Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 29, 2016

ஸ்டார்ட்அப் தொடங்கும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய 7 விஷயங்கள்!


அமெரிக்காவின் சிலிகான் வேலி முதல் பெங்களூர் வரை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ராஜ்ஜியம்தான். உலகின் டாப் நிறுவனங்களும், தொழிலதிபர்களையும் மூக்கில் விரலை வைக்கச் செய்கின்றன இந்த ஸ்டார்ட்அப்கள். பொறியியல் படிப்பை  முடித்த கையோடு தொழில் நுட்பத்தில் புகுந்து விளையாடும் இவர்களின் டெக் மூளையில் இருந்து விழும் ஐடியாக்களோடு போட்டிப்போட பெரிய நிறுவனங்களே தடுமாறுகின்றன. நல்ல நிறுவனங்கள் தரும் வேலை வாய்ப்பை நிராகரித்துவிட்டு, படித்து முடித்தவுடன் ஒரு லேப்டாப், இன்டர்நெட், ஒரு பிஸினஸ் ஐடியாவுடன் மாணவர்கள் ஸ்டார்ட்அப் பக்கம் படை எடுக்கத் தொடங்குகின்றனர்.

எந்தவித தொழில் அனுபவமும் இல்லாமல், ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்குபவராக நீங்கள் இருந்தால், உங்களுக்காகதான் இந்த 7 விஷயங்கள்...

ஐடியா!:

'அட ஐடியா இருக்குறதாலதானே தொழில் தொடங்க ட்ரை பண்றோம்' என்று நீங்கள் சொல்லலாம். ஐடியா இருக்கட்டும், ஆனால் உங்கள் 'ஐடியா' எப்படிப்பட்டது என்பதுதான் முக்கியம். தினம் தினம் டெக்னாலஜி பசியில் காத்திருக்கும் மக்களுக்கு தீனி போடுவதாக இருக்க வேண்டும் உங்கள் ஐடியா. அது கேம்ஸாகவும் இருக்கலாம், ஆன்லைன் வர்த்தகமாகவும் இருக்கலாம், விவசாயம் சார்ந்ததாகவும் இருக்கலாம், கல்வி சார்ந்ததாகவும் இருக்கலாம், சமூக வலைதளமாகவும் இருக்கலாம், ஃப்லிர்ட் சாட்டாகவும் இருக்கலாம், சாஃப்ட்வேராகவும் இருக்கலாம், ஹார்டுவேராகவும் இருக்கலாம், பயனுள்ளதாகவும் இருக்கலாம், வெட்டி நேரத்தை செலவு செய்யும் பொழுதுபோக்கு அம்சமாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், பெரிய அளவில் விரிவாக்கம் செய்யக் கூடிய அளவுக்கு உங்கள் ஐடியாவில் வீரியம் இருக்க வேண்டும். இங்கு சிறு பிள்ளைத்தனமான கிரேஸி ஐடியாக்கள் அபரிதமாக வளர்ந்ததும் உண்டு, பெரிய அளவிலான ஐடியாக்கள் சுருண்டு விழுந்ததும் உண்டு. எனவே உங்கள் ஐடியாவை முதலில் பட்டை தீட்டுங்கள்.





ஆல் இன் ஆல் அழகுராஜாவாக இருங்கள்:

ஸ்டார்ட்அப்பில் உங்களுக்கு கீழேயும், மேலேயும் வேலை செய்ய யாரும் இருக்கமாட்டார்கள். எல்லாமே நீங்கள்தான். எலக்ட்ரானிக்ஸில் நீங்கள் கில்லி என்றால், அந்த திறன் மட்டும் போதாது. உங்கள் தயாரிப்பை பிரபலப்படுத்த வெப்சைட் தேவைப்படும். வெப் டிசைனிங் தெரிந்தவராக நீங்கள் இருந்தால், வெப்சைட் டெவலப்மென்ட் செலவு மிச்சம். பல துறைகளைப் பற்றிய பொது அறிவை வளர்த்துக் கொள்வது அவசியம்.

உங்கள் டீம் எப்படி?:

நல்லதொரு துணை அமைந்துவிட்டால் வாழ்க்கை கரடு முரடாக இருந்தாலும் எளிதில் கடந்து விடலாம். அதேதான் ஸ்டார்ட்அப்களின் நிலையும். ஒரே எண்ணம் கொண்ட, ஈகோ இல்லாத டீம், ஒரு ஸ்டார்ட்அப்பின் வளர்ச்சிக்கு மிக அவசியம். வெற்றியோ தோல்வியோ இந்த டீமில் விரிசல் ஏற்படக் கூடாது. இதில் இன்னொரு விஷயமும் கவனிக்க வேண்டியது உள்ளது. நீங்கள் 3 பேர் என்றால், மூவரும் வெவ்வேறு துறையில் கைதேர்ந்தவராக இருப்பது அவசியம். இது மாற்று கருத்துக்கு இடம் அளிக்கும். வேலையும் தீயாக நடக்கும்.

 




ரிஸ்க் எடுக்க தயாரா?

'ரிஸ்க் எடுக்க தயாராக இருங்கள்' என்பதுதான் இன்று வளர்ந்து நிற்கும் பல ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், இளைஞர்களுக்கு தரும் முதல் அட்வைஸ். உங்கள் ஸ்டார்ட்அப்பின் முதல் முதலீடு,  உங்கள் சேமிப்பு தான். உங்கள் சேமிப்பையும், முழு உழைப்பையும் கொட்டி உருவாக்கும் ஒரு பொருள் கடைசியில் தோல்வி அடையலாம். தோல்விகள் அனைத்து துறைகளிலும் சகஜம்தான். ஆனால் ஸ்டார்ட்அப்களின் தொடக்க நிலையில் இது கொஞ்சம் சிக்கலான விஷயம். ஏனென்றால் அடுத்தக்கட்ட முதலீடு, உங்களிடம் இருக்காது. தோல்விக்குப்பின் முதலீட்டாளர்களை அணுகுவதும், அவர்களின் நம்பிக்கையை பெறுவதும் மிகவும் சிரமான விஷயம். ஆனால், ஒரு விஷயத்தில் ரிஸ்க் எடுக்காமல் இருந்தாலும், முன்னேற்றத்தை காண முடியாது. வெற்றியோ தோல்வியோ, ரிஸ்க் எடுக்க மனதை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

வழிகாட்டியை தேடிக் கண்டுபிடியுங்கள்:

வழி தெரியாத இடத்துக்கு செல்ல கூகுள் மேப்ஸை அழைப்பது போல, புதிதாக ஸ்டார்ட்அப் தொடங்கும் முன்,  அனுபவம் வாய்ந்த வழிகாட்டியை தேடிக் கண்டுபிடியுங்கள். அவர்கள் நீங்கள் கால் பதிக்க விரும்பும் துறையிலோ அல்லது ஏதேனும் தொழில் துறையிலோ அனுபவம் வாய்ந்தவராக இருப்பது அவசியம். அவரே ஒரு முதலீட்டாளராகவும் இருந்தால் ஆசம்... ஆசம்.


இலக்கை நிர்ணயுங்கள்:

நிறுவனத்தை தொடங்கும்போதே 6 மாதம், ஒரு வருடம், 3 வருடம் என தொலை நோக்கு பார்வையில் உங்கள் இலக்கை நிர்ணயுங்கள். இங்கு உங்களுக்கு கண்டிப்பான முதலாளி கிடையாது. நீங்களே முதலாளி. ஆகையால் உங்களுக்கு நீங்களே இலக்கு நிர்ணயித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இலக்கு இல்லாவிட்டால், உங்கள் எண்ணம் திசைத் திரும்பும். உங்கள் இலக்கின் தன்மை, அதை எவ்வளவு தூரம் நிறைவேற்றியிருக்கிறீர்கள் என்பதை பொறுத்தே முதலீட்டாளர்களுக்கு உங்கள் மீது  நம்பிக்கையை உண்டாக்கும்.
   
விடா முயற்சியுடன் இருங்கள்:

பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 3 ஆண்டுகளுக்குள் மூடப்பட்டு விடுகின்றன. 3 ஆண்டுகள், மார்க்கெட்டில் தம் கட்டி தாக்குப்பிடித்தால் அது வெற்றிகரமான ஸ்டார்ட்அப் என்ற பெஞ்ச்மார்க் உள்ளது. இந்த 3 ஆண்டுகளுக்குள் திடீர் உச்சத்துக்கும் வரலாம் அல்லது மீண்டும் முதல் படிக்கே செல்லலாம். எதுவாக இருந்தாலும், விட்டுக் கொடுக்காத விடா முயற்சியுடன் இருக்க வேண்டும்.  ஏனெனில் போரின் இலக்கு வெற்றி. அதனால் காயங்களிடம் வெற்றியை பறிகொடுத்து விடக் கூடாது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.