Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 12, 2016

'தமிழகத்தில் முதன்முதலாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 2 பெண்கள் கைது!'


தமிழகத்தில் முதன்முதலாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதியுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், நான், தேர்தல் டி.ஜி.பி., மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆணையாளர், வருமான வரித்துறை இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேர்தலையொட்டி வருகிற 14, 15, 16 மற்றும் 19-ம் தேதிகளில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும். இது தவிர அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடப்பதால் அங்கும் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும். அதேபோல் ஆந்திரா, கர்நாடகம் ஆகிய பக்கத்து மாநிலங்களின் எல்லையோரங்களில் உள்ள மதுபான கடைகளை அடைக்க அந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. அந்த 4 நாட்களும் ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து ரவுடிகள் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

புதுச்சேரியில் மதுவகைகள் விலை குறைவாக இருக்கும் என்பதால் அங்கிருந்து தமிழகத்துக்கு கடத்தி கொண்டு வந்து விடாமல் இருக்க தீவிர கண்காப்பில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கள் தமிழகத்துக்கு கடத்தி வராமல் இருக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தேர்தலையொட்டி மதுபானங்கள் கடத்தலை தடுக்க தமிழகம் முழுவதும் 45 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இதுவரை 38 ஆயிரத்து 767 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 38 ஆயிரத்து 618 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 934 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 2 பெண்கள் முதன்முதலாக கைது செய்யப்பட்டுள்ளனர். பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர், மண்டல குழுவினர் ஆகியோரை சேர்த்து மொத்தம் ஒரு தொகுதிக்கு 25 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு ‘ஷிப்டு’க்கு 25 பேர் வீதம் பணியில் இருப்பார்கள். மொத்தம் 3 ‘ஷிப்டு’களில் இவர்கள் பணியாற்றுவார்கள். ஆனால் சென்னை பெரு மாநகராட்சி பகுதியில் மட்டும் ஒரு தொகுதிக்கு 8 பறக்கும் படையினர் செயல்படுவார்கள். இதில் ஒரு பறக்கும் படைக்கு ஒரு துணை ராணுவ வீரர் பணியில் இருப்பார்.

தமிழகத்தில் பறக்கும் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை மொத்தம் 190 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 19 ஆயிரத்து 416 துப்பாக்கிகள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 10 ஆயிரத்து 802 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 ஆயிரத்து 875 பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 527 பிடிவாரண்டுகள் நிலுவையில் உள்ளன. தேர்தல் தொடர்பாக 82 வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்காக 396 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 160 சிறிய கிராமங்கள் பதற்றம் நிறைந்தவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. வாக்குப்பதிவின்போது 8 ஆயிரத்து 887 பேர் தொந்தரவு விளைவிப்பவர்கள் என்று தெரியவந்தது. இவர்களில் 8 ஆயிரத்து 380 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 360 பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம்.

தமிழகம் முழுவதும் இதுவரை 61 சதவீத ‘பூத் சிலிப்’கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 40 சதவீதம் தான் வழங்கப்பட்டுள்ளன. எனவே ‘பூத் சிலிப்’ வழங்குவதற்கான கடைசி தேதி இன்று (புதன்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக சென்று ‘பூத் சிலிப்’ வழங்கி வருகிறார்கள். அவற்றை வாக்காளர்கள் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

வீடுகளில் ஆட்கள் இல்லை என்று திருப்பி கொண்டு வரப்படும் ‘பூத் சிலிப்’புகள் சீல் வைத்து அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். வீடு தேடி கொண்டு வந்து கொடுக்கப்படும் ‘பூத் சிலிப்’புகளை வாக்காளர்கள் வாங்காவிட்டால் அவர்களுக்கு வாக்குச்சாவடிகளில் ‘பூத் சிலிப்’புகள் வழங்கப்படமாட்டாது. இதற்கு முன்பு ‘பூத் சிலிப்’புகள் கிடைக்காவிட்டால் அதை வாக்குச்சாவடி முன்பு தேர்தல் பணியாளர்கள் வினியோகிப்பார்கள். ஆனால் இந்த தேர்தலில் வாக்குச்சாவடி முன்பு ‘பூத் சிலிப்’ வழங்கப்படமாட்டாது. இதேபோல அரசியல் கட்சியினரும் வாக்குச்சாவடி முன்பு மேஜை, நாற்காலி போட்டு ‘பூத் சிலிப்’புகள் வழங்குவதற்கு அனுமதி கிடையாது.

எனவே ‘பூத் சிலிப்’ கிடைக்காதவர்கள் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ள ஆவணங்களை காட்டி ஓட்டு போடலாம். ‘பூத் சிலிப்’பில் வாக்காளர் பெயர், புகைப்படம், முகவரி மற்றும் பாகம் எண், வரிசை எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். அதைப் பார்த்ததும் வாக்காளரின் பெயர் பட்டியலில் இருந்து உடனடியாக எடுக்கப்படும். மேலும், பூத் சிலிப் கிடைக்காதவர்கள் தங்கள் பாகம் எண், வரிசை எண் ஆகியவற்றை தெரிந்துகொள்வதற்கு ‘1950’ என்ற தொலைபேசி எண்ணுக்கு தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை எஸ்.எம்.எஸ். செய்தால் உங்களின் பாகம் எண், வரிசை எண் அனுப்பி வைக்கப்படும்.

வாக்குச்சாவடியில் கூட்டம் அதிகமாக இருக்கிறதா? என்பதை தெரிந்துகொள்வதற்காக வாக்காளர்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணுக்கு கியூ என்று ஆங்கிலத்தில் டைப் செய்து இடைவெளி விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து அனுப்பினால் வாக்குச்சாவடியில் கூட்டம் இருக்கிறதா? என்ற தகவல் கிடைக்கும். தமிழகம் முழுவதும் செல்போன் எண்களை வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்து வைத்துள்ள 2 கோடி வாக்காளர்களுக்கு அவர்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விவரங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பிவைக்கப்படுகிறது" என்றார்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.