Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 8, 2016

போனஸ் புள்ளியுடன் ஆஸி.யை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா


மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் போனஸ் புள்ளியுடன் வெற்றி பெற்றுள்ளது.

கயானா பிட்ச் ஸ்பின்னுக்குச் சாதகமாக இருப்பதால் தாஹிர், பேங்கிஸோ, ஷம்சி ஆகிய 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து பிஹார்டியனின் அபாரமான 62 ரன்களால் 112/6 என்ற நிலையிலிருந்து 189 ரன்களுக்கு உயர்ந்தது. பிஹார்டியனின் இந்த இன்னிங்ஸ்தான் தென் ஆப்பிரிக்க அணியின் நேற்றைய வெற்றிக்கு முக்கியமானதாக அமைந்தது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 34.2 ஓவர்களில் 142 ரன்களுக்குச் சுருண்டது. ரபாதா 7 ஓவர்களில் 13 ரன்களுக்கு 3 விக்கெடுகளைச் சாய்த்தார்.

தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களில் மிகவும் அச்சுறுத்தியவர் சைனமன் பவுலர் தாப்ரைஸ் ஷம்சி ஆவார். இது இவரது அறிமுக போட்டி. ஆனால் மிகவும் அபாயகரமான ஒரு பவுலர் இவர் என்பது நேற்று தெரியவந்தது. ஒவ்வொரு பந்துமே விக்கெட் வீழ்த்தும் அச்சுறுத்தலை ஆஸ்திரேலியாவுக்கு ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது. அவர் 8 ஓவர்களில் 36 ரன்களுக்கு 1 விக்கெட் எடுத்தார் என்ற ஸ்கோர் விவரம் நிச்சயம் அவரது பந்து வீச்சுத் திறமைக்கு நியாயம் செய்வதாகாது.

மேலும் நடுவர் தீர்ப்புகளும் விளையாடிவிட்டன. ஆஸ்திரேலியாவில் அதிகபட்ச ஸ்கோரை எடுத்த ஏரோன் பிஞ்ச் (72), மற்றும் மேத்யூ வேட் விக்கெட்டுகளை ஷம்சி கைப்பற்றியிருக்க வேண்டும், இரண்டு எல்.பி.முறையீடுகளையும் நடுவர் தவறாக நிராகரித்தார், இரண்டுமே அவுட்.

ஆனால் ஷம்சி வருவதற்கு முன்னரே வெய்ன் பார்னெல் மிக முக்கியமான விக்கெட்டை தனது முதல் ஓவரிலேயே வீழ்த்தினார், இதுதான் திருப்பு முனை, கிட்டத்தட்ட ஜூலை 2015-க்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்துள்ள இடது கை வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பார்னெல், அபாய வீரர் டேவிட் வார்னரை 1 ரன்னிற்கு எல்.பி. செய்து வெளியேற்றினார். பிறகு இவர் மீண்டும் 8-வது ஓவரில் கேப்டன் ஸ்மித் (8) விக்கெட்டை எல்.பி.மூலம் வீழ்த்தினார்.

ஆனால் இதற்கிடையே நல்ல பார்மில் இருக்கும் உஸ்மான் கவாஜாவை 2 ரன்களில் ரபாதா அருமையான பந்தின் மூலம் பவுல்டு செய்தார். நல்ல வேகத்தில் கவாஜா பீட் ஆனார். ஷம்சியின் முதல் விக்கெட்டானா கிளென் மேக்ஸ்வெல் மிட்செல் மார்ஷ் (8), இம்ரான் தாஹிர் பந்தை கட் செய்ய கேட்ச் கொடுத்து வெளியேறினார். 17-வது ஓவரில் 72/5 என்று ஆஸ்திரேலியா திணறியது.

ஏரோன் பிஞ்ச் மட்டுமே ஒருமுனையில் இருந்தார் அவர் 58 பந்துகளில் தனது அரைசதத்தை எடுத்தார். பிறகு டிவில்லியர்ஸ் பிடியை விட்டுக் கொடுக்காமல் ரபாதாவை பந்து வீச அழைத்தார். மேத்யூ வேட், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, கூல்ட்டர் நைலை இன்ஸ்விங்கிங் யார்க்கரில் பவுல்டு செய்தார் ரபாதா, ஆஸ்திரேலியா 85/7. ஆடம் சாம்பாவை இம்ரான் தாஹிர் வீழ்த்த 90/8. அதன் பிறகு நேதன் லயன் 31 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து கடைசியில் பாங்கிசோவிடம் எல்.பி. ஆனார். முன்னதாக ஏரோன் பிஞ்ச் 103 பந்துகளில் 6 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 72 ரன்களெடுத்து 9-வது விக்கெட்டாக பேங்கிசோவிடம் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியா 142 ரன்களுக்குச் சுருண்டது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாதா 3 விக்கெட்டுகளையும் பார்னெல், தாஹிர், பேங்கிசோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முன்னதாக ஸ்பின் பிட்சில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட், கூல்டர் நைல் எப்படி வீச வேண்டும் என்று கற்றுக் கொடுப்பது போல் வீசினர். ஸ்டம்புக்கு வீசினர் லேசாக ஸ்விங் ஆனது. குவிண்டன் டி காக் (18) விக்கெட்டை ஹேசில்வுட் எல்.பியில் வீழ்த்தினார். டிவில்லியர்ஸ் (22), டுமினி (13) ஆகியோரை இரு எதிரெதிர் பந்துகளில் பவுல்டு செய்தார் கூல்டர் நைல். முதல் 25 ஓவர்களில் டாப் 5 பெவிலியன் திரும்ப, ஃபர்ஹான் பிஹார்டியனின் அபார ஆட்டம் கைகொடுத்தது. இவர் பேங்கிசோ, ரபாதா ஆகியோருடன் இணைந்து முறையே 37 மற்றும் 39 ரன்கள் கூட்டணி அமைத்தார். முன்னதாக ஆம்லாவும், டிவில்லியர்ஸும் இணைந்து சேர்த்த 40 ரன்கள்தான் இந்தப் போட்டியில் அதிகபட்ச கூட்டணி ரன்களாகும். ஆட்ட நாயகனாக பிஹார்டியன் தேர்வு செய்யப்பட்டார்.

முதல் முறையாக தென் ஆப்பிரிக்க அணியில் 8 வீரர்கள் வெள்ளையரல்லாதாரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.