June 14, 2017
அப்பா.... அப்பா....சிந்தனை சிறுகதை
கி.பி 1798ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதியன்று நடந்த சம்பவம்.
பிரெஞ்சு சக்கரவர்த்தியான நெப்போலியனின் உத்தரவுப்படி எல்.ஓரியண்ட் என்னும் கப்பலொன்று, மத்திய தரைக்கடலில் ஊடுருவியது. அந்தக் கப்பலின் கேப்டனாக விளங்கியவர் காசாபியான்கா. அவர் அன்றைய தினம் தன்னுடைய பதின்மூன்றே வயது நிரம்பிய மகன் கியாகோமாவையும் கப்பலில் அழைத்து வந்திருந்தார்.
அவர் கப்பல் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது தன் மகனை அழைத்துப் பாதுகாப்பான ஓரிடத்தில் அமர்த்திவிட்டு, "மகனே, எந்தச் சூழ்நிலை கப்பலில் ஏற்பட்டாலும், நீ இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது. நானே வந்து உன்னைக் கூட்டிச் செல்லும்வரை இங்கேயே இரு... எங்கேயும் போய்விடக்கூடாது!' என்று கூறிவிட்டுத் தன் பணிகளில் மும்முரமானார்.
பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல்களில் ஒன்றான எல்.ஓரியண்ட் மத்திய தரைக்கடல் வழியே ஊடுருவித் தங்களைத் தாக்க வருவதை ஆங்கிலேயக் கப்பற்படை அட்மிரல் நெல்ஸன் அறிந்தார். எனவே, அவர் தங்கள் பிரிட்டிஷ் படைக்கு சொந்தமான கப்பல்களால் எல். ஓரியண்ட்டைச் சுற்றி வளைத்துத் தாக்கத் துவங்கினார்.
ஆனால், எல்லாவற்றுக்கும் ஈடு கொடுத்த நெப்போலியச் சக்கரவர்த்தியின் கப்பல் அந்த எதிர்ப்புகளை முறியடித்தவாறு முன்னேறிக் கொண்டே இருந்தது. ஆங்கிலேயப் படைகள் ஆத்திரமடைந்து எல்.ஓரியண்ட் கப்பலை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கிகளினால் சுட்டனர்.
இதனால் எல்.ஓரியண்ட் கப்பல் தீப்பிடித்துக் கொண்டது. கப்பலின் கேப்டனாக இருந்த காசாபியான்கா படுகாயமடைந்தார். தீ கொழுந்து விட்டு எரிந்த வாறே, மளமளவென்று கப்பலின் எல்லாப் பகுதி களுக்கும் பரவியது.
இதனைப் படுகாயத்துடன் பார்த்த காசாபியான்கா இனியும் கப்பலைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்று தெரிந்து கொண்டார். ஆகவே, அவர் உரத்த குரலில், "கப்பலை அழித்து விடுங்கள்!' என்று தன் படைகளுக்கு ஆணையிட்டார்.
அந்த வேளையில் தன்னுடைய பதின்மூன்று வயது மகனான கியாகோமாவைத் தான் கப்பலில் கூட்டி வந்திருக்கிறோம் என்ற விஷயத்தை அவர் மறந்துவிட்டார்.
தன்னுடைய மகன் தன் வார்த்தையை மீறாதவன் என்பதும், கட்டுப்பாடுடையவன் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தும் அவனை மறந்து போனார். கடுமையான காயங்கள், அவர் உத்தரவிட்டதும், உயிரைக் குடித்து விட்டன. கப்பலில் பிணமானார் அவர்.
தீ வேகமாகப் பரவி வந்ததைச் சிறுவன் பார்த்தான். ஆனால், தன்னுடைய தந்தை எந்தச் சூழ்நிலையிலும் இருந்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்றல்லவா உத்தரவிட்டிருக்கிறார் என்ற எண்ணம் அவனுள் பிறந்தது.
பயத்துடன் தீயைப் பார்த்தவாறே, "அப்பா, அப்பா! எங்கே இருக்கிறீர்கள்?' என்று அலறினான். ஒரு சில விநாடிகளில் தீயானது அவன் இருந்த பகுதிக்குப் பரவியது. வெடி மருந்துக் கிடங்கு அருகேதான் இருந்தது. அந்த இடத்திலும் தீப்பற்றியது.
இதன் காரணமாக, அந்தப் கப்பல் மிகப் பிரம்மாண்டமான சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அதிலிருந்து சிறுவன் வெடித்துச் சிதறி மத்தியத்தரைக்கடலில் மூழ்கினான்.
"தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்று கடந்த சில நூற்றாண்டுகளுக்குள்ளே நிரூபித்துக் காட்டிய கியோகோமாவின் மனத்துணிவும், வீரமும், உறுதியும் இன்று வரை பிரெஞ்சு தேசத்தில் போற்றப்படுகிறது.
இந்தத் தீரத்தைக் கேள்விப்பட்ட ஆங்கிலக் கவிஞரான பெலிஸியா ஹொமான்ஸ் சிறுவனான கியாகோமாவைப் புகழ்ந்து, நீண்ட கவிதை ஒன்றை எழுதி அஞ்சலி செய்தார்.
பிரெஞ்சின் கியோகோமாவும், அவன் புகழ் பாடிய ஆங்கிலக் கவிஞன் பெலிஸியா ஹொமான்ஸின் கவிதையும் இன்றுவரை புகழுக்குரியதாக விளங்குகின்றன.
அப்பா.... அப்பா....சிந்தனை சிறுகதை
Reviewed by Priya Anand
on
June 14, 2017
Rating: 5
Reviewed by Priya Anand
on
June 14, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.