Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 30, 2016

பெரும்பாலான தே.மு.தி.க. தொண்டர்கள் தி.மு.க.வுக்கு வந்துவிட்டார்கள்: தமிழக அரசியலில் விஜயகாந்தை யாரும் திரும்பிக்கூட பார்க்க வில்லை தி.மு.க.வில் இணைந்த பின் வி.சி. சந்திரகுமார் பேட்டி


தே.மு.தி.க. தொண்டர்கள் பெரும்பாலானோர் தி.மு.க.வுக்கு வந்து விட்டனர் எனவும், தமிழக அரசியலில் விஜயகாந்தை யாரும் திரும்பிக்கூட பார்க்கவில்லை என்றும் தி.மு.க.வில் இணைந்துள்ள வி.சி.சந்திரகுமார் கூறினார்.

கருணாநிதியுடன் சந்திப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. 3–வது அணியான மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களாக இருந்த வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோர் தே.மு.தி.க.வில் இருந்து வெளியேறி மக்கள் தே.மு.தி.க. என்ற அமைப்பை தொடங்கினர். பின்னர் அவர்கள் தி.மு.க.வுடன் சேர்ந்து 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.

அவர்கள் தங்கள் நிர்வாகிகளுடன் நேற்று கோபாலபுரம் இல்லத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

இணைப்பு விழா
அதைத் தொடர்ந்து மக்கள் தே.மு.தி.க. அமைப்பாளர் வி.சி.சந்திரகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– தே.மு.தி.க.வின் நிலைமை எப்படி இருக்கிறது?

பதில்:– தே.மு.தி.க.வின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நிர்வாகிகளும், தொண்டர்களும் எதுவும் பேச முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து, தே.மு.தி.க. அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து வருகிற ஜூலை 17–ந் தேதி சேலத்தில் மாபெரும் இணைப்பு விழா நடத்த உள்ளோம். அதில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முன்னிலை வகிக்க உள்ளார். மக்கள் தே.மு.தி.க. கலைக்கப்படவில்லை. தி.மு.க.வுடன் இணைக்கப்படுகிறது.

திரும்பிக்கூட பார்க்கவில்லை
கேள்வி:– தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தி.மு.க.வில் சேரமாட்டேன் என நிர்வாகிகளிடம் கூறியிருப்பதாக தகவல் வருகிறதே?

பதில்:– அவர் கூறியிருப்பதை பார்த்தால், தி.மு.க. அவரை எதிர்பார்த்து காத்திருப்பது போலவும், அவர் வரமாட்டேன் என்று கூறுவது போலவும் உள்ளது. அவரை யாரும் இங்கே கூப்பிடவில்லை. பெரும்பாலான தொண்டர்கள் இங்கே(தி.மு.க.) வந்து விட்டார்கள். தமிழக அரசியலில் விஜயகாந்தை யாரும் திரும்பிக்கூட பார்க்க வில்லை.

கேள்வி:– என்னுடைய ராஜதந்திரத்தினால் தான் தி.மு.க. தோல்வி அடைந்ததாக வைகோ கூறியிருக்கிறாரே?

பதில்:– இதை தான் நான் மக்கள் நலக்கூட்டணி உருவாவதற்கு முன்பே கூறினேன். 3–வது அணியில் தே.மு.தி.க. சேர்ந்ததால் தான் நாங்கள் வெளியேறினோம். தற்போது வைகோ இதுபோன்று கூறியிருப்பது, பூனைக்குட்டி வெளியில் வந்த கதையாக உள்ளது.  இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

சந்தி சிரிக்கிறது
முன்னதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சந்தி சிரிக்கிறது என்று பதில் அளித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.