Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 1, 2016

காற்றாலைகளினால் இப்படியும் சில கேடுகள்!


உலக நாடுகளின் வரிசையில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் காற்றாலை மின் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. 1000 மெகாவாட் என்ற அளவில், காற்றாலைகளின் மூலம் குமரிமாவட்டத்தில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

இந்தியாவில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 55% ஆகும். தமிழ்நாட்டில் பல விதங்களிலும் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 20% காற்றலைகள் மூலம் கிடைக்கிறது. இது ஏறக்குறைய 2000 மெகாவாட் திறனாகும். தற்போதைய காற்றாலைக் கட்டுமானங்களின் உயரமானது 70 முதல் 100 மீட்டர் அளவில் உள்ளது. சங்கிலித்தொடராக அமைக்கப்பட்ட காற்றாலைகளின் சுழலும் விசிறிகள், சுற்றுப்புற காற்றை மேலும் கீழுமாக அதிர்வடையச் செய்கின்றன. இந்த அதிர்வுகள் பல மைல் தூரத்திற்கு இருக்கிறது. சுழலும் விசிறிகளில் இருந்து வீசும் காற்று,  பூமியின் மேற்பரப்பை உலரச் செய்துவிடுகிறது.




பல மைல் தூரம் வரை இந்த விளைவு இருக்கிறது. வீசும் காற்றுக்கு காசு கொடுக்க வேண்டியதில்லைதான். ஆனால் காற்றாலைகளின் விசிறிகளினால் சுற்றுப்புற வானிலை பாதிக்கப்படுகிறது. அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள வீடுகளில், குளிர்சாதனப் பெட்டிகளுக்கு மின்சார தேவை அதிகமாகிறது. விளைநிலங்களுக்கு அதிகமான நீர் தேவைப்படுகிறது.

"காற்றாலைகளினால் ஏற்படும் வானிலை மாற்றங்கள் இரவு நேரங்களில் அதிகமாக இருக்கிறது. காற்றுவீசும் வேகம், இரவு நேரத்தில் அதிகமாக இருப்பதுதான் காரணம்" என்கின்றனர் விஞ்ஞானிகள். தற்போது காற்றாலைகள் அதிகமாக தோன்றிக் கொண்டிருக்கின்றன. காற்றாலைகள் இருக்கும் பகுதியில், பருவ நிலையில் மாற்றம் ஏற்படவும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. மேலும் காற்றாலைகள் இருக்கும் பகுதிகளில் சிட்டுக்குருவி,கொக்கு, நாரை, புறா போன்ற பல்வேறு பறவைகள் பறப்பதும் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.



இது குறித்து குமரிமாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் டாக்டர்.லால்மோகனிடம் பேசிய போது, "காற்றாலைகள் அமைந்திருக்கும் பகுதிகளில் கடலை, பயறு போன்றவை பயிரிடப்பட்டன. தற்போது அங்கே விவசாயம் செய்ய முடியாது. அப்பகுதிகளில் உள்ளுர் பருவநிலை அடிக்கடி மாறி வருகிறது. காற்றாலைகளின் விசிறிகளினால் சுற்றுப்புற வானிலை பாதிக்கப்படுகிறது" என்கிறார்.

காற்றாலைகள் முக்கியம்தான். ஆனால் அதன் பின்னால் இருக்கும் விளைவுகளையும் அரசு கண்டுகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.