டெல்லி: பாஸ்போர்ட் எடுக்க விண்ணப்பிக்கும் நபரிடம் தந்தையின் பெயரை குறிப்பிடுமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. அந்த நபருக்கு தாய் மட்டுமே இருக்கிறார் என்றால், தாயின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.தனது மகளுக்கு பாஸ்போர்ட் கேட்டு பெண் ஒருவர் டெல்லி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தில் தந்தையின் பெயர் குறிப்பிடவில்லை என கூறி பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பத்தை அலுவலகம் நிராகரித்தது
இதையடுத்து அந்த பெண் தந்தையின் பெயரை குறிப்பிடாமலே தனது மகளுக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கடந்த 1997-ஆம் ஆண்டில் இருந்து தனியாளாக மகளை வளர்த்து வருவதாகவும் அப்பெண் கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஒருவரது பாஸ்போர்ட்டில் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயம் என எந்தச் சட்டமும் கூறவில்லை. எனவே, பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிப்போரிடம் தந்தையின் பெயரைக் குறிப்பிடுமாறு, அதிகாரிகள் வற்புறுத்த முடியாது.பாலியல் தொழில் புரியும் பெண்கள், பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமடையும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர், தங்களது குழந்தைகளை தனியாகவே வளர்க்கின்றனர். இதுபோன்று தாயின் பாதுகாப்பில் வளர்க்கப்பட்டோர் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிக்கும் போது, தாயின் பெயரை மட்டுமே குறிப்பிட்டால் போதுமானது என்று நீதிபதி தெரிவித்தார்.இதனிடையே, பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் கம்யூட்டர் மூலம் கையாளப்படுகின்றன; எனவே, தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டிய கட்டம் காலியாக இருந்தால், அந்த விண்ணப்பத்தை கணினி ஏற்றுக்கொள்ளாது' என்று மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.அதையடுத்து, நீதிபதி கூறுகையில், கம்யூட்டர் ஏற்றுக்கொள்ளாது என்ற காரணத்திற்காக விண்ணப்பத்தை நிராகரிக்க முடியாது. தந்தையின் பெயரைக் குறிப்பிடாமலேயே விண்ணப்பத்தை ஏற்கும் வகையில், உங்களது சாஃப்ட்வேரில் உரிய மாற்றங்களை செய்யுங்கள் என்றார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.