Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 27, 2016

புகார் கொடுக்காத நிலையில் போதையில் குற்றவாளி உளறியதால், ரூ.40 லட்சம் திருட்டு வழக்கில் துப்பு துலங்கியது 4 பேர் கைது


புகார் எதுவும் கொடுக்கப்படாத நிலையில், போதையில் குற்றவாளி உளறியதால் ரூ.40 லட்சம் திருட்டு வழக்கில் துப்பு துலங்கியதாக ருசிகர தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.40 லட்சம் திருட்டு வழக்கு

சென்னை யானைகவுனி போலீஸ் சரகத்தில் உள்ள சவுகார்பேட்டை பொம்மலியர் தெருவில் வசிப்பவர் சுரேந்தர் போத்ரா (வயது 39). தொழில் அதிபரான இவரது தந்தை சம்பத்ராஜ் போத்ரா, தனது சகோதரரின் பேத்தி திருமணத்திற்காக தனது வீட்டு பூஜை அறையில் ரூ.40 லட்சம் பணத்தை ஒரு அட்டை
பெட்டியில் போட்டு வைத்துள்ளார்.

இவர்களது வீட்டில் சீரமைப்பு வேலை நடந்தது. அதில் எலக்ட்ரிக் வேலைக்கு வந்த ஊழியர்கள் எண்ணூரைச் சேர்ந்த சரவணன் (வயது 29), சுதாகர் (22) மற்றும் நவீந்தர் ஆகியோர் சேர்ந்து பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் பணத்தையும் ஓசை இல்லாமல் திருடிச் சென்று விட்டனர். பணம் திருட்டு போன விஷயம், சம்பத்ராஜ் போத்ராவிற்கு தெரியாது. அவர் வட மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு போய் விட்டார்.

போதையில் உளறியதால்.....

இந்த நிலையில் பணத்தை திருடியவர்களில் ஒருவரான சரவணன், கடந்த 6–ந் தேதி அன்று போலீசாரின் வாகன சோதனையில் சிக்கினார். போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதால், யானைகவுனி போலீசார் அவரை பிடித்து வந்தனர். போலீஸ் விசாரணையில், சரவணன் தானும், தனது நண்பர்களும் சேர்ந்து ரூ.40 லட்சம் திருடியதை உளறிவிட்டார். இதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

ரூ.40 லட்சம் திருட்டு போன விஷயம் பற்றி போலீசார் தெரிவித்தபோது, முதலில் சுரேந்தர் போத்ரா, அதுபோல பணம் எதுவும் தங்கள் வீட்டில் திருட்டு போகவில்லை என்று கூறியதாக தெரிகிறது. அதன் பிறகு ஊருக்கு சென்றிருந்த தனது தந்தை சம்பத்ராஜ் போத்ரா சொன்ன தகவல் அடிப்படையில் பூஜை அறையில் வைத்திருந்த ரூ.40 லட்சம் பணம் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது. அதன்
பிறகு யானைகவுனி போலீஸ் நிலையத்தில் ரூ.40 லட்சம் திருட்டு போனது பற்றி புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் போதையில் பணம் திருடியதாக உளறிய சரவணன், அவரது கூட்டாளிகள் சுதாகர், நவீந்தர் ஆகிய 3 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.

மேலும் ஒருவர் கைது

இந்த வழக்கில் சரவணனின் இன்னொரு கூட்டாளி கொருக்குப்பேட்டை சீனிவாசன்(31) என்பவர் நேற்று கைதானார். இந்த வழக்கில் ரூ.12 லட்சம் ரொக்கமாக மீட்கப்பட்டது. கொள்ளை அடித்த பணத்தில் வாங்கிய ஒரு வேன், 4 மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள், தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் 5 சவரன் நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நேர்மையான முறையில் விசாரணை நடத்திய யானைகவுனி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூலியஸ் சீசருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.