Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 1, 2016

கடலுக்குச் சென்று திரும்பிய ராமேசுவரம் மீனவர்களின் மகிழ்ச்சியும், ஏமாற்றமும்


45 நாட்கள் தடை காலத்திற்கு பின்பு ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் அதிக அளவு இறால் மீன்கள் கிடைத்தும் தகுந்த விலை கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளனர்.

ஒரு மீனவரின் வலையில் சிக்கிய 110 கிலோ எடை கொண்ட ராட்சத திருக்கை மீனை படத்தில் காணலாம்

கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி வரை உள்ள 45 நாட்கள் மீன்கள் இனப் பெருக்க காலமாக இருந்ததால் விசைப்படகு மீனவர்களுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த 29-ந்தேதியுடன் 45 நாள் தடை காலம் முடிவடைந்தது.

இதையடுத்து ராமேசுவரத்தில் இருந்து ஏராளமான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். பின்னர் மீனவர்கள் அனைவரும் நேற்று காலை பல வகை மீன்களுடன் மகிழ்ச்சியோடு கரை திரும்பினர்.

தடை காலத்திற்கு பின்பு ஒவ்வொருவரின் படகிலும் சராசரியாக அவர்கள் அதிகம் எதிர்பார்த்து சென்ற இறால் மீன்கள் 150 கிலோவில் இருந்து 200 கிலோ வரையில் கிடைத்தன. அதுவும் ஒவ்வொரு இறாலும் வழக்கத்தை விட பெரிய அளவில் இருந்தன.

இதுதவிர நண்டு 20-லிருந்து 30 கிலோ வரையிலும், கணவாய் மீன் 30 கிலோவில் இருந்து 40 கிலோ வரையிலும் கிடைத்துள்ளன. இதை தவிர சங்காயம் போன்ற மீன்கள் 500 கிலோவில் இருந்து 1 டன் வரையிலும் கிடைத்தன.

தடை காலத்தையொட்டி வெறிச்சோடி காணப்பட்ட கடற்கரை, மீனவர்கள் மீன் பிடித்து கரை திரும்பியதால் காலை முதல் களைகட்டி இருந்தது. மீனவர்கள் இறால் மீன்களை பிரித்தெடுப்பதிலும், மீன்களை வியாபாரிகளிடம் கொடுப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

45 நாட்களாக களையிழந்து காணப்பட்டு வந்த ராமேசுவரம் துறைமுக கடற்கரை பகுதி நேற்று முதல் மீண்டும் களைகட்டி உள்ளது. மீனவர்களுக்கு இறால் மீன்கள் 150 லிருந்து 200 கிலோ வரை கிடைத்தும் இறால் மீனுக்கு உரிய விலை கிடைக்காததால் ஒட்டு மொத்த மீனவர்களும் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

தடை காலத்திற்கு முன்பு, மீனவர்கள் பிடித்து வந்த இறால் மீன்களை கிலோ ஒன்றுக்கு ரூ.750 வரை விலைக்கு வாங்கியுள்ளனர்.

ஆனால் நேற்று மீனவர்கள் பிடித்து வந்த இறால் மீன்கள் கிலோ ரூ.500-க்கே விலை போயின. இறால் மீன்கள் அதிகம் கிடைத்திருந்தாலும் கணவாய், நண்டு, சங்காயம், திருக்கை மீன்கள் போன்றவை வழக்கத்தை விட மிக குறைவாகவே கிடைத்துள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி எமரிட் கூறியதாவது:-

தடைக்காலம் முடிந்து 45 நாட்களுக்கு பிறகு மீன் பிடித்து வந்ததில் ஒவ்வொரு படகிலும் சராசரியாக இறால் மீன்கள் 100 கிலோவில் இருந்து 200 கிலோ வரையிலும் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு இறால் மீன்கள் ஓரளவு கணிசமாக கிடைத்துள்ளன.

ஆனால் இந்த மீன்களை கம்பெனிக்காரர்கள் மிகக் குறைவான விலைக்கே வாங்கியுள்ளனர்.

இறால் மீனின் விலையை இடைத்தரகர்கள் மூலம் கம்பெனிக்காரர்கள் குறைத்து விலை நிர்ணயம் செய்து விட்டனர். இதனால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளோம். கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது கணவாய், நண்டு, சங்காயம் மீன்களும் குறைவாகவே கிடைத்துள்ளன. ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தான் இறால் மீன்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன.

மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீனின் விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்த மீனவர்கள் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம்.

இதே போல் பாம்பனில் இருந்து கடந்த 29-ந்தேதி இரவில் சுமார் 80-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் கரை திரும்பினார்கள். இதில் ஒவ்வொரு படகிலும் இறால் மீன்கள் 200-லிருந்து 250 கிலோ வரை கிடைத்துள்ளன. ஆனால் இறால் மீனின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு விலை வீழ்ச்சி அடைந்ததால் பாம்பன் மீனவர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.