Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 25, 2016

பெண்ணுக்கு கொலை மிரட்டல் டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது பிரதமர் மோடிக்கு, கெஜ்ரிவால் கண்டனம்


புதுடெல்லி,

டெல்லியில், பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

கொலை மிரட்டல் 

டெல்லி ஜசோலா நகர் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், அதை சரி செய்யுமாறும் கூறி கடந்த 10–ந் தேதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கானுக்கு போன் செய்துள்ளார். அவருக்கு சரியான பதில் கிடைக்காததால் பின்னர், ஜாமியா நகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு நேரடியாக சென்றார்.

அவரால் எம்.எல்.ஏ.வை சந்திக்க முடியவில்லை. இதனால் அவர் வீடு திரும்ப முயன்றபோது எம்.எல்.ஏ.வின் வீட்டில் இருந்து வெளியே வந்த இளைஞர் ஒருவர், மின்தடை பிரச்சினையை அரசியல் ஆக்காமல் இத்துடன் விட்டுவிடு இல்லை என்றால் உன்னை கற்பழித்து காரை ஏற்றி கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

 போலீசில் புகார்

இது தொடர்பாக அந்த பெண் ஜாமியா நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பின்னர் அந்த பெண், மாஜிஸ்திரேட்டு ஒருவர் முன்பாக தனது வாக்குமூலத்தையும் பதிவு செய்தார். அதில் வீடு திரும்பியபோது, தன்னை காரை ஏற்றிக் கொல்லும் நோக்கத்துடன் ஒருவர் காரை ஓட்டி வந்தார் எனவும், அந்த காரில் அமானத்துல்லா கான் இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக கற்பழித்து விடுவதாக அச்சுறுத்துதல், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கைது 

இந்தநிலையில் நேற்று அமானத்துல்லா கானை விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஜாமியா நகர் போலீசார் அவரை ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் கைது செய்தனர்.

இதுபற்றி அவர் கூறும்போது, சம்பந்தப்பட்ட பெண் எனது வீட்டுக்கு வந்ததே தெரியாது. பா.ஜனதாவினர் தூண்டுதலின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்றார்.

கெஜ்ரிவால் கண்டனம்

தனது கட்சி எம்.எல்.ஏ. கைதுக்கு கண்டனம் தெரிவித்த, முதல்–மந்திரி கெஜ்ரிவால், பிரதமர் மோடி மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வை கைது செய்துள்ளார் என்று டுவிட்டரில் கேலியாக குறிப்பிட்டார்.  இன்னொரு டுவிட்டர் பதிவில் அவர் ‘‘குஜராத்தில் ஆனந்தி பென் அரசு தலித்துகளையும், படேல் இனத்தவரையும் கைது செய்து சிறைக்கு அனுப்புகிறது. மோடி அரசு டெல்லிவாசிகள் மீது போலி வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது. இதற்காக குஜராத், டெல்லி மக்கள் இணைந்து போராட வேண்டும் என்று கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களில் மட்டும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது
குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.