May 31, 2016
அன்றைய காலகட்டத்தில் சைக்கிள் ஒரு ஆத்மார்த்த நண்பனாக இருந்தது,
கால ஓட்டத்தில் காணாமல் போனவைகளில் சைக்கிளும் ஒன்று. இன்று பெரும்பாலும் யாரும் அதிகமாக சைக்கிள் பயன்படுத்துவதில்லை! ஆனால் தொன்னூறுக்கு முன்னால் சைக்கிள் பலருடைய விருப்ப வாகனமாக இருந்தது, என்னுடைய முதல் சைக்கிள் எங்க தாத்தாவின் அட்லஸ் சைக்கிள்தான் !யாரோ ஒரு வழிப்போக்கன் சாராயத்திற்கு காசு இல்லையென அம்பது ரூபாய்க்கு விற்றுவிட்டு சென்று விட்டான், நல்ல எடை இருக்கும். பின்னாடி மக்கார்டில் கிரேக்க கடவுள் பெரிய ஒரு கல்லை சுமந்து கொண்டு இருப்பதைப் போல் ஒரு லோகோ இருக்கும்.
அந்த சைக்கிள்லதான் முதலில் ஓட்டிப் பழகினேன், முக்கோணத்தில் கால் விட்டு குரங்குபெடல் போட்டுப் பழகி, அப்புறம் பார்ல ஏறி... மெதுவா சீட்டுல உக்காந்து... நல்லா ஓட்டிப் பழகுவதற்குள், பல சிராய்ப்பையும், ஒரு பல்லையும் விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது, அப்புறம் எங்க அப்பா எடை குறைந்த ஹீரோ சைக்கிள் பச்சைக்கலர்ல பளபளப்பா புது சைக்கிள் வாங்கிக் கொடுத்தார், புதுசுக்கு கொஞ்சம் டைட்டா இருந்தது, ஆறுமாதத்தில் பூ மாதிரி போக ஆரம்பிச்சது அப்புறம் சைக்கிள் ரேஸ்ல கலந்துக்கற அளவுக்கு தயார் ஆனது.
அதுல சினிமாவுக்கு இரண்டு பேர் பெடல் போட்டுப் போவதும், சைட் அடிக்கப் போவதும், ஆற்றுக்கு மீன் பிடிக்க போவதும், கூடவே நண்பன் போலவே வரும் சைக்கிள். தினம் அதை துடைத்து சக்கரங்களுக்கு எண்ணை விடுவதும் ஒரு ஆத்மார்தமாக செய்வோம்!
அன்றைய காலகட்டத்தில் சைக்கிள் ஒரு ஆத்மார்த்த நண்பனாக இருந்தது, ஒவ்வொரு சைக்கிளுக்கும் ராசி இருக்கு, சில சைக்கிள் அடிக்கடி பஞ்சர் ஆயிரும், செயின் கழண்டுக்கும் ஆனால் நம்ம ராசிக்கு ஒர்க்கவுட் ஆன சைக்கிள் சரியா பஞ்சர் கடைகிட்டதான் பஞ்சர் ஆகும், ரிப்பேர் ஆகும். ,நடுகாட்டுல தவிக்க விடாது சிலது படுத்திவிடும்! தள்ள வைத்துவிடும், நம்ம ஹீரோ சைக்கிள் நல்ல ராசி! பழி வாங்காது. சைக்கிள்ல பெட்டி மாட்டுவது, டைனமோ லைட், ஹேண்டில்ல பழைய பாட்டு கேஸட் டேப்பை அழகா வெட்டி மாட்டி விடுறது என்பது பேஷன்! சிலர் ரேடியோ வைச்சுக்குவாங்க பாட்டு கேட்டுட்டே சைக்கிள் ஓட்டிப் போறதுல அலாதி மகிழ்ச்சி! மற்றும் பெருமிதம் அவர்களுக்கு, வீல் போஸ் கம்பியில டிசைன் டிசைனா ஒளிரும் பட்டைகளை மாட்டுவது, பாட்டரியில் இயங்கும் ஹாரன் வைப்பது என்று சைக்கிளை அழகு படுத்துவது என்று ஒருவருக்கு ஒருவர் போட்டியாக இருக்கும், இந்த மாதிரி அழகு படுத்தலை பள்ளிக்குச் செல்லும் சைக்கிளில் வைக்க முடியாது! மாலை சைக்கிளை எடுக்க வரும்போது ஒரு பொருளும் இருக்காது.
அதே மாதிரி பஞ்சர் ஒட்டுவதும் ஒரு தனிக்கலை. இன்று ரெடிமேடாக இருக்கின்றது, அன்று பழைய டியூப்பிலேயே அழகாக வட்டமாக வெட்டி ஒட்டுவார்கள், ஓவர் வெயில் உடம்புக்கு ஆகுதோ இல்லையே..! இந்த பஞ்சருக்கு ஆகாது! இளம் வயதில் நம்மை ஓர கண்ணால் பார்க்கும் பிகர்களிடம் படம் காட்டும் போது பஞ்சர் புடிங்கிக்கும்! கூடவே பிகரும் பார்ப்பதை நிறுத்திவிடும், இப்படி சைக்கிள் காலை வாரிவிட்டு பல்பு வாங்கியதில் தேவதாஸ் ஆனவர்கள் நிறைய நபர்கள். எனவே சைக்கிள் ஒரு காதல் வாகனமாகவும் இருந்தது.
அப்புறம் நார்மல் சைக்கிள்களை ஓரம் கட்டிவிட்டு உள்ளே நுழைந்தது BSA SLR சைக்கிள். தக்கை மாதிரி லைட் வெயிட் விலையும் அப்பவே இரண்டாயிரம்ன்னு நினைக்கிறேன்! லேடிஸ் வண்டி, ஜென்ஸ் வண்டி என்று வந்தது, யமஹா 100க்கு சமம் அந்த வண்டி! அந்த வண்டியில போனால் கண்டிப்பா ஒரு பத்து பிகராவது லுக்கு விடும், சிலது அந்த வண்டியில போக ஆசைப்பட்டு லிப்ட் கேட்பதும் உண்டு, அந்த வண்டி வேணும்ன்னு வீட்டுல கேட்டதுக்கு நீ வாங்குற மார்க்குக்கு BSA சைக்கிள் கேட்குதா? என தூக்கிப் போட்டு குமுறினார்கள், இதற்காகவே படித்து அரையாண்டில் படித்து மார்க் வாங்கி சைக்கிள் கேட்க...இவ்வளவு விலையில் சைக்கிளா...? யாராவது திருடிட்டு போயிருவாங்க என வாங்கித்தரவில்லை...! ஆனாலும் சைக்கிள் ஆசை என்னை விடவில்லை...!
படித்து முடித்து வேலைக்கு(ஆமா பெரிய கலைக்டர் வேலை) போன போது சிறுக சிறுக சேர்த்து சைக்கிள் வாங்கப் போகும் நேரத்தில் கம்பனியில் TVS50 கொடுத்து விட்டார்கள். அதனால் அடுத்த ஆசை சைக்கிளை விட்டு விட்டு மொபட்டுக்கு தாவியது, அதன் பிறகு கியர் பைக் ஓட்டிப்பழக யமஹா வாங்கினேன், அப்புறம் சைக்கிள் ஆசை காணமல் போனது.
ஒருமுறை பவானியில் ஒரு நண்பரை பார்க்க போனபோது வீட்டின் பின்னால் நின்று பேசிக்கொண்டிருந்தோம், காம்பவுண்ட் சுவர் ஓரமாக சின்ன வயசுல வாங்க ஆசைப்பட்ட BSA SLR சைக்கிள் பயன்படுத்தாமல் மழை வெயில் என துருப்பிடித்து நின்று கொண்டிருந்தது டயர்கள் எல்லாம் காற்று இறங்கி பரிதாபமாக நின்று கொண்டிருந்தது.....நான் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்த நண்பர் சொன்னார் நான் ஸ்கூல் படிக்கும் போது வாங்கியது தினம் இரண்டு தடவை தேங்காய் எண்ணை போட்டு துடைச்சு பளபளப்பா வெச்சுக்குவேன் அப்படியே மூனாவது வீதியில் மல்லிகா மாலை நேரம் வீதியில் குழந்தைகளோடு உக்காந்து கதை பேசிட்டு இருப்பா ஒரு ரவுண்டு போய் அவளை பார்த்துட்டு வருவேன். அவள் ஞாபகமா வெச்சிருக்கேன், ஆனால் பயன்படுத்துவதில்லைன்னு சொன்னார்.அந்த சைக்கிளைப் பார்த்தேன் பல கதைகளை அது தனக்குள்ளே வைத்துக் கொண்டு இன்னும் கம்பீரமாக நிற்பதைப் போல் தெரிந்தது அந்த சைக்கிள்!
சுரேஸ்குமார் நன்றி
அன்றைய காலகட்டத்தில் சைக்கிள் ஒரு ஆத்மார்த்த நண்பனாக இருந்தது,
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 31, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
May 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.