Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2016

குழந்தைகளிடம் பொறுப்பை ஒப்படைப்போம்!


2004ம் ஆண்டு தமிழகக் கடலோர மாவட்டங்களை சுனாமி தாக்காத வரையிலும், அப்பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஒருசில அமைப்புகளே இயங்கி வந்தன. அவற்றுள் நாகை மற்றும் காரைக்கால் பகுதி கடலோர மக்களின் மேம்பாட்டுக்காக இயங்கி வரும் சிநேகா அறக்கட்டளையும் ஒன்று.
1984ம் ஆண்டு க்றிஸ்டியால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, மீனவ மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் மற்றும் பெண்கள் சுய முன்னேற்றத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. முதல் நாள் முதலே க்றிஸ்டிக்கு உறுதுணையாக இருந்து, க்றிஸ்டியின் மறைவுக்குப் பின் இந்த அறக்கட்டளையை நிர்வகித்து வருபவர் ஜேசுரத்தினம். நாகர்கோவிலை சொந்த ஊராகக் கொண்ட இவர் மதுரை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றவர்.
‘‘கல்வி அறிவு மற்றும் பொருளாதார படிநிலையில் மிகவும் பின் தங்கியிருக்கின்றனர் மீனவ சமுதாய மக்கள். கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவதோடு ஆண்களின் பணி முடிந்து விடுகிறது. கரைக்கு வந்ததும் அந்த மீனை எடுத்து விற்பது, கருவாடுக்காக மீனை உலர வைப்பது என பெண்களின் பங்களிப்பு இத்தொழிலில் அதிகமாக இருந்தாலும், உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. அவர்கள் வீட்டைத்தாண்டி பொதுச்செயல்பாடுகளுக்கு வர மாட்டார்கள். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். இதனால் அச்சமூகத்தின் முன்னேற்றமே கேள்விக்குறியாக இருந்த வேளையில்தான், என் கணவர் க்றிஸ்டியும் நானும் சிநேகா அறக்கட்டளையைத் தொடங்கினோம்.
எங்களது முழுமுதல் நோக்கம் இம்மக்களிடத்தில் கல்வி அறிவை வளர்ப்பது. கல்வி அறிவு பெற்று விட்ட சமூகம் தனக்கான நல்லதொரு பாதையை தானே அமைத்துக் கொள்ளும். பெண்கல்வி மற்றும் பெண்கள் முன்னேற்றமே இங்கு அவசியமானதாக இருந்தது. 1988ம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பல பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் தினம் கொண்டாடினோம். அது பலருக்கும் உத்வேகம் அளிப்பதாக இருந்தது.
தொடர்ந்து மீனவப் பெண்களின் உற்பத்திப் பொருளான மீனிலிருந்து கருவாடு, ஊறுகாய் போன்றவற்றைத் தயாரித்து சந்தைப்படுத்துவதற்கான பயிற்சி வழங்கி வருகிறோம். கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டி விட்டாலே குழந்தைகள் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். நாகை மற்றும் காரைக்காலைச் சுற்றியுள்ள 32 கிராமங்களில் 3-5 வயது குழந்தைகளுக்கான செயல்வழிக்கல்வி மையங்களை ஏற்படுத்தினோம். அந்த மையத்தில் தொடக்கநிலைக் கல்வி கற்பிக்கப்பட்டு, 5 வயதானதும் பள்ளியில் சேர்த்து விடுவோம். இன்றைக்கும் 11 கிராமங்களில் அந்த மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது’’ என்கிறார்.
குழந்தைகளும் இச்சமூகத்தின் அங்கம்தான். குழந்தைகளுக்கு சமூகப் பொறுப்புணர்வு இருக்கிறது. பொது நடவடிக்கைகளில் பங்கு கொள்ளும் உரிமையும் இருக்கிறது என்பதை வலியுறுத்தும்படி இவர்களது ஒருங்கிணைப்பில் 51 கிராமங்களில் ‘குழந்தைகள் பஞ்சாயத்து’ நடைபெறுகிறது. குழந்தைகளின் உரிமைகளுக்காகப் பேசுதல், பள்ளியில் இடை நின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் கிராமத்தை சுத்தப்படுத்துதல் போன்ற பல செயல்களை இப்பஞ்சாயத்து உறுப்பினர்கள் செய்கின்றனர்.
‘‘மாதந்தோறும் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் குழந்தைகள் பஞ்சாயத்தை சேர்ந்த குழந்தைகளும் கலந்து கொண்டு அவர்களுக்கான தேவைகள் மற்றும் பிரச்னைகள் குறித்துப் பேசுகிறார்கள். ஆரம்பத்தில் குழந்தைகள் கிராமசபைக் கூட்டத்தில் எதற்காகக் கலந்து கொள்ள வேண்டும் என்கிற கேள்வி பலருக்கு குழந்தைகளின் செயல்பாடுகளுக்குப் பிறகு குழந்தைகளும் சமூகத்தின் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து கொண்டனர்.
சில கிராமங்களில் பள்ளிக்கு அருகே இருந்த மதுக்கடையை பெரியவர்களின் உதவியுடன் குழந்தைகள் போராடி அப்புறப்படுத்தியிருக்கின்றனர். குடிநீர், தெருவிளக்கு போன்ற அத்தியாவசியத் தேவைகளையும் மனு கொடுத்து சரி செய்திருக்கின்றனர். குழந்தைகளை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைக்கும்போது அப்பொறுப்புக்கு மரியாதை அளித்து நடந்து கொள்கின்றனர். சமூக செயல்பாடுகளில் அவர்களை இணைக்கும்போது அவர்களின் தனிப்பட்ட ஒழுங்கும் சிறப்புற இருக்கும்’’ என்கிறார் ஜேசுரத்தினம்.
குழந்தைகள் மீதான வன்முறைகள், குழந்தைத் திருமணம் போன்ற புகார்களுக்காக இயங்கும் காரைக்கால் மாவட்ட சைல்டு ஹெல்ப் லைனை (1098) சிநேகா அறக்கட்டளைதான் நிர்வகித்து வருகிறது.‘‘பெரும்பாலும் குழந்தைத் திருமணங்கள் குறித்த புகார்கள் வருகின்றன. குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம். மாவட்ட ஆட்சியர் மூலம் திருமண மண்டபங்களில், ‘மாப்பிள்ளை - பெண்ணின் வயதுச் சான்றிதழ் பெற்று 18 வயதைக் கடந்திருந்தால் மட்டுமே மண்டபம் தர வேண்டும்’ என அறிவுறுத்திஇருக்கிறோம். இதன் மூலம் பல குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன’’ என்கிறார். 
சிநேகா அறக்கட்டளை மேற்பார்வையில் காரைக்கால் மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் மீனவர் பேரவை இயங்கி வருகிறது. மீனவர்களுக்கான உரிமைகள் செயல்படும் பேரவை அது. குடும்ப வன்முறைகளைத் தடுப்பதற்கென கண்காணிக்கும் குழுவையும் அமைத்துள்ளனர்.‘‘நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்கள் மிகவும் செழிப்பாக இருந்தாலும், சுனாமி, மழை வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு அதிகம் ஆளாகிக் கொண்டிருக்கின்றன. இயற்கைப் பேரிடர்களை யாராலும் தவிர்க்க முடியாது.
அப்பேரிடர்களை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். நமது சமூகத்தை பேரிடர்களைத் தாங்கி வாழும் சமூகமாக மாற்ற வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகள்தான் வெள்ளத்துக்கான முக்கியக் காரணம். ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிநீர்வள ஆதாரங்களை பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நம்மாழ்வார் அய்யா வழியில் நீர் மேலாண்மையை அதிகப்படுத்தி வளமான மண்ணை உருவாக்குவதற்கான செயல்பாடுகளிலும் எங்களது சிநேகா அறக்கட்டளை இறங்கியுள்ளது’’ என்கிறார் ஜேசுரத்தினம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.