Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 6, 2016

முதல்–அமைச்சர் ஆவதற்கு விஜயகாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது? சரத்குமார் கேள்வி


விஜயகாந்த் முதல்–அமைச்சர் ஆவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று சரத்குமார் கேள்வி எழுப்பினார்.

சரத்குமார் பிரசாரம் 

 சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார், மதுரையில் புதூர், செல்லூர், ஆரப்பாளையம் உள்ளிட்ட 5 இடங்களில் நேற்று திறந்த வேனில் நின்றபடி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். புதூர் பகுதியில் அவர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜன்செல்லப்பாவை ஆதரித்து பேசியதாவது:–

நான் தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்து வருகிறேன். அனைத்து இடங்களிலும் மக்கள் எழுச்சியை காண முடிகிறது. மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் முதல்வர் நிறைவேற்றினார். அது மட்டுமின்றி சட்டசபையின் 110 விதியின் கீழ்அறிவித்த 185 திட்டங்களுக்கு செயல்முறை வடிவம் கொடுத்து அதனை நிறைவேற்றி இருக்கிறார். இதன் மூலம் மக்களை பற்றி சிந்திக்கும் முதல்வரை இந்த மாநிலம் பெற்று இருக்கிறது. விவசாயிகள் ஆனாலும் சரி, தொழிலாளர்கள் ஆனாலும் சரி அவர்களுக்கென்று திட்டங்களை தயாரித்து ஒரு தொலைநோக்குடன் செயல்படும் முதல்வராக ஜெயலலிதா உள்ளார்.

சந்தர்ப்பவாத கூட்டணி 

அ.தி.மு.க.வை எதிர்க்கும் கூட்டணிகளை பற்றி உங்களுக்கு தெரியும். எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க.வினர் தேர்தல் பிரசாரத்தில் அளித்து வருகின்றனர். தி.மு.க–காங்கிரஸ் இடையே அமைந்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி.

 மு.க.ஸ்டாலின் தனது உடையை மாற்றி கொண்டு மக்களை ஏமாற்றுகிறார். மக்கள் பிரதிநிதிகள் இனி மக்களை தேடி செல்லக்கூடாது என்று ஸ்டாலின் கூறுகிறார். 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்த உண்மையை இப்போது அவர் கண்டுபிடித்து இருக்கிறார். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பொய்யான அறிக்கை. பித்தலாட்ட அறிக்கை. இளங்கோவன் தனது சுயவிளம்பரத்திற்காக தனிப்பட்ட விமர்சனங்களை செய்து வருகிறார்.

முதல்வராக என்ன தகுதி? 

அடுத்ததாக மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை. அப்படி புரிந்தால் தான் அவருக்கு பதில் சொல்ல முடியும். ஆனால் இவரை முதல்வராக்குவோம் என்று மக்கள் நலக் கூட்டணியினர் கூறுகிறார்கள். முதல்வராக அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?. அவரை முதல்வராக ஏற்று கொள்ளவும் மக்கள் தயாராக இல்லை.

 பா.ஜ.க.தலைவர் அமித்ஷா ஜெயலலிதாவை குற்றம்சாட்டி பேசி வருகிறார். மத்திய அரசின் திட்டங்களை தடுத்து வருவதாக கூறுகிறார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கத் துடித்தீர்களே? அப்போது உங்களுக்கு இது தெரியவில்லையா?. பல மாநிலங்களில் நடந்த தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை சந்தித்து வருகிறது. வெளிநாடு சுற்றும் மோடி, முதலில் இந்தியாவில் சுற்றி பார்த்தால் தான் உண்மை நிலை புரியும். எனவே தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்ல இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். வருகிற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெல்வது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.