Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 6, 2016

குழந்தைகளுக்குத் தண்டனை கொடுப்பவர்களுக்கு ஒரு பாடம்.


ஜப்பானைச் சேர்ந்த 7 வயது யமடோ டானூகா, 6 நாட்களுக்குப் பிறகு அடர்ந்த காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டிருக்கிறான். குறும்பு அதிகம் செய்வதால், அவனுக்குத் தண்டனை அளிக்கும் விதத்தில், காட்டுக்குள் அவனது பெற்றோர் இறக்கிவிட்டனர். காரை எடுத்துக்கொண்டு கிளம்பினர். சில நிமிடங்களில் அவர்கள் திரும்பி வந்தபோது யமடோ அங்கே இல்லை. அவனைத் தேடி அலைந்தார்கள். அடர்ந்த காட்டுக்குள் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வேறு வழியின்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அடர்ந்த மரங்கள், கடுமையான குளிர், கரடி போன்ற விலங்குகள் வசிக்கும் காட்டில் ஒரு சிறுவன் தனியாக மாட்டிக்கொண்டதை நினைத்து எல்லோருக்கும் பதற்றம் ஏற்பட்டது. 180 ராணுவ வீரர்கள் யமடோவை மீட்கும் பணியில் இறங்கினர். ஆனால் எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆறாவது நாள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாருமற்ற ஓர் அறையில் யமடோ கண்டுபிடிக்கப்பட்டான். ராணுவ வீரரைப் பார்த்தவுடன் தண்ணீரும் ரொட்டியும் சாப்பிடக் கொடுக்கும்படிக் கேட்டான். ஆரோக்கியமான சிறுவன் என்பதால் 6 நாட்கள் உணவின்றி இருந்திருக்கிறான். உணவு கொடுத்தவுடன், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான் யமடோ. ‘‘குழந்தையைத் திருத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு காரியத்தில் இறங்கியது மிகவும் தவறு. என் குழந்தை இந்த ஆறு நாட்களில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான்… என்னால் இந்த வலியை எப்போதும் மறக்க முடியாது. எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். என் குழந்தையை மீட்டுக் கொடுத்த அனைவருக்கும் நன்றி’’ என்று அழுதார் யமடோவின் அப்பா டானூகா. புத்திசாலி என்பதால் பத்திரமான இடத்தில் தங்கிவிட்டான் யமடோ.

குழந்தைகளுக்குத் தண்டனை கொடுப்பவர்களுக்கு ஒரு பாடம்.

கொலம்பியாவில் வசிக்கும் ஜோசப் ஃபுல்லர், தன் பேரனை அழைத்து வருவதற்காகப் பள்ளிக்குச் சென்றார். பேரனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கும் வந்து சேர்ந்தார். ஆனால் வீட்டுக்கு வந்தவுடன் தான் அழைத்து வந்தது வேறொரு சிறுவன் என்று அறிந்தார்! ‘‘6 வயது பேரனை அழைத்து வருவதற்காகப் பள்ளிக்குச் சென்றேன். பள்ளி ஜிம்மில் இருந்து ஒரு சிறுவன் வெளியே வந்தான். நான் அவன்தான் என் பேரன் என்று நினைத்துவிட்டேன். அவனைப் பார்த்தவுடன் கட்டிப் பிடித்து, வீட்டுக்குப் போகலாமா என்று கேட்டேன். அவனும் ஆர்வத்துடன் சரி என்றான். அலுவலக உதவியாளர் ஒருவர், சிறுவனைப் பார்த்து இவர் உன் தாத்தாவா என்று கேட்டார். அதற்கும் அவன் ஆமாம் என்றான். புத்தகத்தில் கையொப்பமிட்டுவிட்டு, சிறுவனை அழைத்துக்கொண்டு கிளம்பினேன். காரில் என் மனைவி எங்களுக்காகக் காத்திருந்தார். அவரும் சிறுவனை நன்றாகக் கவனிக்கவில்லை. முன் இருக்கையில் இருந்து, மெக்டொனால்டில் வாங்கி வைத்த மதிய உணவைக் கொடுத்தார். பின் இருக்கையில் இருந்த சிறுவன் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டு முடித்தான். வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். அவன் சிரிப்பை இப்போதுதான் நன்றாகக் கவனித்தேன். ஓட்டைப் பல்! என் பேரனுக்கு ஓட்டைப் பற்கள் கிடையாது. உடனே அவனை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு விரைந்தேன். அவர்களிடம் என் செயலுக்கு மன்னிப்புக் கேட்டேன். அதற்குள் காவலர்கள் வந்துவிட்டனர். அவர்கள் விசாரித்துவிட்டு, இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி முடி வெட்டியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட உருவமும் அப்படி இருக்கிறது. ஆனால் எடையோ, உயரமோ ஒன்றாக இல்லை என்றனர். அந்தச் சிறுவனின் அம்மா, என்னைப் போலவே அவனின் தாத்தாவும் இருப்பதால் அவனும் குழப்பம் அடைந்துவிட்டான் என்றார். நீண்ட நேர விசாரணைக்குப் பின் இது தற்செயலாக நடந்த தவறு என்று எல்லோரும் ஒப்புக்கொண்டனர். பள்ளியில் இன்னும் கவனமாகக் குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பல் மட்டும் உடையவில்லை என்றால் அவனை அடையாளம் கண்டுபிடிக்க இன்னும் நிறைய நேரம் தேவைப்பட்டிருக்கும். ஒருவழியாக என் பேரனுடன் வீடு திரும்பினேன்’’ என்கிறார் ஜோசப் ஃபுல்லர்.

சினிமாவில் வரும் ஆள் மாறாட்ட காமெடி போல இருக்கே!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.