Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 3, 2016

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கடத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி


கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் கடத்தப்பட்ட குழந்தைகள் எத்தனை? என்றும், அதில் எத்தனை குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன? என்றும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

குழந்தை கடத்தல்
சென்னையில் சாலையோரத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருக்கும் பல குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், அந்த குழந்தைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் பார்த்திபன், எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த எம்.பி.நிர்மல் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் புகார் செய்தனர்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த எம்.பி.நிர்மல், ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

ஆஜர்படுத்த வேண்டும்
அந்த மனுவில், ‘சென்னை எஸ்பிளனேடு பகுதியில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த 8 மாத குழந்தை விமல் கடத்தப்பட்டான். சில நாட்களுக்கு பின்னர் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த மற்றொரு 9 மாத குழந்தை சரண்யா கடத்தப்பட்டாள்.

இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் வசதியில்லாதவர்கள். அவர்களால் குழந்தைகளை தேடி கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமானது. போலீசாரும் கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடித்து மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த இரு குழந்தைகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

கால அவகாசம்
இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, கடத்தப்பட்ட குழந்தைகளை ஜூன் 2–ந் தேதி ஆஜர்படுத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த கால அவகாசம் வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘குழந்தைகள் கடத்தல் என்பது சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்சினை. இதை எளிதான விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது’ என்று கருத்து தெரிவித்தனர்.

எத்தனை வழக்குகள்?
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

இந்த வழக்கில் 3–வது எதிர்மனுதாரராக தமிழக உள்துறை செயலரை தாமாக முன்வந்து சேர்க்கின்றோம். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளன? குழந்தை கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? அந்த வழக்குகளில் எத்தனை குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் குழந்தைகள் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை? எத்தனை வழக்குகள் புலன் விசாரணையில் உள்ளன? இந்த கேள்விகளுக்கு எல்லாம் தமிழக உள்துறை செயலர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற ஜூன் 16–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.