Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 6, 2016

வருகிறது அடுத்த தேர்தல்


ஜனநாயகத்தின் வலிமையே, மக்களுக்கு இருக்கும் அதிகாரம்தான்.
தங்களை ஆள்பவர்களை தாங்களே தேர்ந்து எடுக்கும் உரிமையை ஜனநாயகம் மக்களுக்கு வழங்கி  இருக்கிறது.

பல்வேறு இன மக்கள், மொழிகள், மாறுபட்ட கலாசாரங்கள், பழக்க வழக்கங்களை கொண்ட மாபெரும் தேசமான இந்தியாவில் ஆட்சியாளர்களின் அழுத்தம், அடக்குமுறை இன்றி ஜனநாயகம் எப்படி நிலைத்து இருக்கிறது? என்று உலகில் உள்ள பல நாடுகள் இப்போதும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன.

வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் பலம். பல்வேறு இன மக்கள் வசித்தாலும் நமது ஆட்சி முறை அவர்களை ஒன்றாக பிணைத்து வைத்திருக்கிறது.

ஜனநாயக இந்தியாவில் அதிகாரம் பரவலாக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்றம், மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் என்று டெல்லியில் இருந்து கிராமங்கள் வரை அதிகாரங்கள் பரவி வலுவாக வேறூன்றி இருக்கிறது.

பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களையும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களையும் இந்திய தலைமை தேர்தல் கமிஷன் நடத்துகிறது. தேர்தல் கமிஷன் மூலம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த தேர்தல்களை மாநிலத்தில் நடத்தி முடிக்கும் பணியை இவர் மேற்கொள்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை மாநில அரசால் நியமிக்கப்பட்ட மாநில தேர்தல் கமிஷன் நடத்துகிறது. இது தன்னாட்சி பெற்ற அமைப்பு ஆகும்.

உள்ளாட்சி தேர்தல்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் சமீபத்தில்தான் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஏற்கனவே பதவியில் இருந்த அ.தி.மு.க.வே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்கிறது. தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்து உள்ளது.

சட்டசபை தேர்தலை தொடர்ந்து, அடுத்த தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வருகிறது. ஆம்... இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன.

தமிழ்நாட்டில் கடைசியாக 2011–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு, அக்டோபர் மாதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. உள்ளாட்சி அமைப்புகளின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற அக்டோபர் மாதத்துடன் முடிவடைய இருப்பதால் அவற்றுக்கான தேர்தல் அதற்கு முன்னதாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 467 உள்ளாட்சி பதவி இடங்கள் உள்ளன.

மாநகராட்சி மேயர்களையும், கவுன்சிலர்களையும் (வார்டு உறுப்பினர்கள்) வாக்காளர்கள் நேரடியாக ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுக்கிறார்கள். எனவே மாநகராட்சி பகுதியில் உள்ள வாக்காளர்கள் மேயர், கவுன்சிலர் பதவிகளுக்கு என 2 ஓட்டுகள் போடுவார்கள்.

மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிக மக்கள் தொகை மற்றும் வருவாய் கொண்ட ஊர்கள் நகராட்சிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. நகராட்சி தேர்தலில் அந்த பகுதியில் உள்ள வாக்காளர்கள் தலைவர் பதவிக்கு ஒரு ஓட்டும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ஒரு ஓட்டும் என மொத்தம் 2 ஓட்டுகள் போடுவார்கள்.

தமிழகத்தில் உள்ள நகராட்சிகள் சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என தரம் பிரிக்கப்பட்டு உள்ளன.

நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிக மக்கள் தொகையுடன் அதிக வருவாய் கொண்ட ஊர்கள் பேரூராட்சிகள் ஆகும். அதாவது 5 ஆயிரத்துக்கு மேல் 30 ஆயிரம் வரையிலான மக்கள் தொகை கொண்ட ஊர்கள் பேரூராட்சிகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. பேரூராட்சி தலைவரும், உறுப்பினர்களும் தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

500–க்கும் அதிகமாக மக்கள் தொகையை கொண்ட ஊர்கள் ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. ஊராட்சி தலைவரும் உறுப்பினர்களும் வாக்காளர்களால் நேரடியாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

சில கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியது ஊராட்சி ஒன்றியம். ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் ஓட்டுப் போட்டு ஊராட்சி ஒன்றிய தலைவரையும், துணைத்தலைவரையும் தேர்வு செய்வார்கள்.

மாவட்ட அளவில் ஊராட்சிகளை சேர்த்து உருவாக்கப்பட்டது மாவட்ட ஊராட்சி. தமிழ்நாட்டில் 32 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இதற்கான உறுப்பினர்களும் ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2011–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் 19 ஆயிரத்து 646 பேர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதால், மீதம் உள்ள இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

முதல் கட்டமாக 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள் மற்றும் 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் அந்த பகுதியில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கும் அக்டோபர் 17–ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

இரண்டாவது கட்டமாக மீதம் உள்ள 64 நகராட்சிகள்,  270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் அந்த பகுதியில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கும் அக்டோபர் 19–ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்த தேர்தலில் 10 மாநகராட்சிகளையும், 89 நகராட்சிகளையும், 285 பேரூராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது. உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலான உறுப்பினர் பதவிகளையும் அக்கட்சியே கைப்பற்றியது.

சட்டசபை தேர்தல் முடிந்து தங்களை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டுள்ள அரசியல் கட்சிகள், அடுத்ததாக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.

பாராளுமன்ற, சட்டசபை தேர்தலைகளைப் போன்று அல்லாமல், உள்ளாட்சி தேர்தலில் உள்ளூர் பகுதிகளில் செல்வாக்கு பெற்றவர்களின் தாக்கமும் எதிரொலிக்கும். எனவே கட்சி ரீதியாக நடைபெறும் தேர்தல்களில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் கூடுதல் கவனம் செலுத்தும்.

2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 23 தொகுதிகளில் வெற்றி பெற்ற தி.மு.க. இந்த தேர்தலில் 89 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. அ.தி.மு.க. வசம் உள்ள சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. எனவே நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்பதில் அக்கட்சி மிகவும் தீவிரமாக இருக்கிறது.

பொதுவாக மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் கட்சியைச் சேர்ந்தவர்களே மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளிலும் பொறுப்பில் இருந்தால், தங்கள் பகுதிகளுக்கு நலத்திட்டங்கள் எளிதில் கிடைக்கும் என்று வாக்காளர்கள் கருதுவது உண்டு. இந்த நிலைப்பாடு அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது.

 உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாதபட்சத்தில் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளவும் கூடும்.

உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் போதுதான் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? அல்லது தங்கள் பலத்தை நிரூபிக்க தனித்தனியாக களம் இறங்குமா? என்பது தெரிய வரும்.

12 மாநகராட்சிகளும் அ.தி.மு.க. வசம்

தமிழ்நாட்டில் மொத்தம் 12 மாநகராட்சிகள் உள்ளன. கடந்த 2011–ம் ஆண்டு தேர்தல் நடந்த போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகளே இருந்தன. அப்போது நடந்த தேர்தலில் 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது. அக்கட்சியை சேர்ந்தவர்களே மேயர்களாக இருந்து வருகிறார்கள்.

அதன்பிறகு, நகரசபைகளாக இருந்த தஞ்சையும், திண்டுக்கல்லும் மாநகராட்சிகளாக மாற்றப்பட்டன. அந்த மாநகராட்சிகளும் அ.தி.மு.க. வசமே உள்ளன.

12 மாநகராட்சிகளில் சென்னை மாநகராட்சியில்தான் அதிகபட்சமாக 200 வார்டுகள் உள்ளன. இந்த 200 வார்டுகளில் அ.தி.மு.க. 168 வார்டுகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க.வுக்கு 24 வார்டுகளும், காங்கிரசுக்கு 2 வார்டுகளும், ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு வார்டும் கிடைத்தன. 3 வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.

மேயர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த சைதை துரைசாமி 12 லட்சத்து 40 ஆயிரத்து 340 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மா.சுப்பிரமணியனுக்கு 7 லட்சத்து 20 ஆயிரத்து 593 வாக்குகள் கிடைத்தன. வேல்முருகன் (தே.மு.தி.க.) 1 லட்சத்து 42 ஆயிரத்து 203 வாக்குகளும், சைதை ரவி (காங்கிரஸ்) 62 ஆயிரத்து 772 வாக்குகளும், ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.) 47 ஆயிரத்து 327 வாக்குகளும், என்.மனோகரன் (ம.தி.மு.க.) 36 ஆயிரத்து 418 வாக்குகளும், அமீர் ஹம்சா (விடுதலை சிறுத்தை கூட்டணி) 16 ஆயிரத்து 170 வாக்குகளும் பெற்றனர்.

2011–ம் ஆண்டு தேர்தலுக்கு முன் சென்னை மாநகராட்சியில் 155 வார்டுகள்தான் இருந்தன. பின்னர் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டு 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதனால் வார்டுகளின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது.

காங்கிரஸ், பா.ம.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை

தமிழ்நாட்டில் மொத்தம் 125 நகரசபைகள் உள்ளன. கடந்த 2011–ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்த போது ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவில் நகரசபை வேட்பாளர் மரணம் அடைந்ததால், அந்த நகரசபை தலைவர் தேர்தல் நடைபெறவில்லை.

இதனால் மற்ற 124 நகரசபை தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் மற்றும் பா.ம.க. ஆகிய இரு கட்சிகளும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.