Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 3, 2016

சுற்று சுவருக்கான கதவு அமைப்புகள்


வீடுகளின் வெளிப்புற பாதுகாப்பிற்கு சுற்றுச்சுவர் எழுப்புவது வழக்கத்தில் இருக்கும் நடைமுறையாகும். வீட்டை சுற்றிலும் பிற கட்டிட அமைப்புகள் எவ்வாறு அமைக்கப்பட்டு உள்ளன என்பதை பொறுத்து சுற்றுச்சுவர் நான்கு புறங்களில் அல்லது தேவைப்படும் இடங்களில் மட்டும் கட்டப்படுகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது தனி வீடுகள் ஆகிய கட்டமைப்புகளில் சுற்றுச்சுவர் கட்டுவது அவசியமானது என்பதை கட்டுமான வல்லுனர்கள் வலியுறுத்துகிறார்கள்.

சுற்றுப்புறங்களில் இருக்கும் வாஸ்து குற்றங்களால் வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க சுற்றுச்சுவர்தான் தகுந்த பாதுகாப்பாக இருக்கிறது என்று வாஸ்து சாஸ்திர வல்லுனர்கள் குறிப்பிடுவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ‘காம்பவுண்டு வால்’ என வழங்கப்படும் சுற்றுச்சுவரில் ‘கேட்’ அமைக்கும் முறைகள் பலவிதமாக இருக்கின்றன. அவற்றை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

‘கிரில் கேட்’ வகைகள்

‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’, ‘மைல்டு ஸ்டீல்’, ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடுலர் கேட்’ ஆகிய மூன்று வகைகளில் ‘கிரில் கேட்டுகள்’ இருக்கின்றன.

1. ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ துருப்பிடிக்காத தன்மையும், பயன்படுத்துவதற்கு எளிதாகவும் எடை குறைவான தன்மை கொண்டதாகவும் இருப்பதால் பரவலாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இயல்பாகவே பளபளப்பாக இருக்கும் காரணத்தால் வர்ண பூச்சுகள் மேலே பூச வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அதிகப்படியான பராமரிப்புகளும் இதற்கு தேவைப்படுவது இல்லை.

2. ‘மைல்டு ஸ்டீல்’ வகை கதவுகள் பளபளப்பான தோற்றத்துடன் இருக்காது. அதனால் தகுந்த வண்ண பூச்சுகள் செய்யப்படுவது அவசியமானது. இல்லாவிட்டால் ஈரப்பதம் காரணமாக துருப்பிடிக்கும் அபாயம் இருக்கிறது. வலிமையான, பாதுகாப்பான அமைப்பாக இருப்பதால் எல்லா இடங்களிலும் ‘காம்பவுண்டு கேட்’ என்றாலே இவ்வகை இரும்பு ‘கேட்டுகள்தான்’  பயன்படுத்தப்படுகின்றன.

3. ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடுலர் கேட்’ என்பது துருப்பிடிக்காத இரும்பும், ‘பைபர் சிமெண்டு’ பலகைகள் கொண்டும் வடிவமைக்கப்பட்ட கதவுகள் ஆகும். செலவு அதிகமாக இல்லாமல் சிக்கனமாக ‘காம்பவுண்டு கேட்’ அமைக்க வேண்டும் என்றால் இவ்வகை கதவுகள் பொருத்தமான தேர்வாக இருக்கும்.

‘வெல்டு மெஷ் கேட்’

வெளிப்புற சுவர்களில் அமைக்கப்படும் கதவுகளுக்கு இவை மிகவும் ஏற்றதாகும். காரணம் இது எளிதான கட்டமைப்பு கொண்டதாக உள்ளது. நான்கு புறமும் இரும்பு குழாய்கள் ‘வெல்டிங்’ மூலமாக இணைக்கப்பட்டு அதன்மீது வலுவான இரும்பு வலை பொருத்தப்படுகிறது. எடை குறைவாக இருப்பதால் பயன்படுத்த எளிதாக இருக்கும். சரியான முறையில் தகுந்த வடிவத்தில் அமைப்பதோடு, அழகான ‘பெயிண்டிங்கும்’ செய்துவிட்டால் நல்ல தோற்றத்துடன் இருக்கும்.

திறக்கும் விதங்கள்

‘காம்பவுண்டு கேட்டுகள்’ உட்புறமாக திறப்பவை, வெளிப்புறமாக திறப்பவை, பக்கவாட்டில் இருபுறமும் தள்ளி திறக்கக்கூடியவை என்று பல விதங்களில் இருக்கின்றன. சுவர்களில் ‘கேட்டுகள்’ நிறுத்தப்படுவதற்கு ‘பில்லர்கள்’ அமைத்து அதில் ‘கீல்கள்’ அல்லது கொண்டிகள் பதிக்கப்படுகின்றன. ‘பில்லரின்’ உட்புறமாக கொண்டிகள் அமைத்தால் கதவுகள் உட்புறமாகத்தான் திறக்க இயலும். வெளிப்புறம் அமைக்கப்பட்ட கொண்டிகளில் பொருத்தப்பட்ட கதவுகளை வெளிப்புறமாகத்தான் திறக்க முடியும்.

இட வசதிக்கு வழி 

பில்லரின் மத்தியில் கொண்டிகள் அமைக்கப்பட்டால் இரண்டு புறங்களிலும் திறக்கலாம். தெருவின் வெளிப்புறம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாமல் இருந்தால் வெளிப்புறமாக திறந்து மூடக்கூடிய கதவு அமைக்கலாம். அது வீட்டுக்குள் இடவசதியை ஏற்படுத்தும். பக்கவாட்டில் திறந்து மூடக்கூடிய ‘ஸ்லைடிங் டோர்’ அமைப்பதாலும் இடப்பிரச்சினை வராது. ஆனால் சரியான பராமரிப்புகளை அவ்வப்போது செய்து வரவேண்டியது அவசியமானதாக இருக்கும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.