Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 2, 2016

தங்களை பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்ததால் ஆத்திரம் வாலிபர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு


தங்களை பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்ததால் ஆத்திரத்தில் வாலிபரை கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

போலீசுக்கு தகவல்
திருமுல்லைவாயலை அடுத்த அண்ணனூர் அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன்(வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு சியாமளா என்ற மகளும், அரிகரன் என்ற மகனும் உள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்தவர் தேவா என்ற தேவராஜ்(23). இவர், அப்பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு சிறு, சிறு தவறுகளை செய்து கொண்டும், பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தும் வந்தார்.

மனோகரன், இவர்கள் செய்யும் செயல்களை எல்லாம் உளவு பார்த்து திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் கொடுப்பார். உடனே போலீசார் தேவா மற்றும் அவரது நண்பர்களை பிடித்து சென்று விடுவார்கள்.

வெட்டிக்கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த தேவா மற்றும் அவரது நண்பர்கள், நாம் எது செய்தாலும் நம்மை போலீசிடம் காட்டி கொடுத்து விடுகிறான். எனவே மனோகரனை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

அதன்படி 21–6–2009 அன்று மனோகரன் வீட்டுக்கு சென்ற தேவா, அவரை வீட்டுக்கு வெளியே அழைத்து வந்து பேசிக் கொண்டிருந்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனோகரனை வெட்டினார்.

அங்கு மறைந்திருந்த தேவாவின் நண்பர்களும் ஓடி வந்து மனோகரனை சரமாரியாக வெட்டினார்கள். இதில் மனோகரன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

கைது
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த திருமுல்லைவாயல் போலீசார், கொலையான மனோகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த தேவா என்ற தேவராஜ் மற்றும் அவருடைய நண்பர்களான யுவராஜ்(23), கந்தன்(24), ராஜ்பாபு என்ற பாபு(24), முரளி(24), முத்து என்ற வள்ளிமுத்து(25) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 3–ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, வழக்கு விசாரணை முடிந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

5 பேருக்கு ஆயுள் தண்டனை
இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தேவா, யுவராஜ், கந்தன், ராஜ்பாபு, முரளி ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முத்து, விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து ஆயுள் தண்டனை பெற்ற 5 பேரையும் போலீசார், புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக அந்தமான் முருகன் ஆஜராகி வாதாடினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.