Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 12, 2016

திமுக, அதிமுக ஆட்சியில் விவசாயத்தில் பின்தங்கும் தமிழகம்! - அதிர்ச்சி ரிப்போர்ட்


தமிழகத்தின் மிகப் பெரிய தேர்தல் திருவிழாவான சட்டமன்ற தேர்தல் வரும் மே 16-ம் தேதி அன்று நடக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டுள்ளதாக கூறி வருகிறார். திமுக தலைவர் கருணாநிதி, தமிழகம் திமுக ஆட்சியில் மிகவும் நன்றாக இருந்தது.

ஆனால், அதிமுக ஆட்சியில் வளர்ச்சி மோசமான நிலையில் உள்ளதாகச் சொல்கிறார். விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் உட்பட மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் திமுக, அதிமுக இரண்டு கட்சிகள் ஆட்சியிலும் தமிழகம் படுமோசமான வளர்ச்சியை சந்தித்து வருவதாகக் கூறி வருகின்றனர். உண்மையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி எப்படி உள்ளது?

தமிழகம் டாப்!

இந்தியாவை விடவும், மாநில அளவில் பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவை விடவும் தமிழகத்தின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதம் நன்றாகவே உள்ளது. எனினும், நமது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை முந்தைய நிதி ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, மிகவும் தொய்வடைந்த நிலையில்தான் காணப்படுகிறது. தமிழகத்தில் முக்கிய துறைவாரியாக வளர்ச்சி விகிதம் மோசமான நிலையிலேயே  உள்ளது.

மைனஸ்-ல் வளர்ச்சி!

தமிழகத்தில் இந்தத் துறைவாரியாக பொருளாதார வளர்ச்சி விகிதம் என்பது நிலையான வளர்ச்சியில் இல்லை. சில ஆண்டுகளில் இந்த வளர்ச்சி விகிதம் ஏற்ற இறக்கத்திலும், சில ஆண்டுகளில் மைனஸ் ஆகவும் இருப்பது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. குறிப்பாக, விவசாயத் துறையின் வளர்ச்சி மோசமான நிலையில் உள்ளது. தமிழகத்தில் சேவைத் துறையின் வளர்ச்சி (பார்க்க அட்டவணை - 1) ஒரளவு வளர்ச்சி அடைந்து உள்ளது என்பதை காணலாம்.

இதே போல, தொழில் துறை வளர்ச்சி (பார்க்க, அட்டவணை 2) கடந்த சில ஆண்டுகளாக மோசமான நிலையில் இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.





திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் (பார்க்க, அட்டவணை 3) மோச மான நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் விவசாய  வளர்ச்சி ஏன் மோசமாக  உள்ளது? தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சென்னைப் பல்கலைக் கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் ஜோதி சிவஞானத் திடம் கேட்டோம்.  விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

“எந்த ஒரு துறையையும் (சேவை, தொழில், விவசாயம்) எடுத்துக்கொண்டால், அந்தத் துறையின் வெறும் வளர்ச்சி விகிதத்தை மட்டுமே பார்வை யிடக் கூடாது. அந்த துறை ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி யில் எவ்வளவு சதவிகிதம் பங்களிப்பினை அளிக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்களிப்பு 1% என்றளவில்கூட இருக்காது. ஏனெனில், மற்ற துறைகளுடைய பங்கு அங்கு அதிகளவில் உள்ளது.

அதைபோன்ற நிலைமைதான் தமிழகத்திலும் உள்ளது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயம் மற்றும் தொழில் துறையின் பங்கு குறைந்த அளவிலேயே உள்ளது. ஆனால், சேவைத் துறையின் பங்கு அதிகமாக உள்ளது. இது வளர்ச்சியின் அறிகுறிதான்.



கல்வி, சுகாதார வளர்ச்சி!

வளர்ச்சியைப் பொறுத்தவரை, பொருளாதார வளர்ச்சி, விவசாயம், சேவைத் துறை மற்றும் தொழில் துறையின் வளர்ச்சி விகிதத்தை மட்டும் பார்க்காமல்,  இந்த வளர்ச்சிக்கான பலன் மக்களை சென்றடைந்ததா என்பதையும் பார்க்க வேண்டும். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியால் சுகாதாரம், கல்வி, மனித வள மேம்பாடு வளர்ச்சி அடைந்துள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்.

குஜராத் மாநிலத்தை எடுத்துக் கொண்டால், அங்கு விவசாயம், சேவைத் துறை நன்றாக இருக்கும். ஆனால், குஜராத் மாநிலத்தைவிட சமூகத் துறைகள் என்று சொல்லப்படும் சுகாதாரம், கல்வி, மனித வள மேம்பாடு வளர்ச்சியில் தமிழகம் மிக நன்றாக உள்ளது.

அதாவது தமிழகத்தின் எழுத்தறிவு விகிதம், குழந்தை இறப்பு விகிதம்,  பிறந்த குழந்தைகளில் இறப்பு விகிதம், 5 வயதுக்கு கீழ் குழந்தை இறப்பு விகிதம் ஆகியவற்றில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. (பார்க்க, அட்டவணை 4).





சேவைத் துறை வளர்ச்சி!

தமிழகத்தின் மொத்த பொருளாதார வளர்ச்சியில் சேவைத் துறையின் பங்களிப்பு 3-ல் 2 பங்காக இருக்கிறது. சேவைத் துறையின் பங்கு அதிகமாகும்போது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதமும் அதிகமாகும். சமீபத்திய ஆண்டுகளில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் சேவைத் துறையின் பங்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சேவைத் துறையில் வர்த்தகம், நிதி, ஐடி மற்றும் அதை சார்ந்த தொழில்கள் முக்கிய பங்களிப்பினை அளிக்கின்றன.

தமிழகத்தில் சேவைத் துறை ஓரளவுதான் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஏனெனில் உலகப் பொருளாதார  மந்தநிலை, இந்தியப் பொருளாதாரம் சரிவு, தொழில் துறை மற்றும் விவசாயம் மோசமான வளர்ச்சியை சந்தித்து வருவதால், சேவைத் துறையின் வளர்ச்சியும் தேக்க நிலையிலேயே உள்ளது.

தொழில் துறை வளர்ச்சி!

தமிழகத்தில் தொழில் துறை மிகவும் தேக்கநிலையில் உள்ளது. இதற்கு காரணம், தொழில் துறையில் அதிக முதலீடுகள் நடைபெறவில்லை. தமிழகத்தில் முதலீடுகளை தீர்மானிக்கக்கூடிய அரசியல் சூழல் இல்லை. இது மட்டுமின்றி, உள்கட்டமைப்பு, மின்சாரப் பிரச்னை, அடிப்படை கட்டு மானப் பிரச்னை உட்பட பல்வேறு பிரச்னைகள் உள்ளன.

விவசாய வளர்ச்சி!

உலகம் முழுவதும் விவசாயம், சேவைத் துறை, தொழில் துறை எடுத்துக்கொண்டேமேயானால், இந்த துறைகள் எந்த ஆர்டரில் வளர்ச்சி அடையும் என்றால் முதலில் விவசாயம் வளர்ச்சி அடையும். விவசாயத்தில் தன்னிறைவடைந்தபிறகு தொழில் துறை வளர்ச்சி அடையும். விவசாயம் மற்றும் தொழில் துறை வளர்ச்சி அடைந்த பிறகுதான் சேவைத் துறை வளர்ச்சி அடையும்.

தமிழ்நாட்டுப் பொருளா தாரத்தை எடுத்துக் கொண்டேமேயானால், விவசாயம் பாதிப்படையும்போது வர்த்தகம், வங்கி மற்றும் நிதி சார்ந்த பணிகள் பாதிக்கப்படு கின்றன. இதனால் தொழில் துறையும், சேவைத் துறையும் பாதிக்கப்படுகின்றன.

விவசாயம் நன்றாக இருக்கும் போது, ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும் மிக நன்றாக இருக்கும். ஆனால், தமிழகத்தில் விவசாயத்தின் வளர்ச்சி ஏற்ற, இறக்கத்திலும், சில ஆண்டுகளில் மைனஸிலும் உள்ளது. இதுபோல் அதிகளவில் ஏற்ற இறக்கத்தில் இருப்பது அதிக ரிஸ்க். இதன் காரணமாக தொழில் துறை மற்றும் சேவைத் துறையின் வளர்ச்சி தேக்க நிலையில் உள்ளது.

முக்கிய காரணம்!

விவசாயம் வளர்ச்சி அடை யாமல் இருக்க பல மிக முக்கிய காரணங்கள் இருக்கின்றன. பருவமழை சரியாக பெய்ய வில்லை என 65 வருடங்களாக சொல்லிக் கொண்டே இருக்கிறோம். ஆனால், இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுப்பதே இல்லை.

இந்தியாவில் நீர் பாசனம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், இதில் ஒரு சதவிகிதம்கூட முதலீடுகள் மேற்கொள்ளப் படுவதில்லை. முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் நீர் பாசனத்துக்காக திட்டங்கள் அமைக்கப்பட்டன. அதன்பின் முக்கிய நீர் பாசனத்துக்காக திட்டங்கள் எதுவும் வரவே இல்லை. நீர் பாசனத்துக்கு எதுவுமே செய்யாமல், இன்றும் ஆப்பிரிக்கா போன்ற பின்தங்கிய நாடுகளைப் போல, மழை நீரையே இந்தியாவும் நம்பி இருப்பது வேதனை. இது அரசாங்கத்தின் தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும்.

பெரும்பாலான விவசாயிகள் இன்றும் கடன் வாங்கிதான் விவசாயம் செய்திடும் சூழல் நிலவுகிறது. ஆனால், தண்ணீர் இல்லாத காரணத்தினால், பயிர் விளைச்சல் இல்லாமல் கடனை திருப்பிச் செலுத்த முடியாதபட்சத் தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம்தான் நடக்கிறது.

விவசாயம் வளரும்!

கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் சரியாக தருவதில்லை என பிரச்னை நிலவுகிறது. ஆனால், காவிரியில் இருந்து வரும் நீரை சரியான முறையில் பயன்படுத் தாமல், அது கடலில் கலந்து வீணாகிறது. இதை சேமிப்பதற் கான எந்தவொரு திட்டமும் இல்லை. மழை நீர் சேகரிப்பு திட்டம் சரியாக பராமரிக்கப்பட வில்லை. ஏரிகள், குளங்கள் பாதுகாக்கிறோமா என்றால் இல்லை.

அதுமட்டும் இல்லாமல் நீர் பாசன வசதி, விவசாயப்  பொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் மற்றும் இன்ஷூ ரன்ஸ் வசதி என இதில் எதுவுமே விவசாயிகளுக்கு கிடைப்ப தில்லை. இவை அனைத்துமே அரசாங்கம்தான் செய்ய வேண்டும்.

ஆனால், இதை எந்தவொரு அரசாங்கமும் செய்வதே இல்லை. இதை எல்லாம் செய்தால்தான் விவசாயிகள் பாதுகாப்பாக இருப்பார்கள், விவசாயம் வளரும், பொருளாதார வளர்ச்சி யும் அதிகரிக்கும்” என்றார்.

உங்களை அன்புடன்..!

தமிழகத்தின் பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சி அடைந்து தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமெனில் விவசாயம் விருத்தி அடைய வேண்டும்.  வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், விவசாயிகள் தற்கொலைகள் நிகழாத வகையில், விவசாயிகளை பாதுகாத்து, விவசாயம் உண்மையில் வளர்ச்சி அடைந்திட சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.