபடி அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கில்லாடிகள். நடுகளத்தில் சர்தார்சிங் மிரட்டுவார். முன்களத்தில் மன்பிரீத் சிங் இருக்கிறார். எஸ்.வி. சுனில் கோல் வாய்ப்புகளை உருவாக்குவர். வி.பி ரகுநாத், ரூபேந்த்ரபால்சிங், ஹர்மன்பிரீத் சிங் ஆகியோர், பெனால்டி கார்னர்களை கோலாக மாற்றுவதில் வல்லவர்கள். இந்த ஒலிம்பிக்கை பொறுத்த வரை, இந்தியா இடம் பெற்றுள்ள பிரிவில், ஜெர்மனி, நெதர்லாந்து, அயர்லாந்து, அர்ஜென்டினா, கனடா, ஆகிய அணிகள் உள்ளன, இதில் ஜெர்மனியையும் நெதர்லாந்தையும்  தவிர மற்ற அணிகள் அனைத்தும் இந்தியாவை விட தரவரிசையில் பின்னால் இருப்பவை.



ரியோவில், ஆகஸ்ட் 6ம் தேதி இந்தியா, அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. பெரிய தொடர்களில் விளையாடும்போது முதலில் வலிமை குறைந்த  அணி கிடைத்தால், அதனை எளிதாக வீழ்த்திக் காட்ட வேண்டும். அந்த அணிகளிடமே தடுமாறினாலோ அல்லது தோற்றாலோ அடுத்தடுத்த போட்டிகளில் ஒரு வித  பதற்றம் பற்றிக் கொள்ளும். இந்த ஒலிம்பிக்கில் அத்தகைய நிலைக்கு இடம் அளிக்காமல் இருப்பது நல்லது.

அயர்லாந்தை தொடர்ந்து பலம் வாய்ந்த ஜெர்மனியை எதிர்கொள்ள வேண்டியது இருக்கிறது. அதனால் முதலில் அயர்லாந்தை எளிதாக வீழ்த்தினால் வீரர்களின்  தன்னம்பிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். பின்னர் அர்ஜென்டினா, நெதர்லாந்து, கனடா அணிகளுடன் ஆட வேண்டும். முதல் சுற்று ஆட்டத்தை பொறுத்தவரை,  அயர்லாந்து, கனடா, அர்ஜென்டினா அணிகளை வீழ்த்தினாலே போதும், காலிறுதிக்கு எளிதாக முன்னேறி விடலாம்.

கடந்த லண்டன் ஒலிம்பிக்கில், கடைசி இடம் பிடித்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த 7 வீரர்கள் இப்போதும் 18 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றுள்ளனர். லண்டன் ஒலிம்பிக்  தந்த வலியை, அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். ரியோ ஒலிம்பிக் அந்த ரணத்திற்கு ஆறுதலாக அமையும் என நம்புவோம்.

36 ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் அணிக்கு ஒரு வாய்ப்பு

சுமார்  36 ஆண்டுகளுக்கு பிறகு,  இந்திய மகளிர் ஹாக்கி அணி  ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இங்கேயும் கேப்டன்தான் பிரச்னை. இதுவரை கேப்டனாக இருந்த ரீத்து ராணி நீக்கப்பட, சர்ச்சை எழுந்தது. ரீத்து, அணியில் இருந்தே நீக்கப்பட்டு விட்டார். 'எந்த காரணமும் இல்லாமல் எந்த விளக்கமும் அளிக்காமல் நீக்கி விட்டனர்' என ரீத்து கண்ணைக் கசக்க, ஹாக்கி சம்மேளனமோ, அவருக்கு பிட்னெஸ் இல்லை என்கிறது.



புதிய கேப்டனாக மணிப்பூரைச் சேர்ந்த சுசீலா சானு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக மகளிர் அணியும் சந்தித்த கஷ்டங்களை சொல்லி மாள முடியாது. எங்கே சென்றாலும் தோல்விதான் துரத்தியது.  இங்கேயும் ஆட்டம் தொடங்கியதும் கோல் வாங்கி விடுவதுதான் பெரிய மைனஸ் பாயிண்ட்.

ஸ்டார் ஃபார்வர்ட், ராம்பால் ராணியை நம்பிதான் அணி இருக்கிறது. கேப்டன் சுசீலா சானு மிகச்சிறந்த தடுப்பாட்ட வீராங்கனை. மகளிர் அணியைப் பொறுத்தவரை அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதே கடுமையான சவாலாகத்தான் தெரிகிறது.

இந்திய மகளிர் அணி,  ஆகஸ்ட் 7 ம் தேதி ஜப்பானை எதிர்கொள்கிறது. 8 ம் தேதி பிரிட்டனையும், 10 ம் தேதி ஆஸ்திரேலியாவையும், 11 ம் தேதி அமெரிக்காவையும், 13 ம் தேதி அர்ஜென்டினாவையும் சந்திக்கிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.