Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 28, 2016

டோம்பிவிலியில் தொழிற்சாலை கொதிகலன் வெடித்த விபத்தில் சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்வு 47 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


டோம்பிவிலியில் ரசாயன தொழிற்சாலை கொதிகலன் வெடித்த விபத்தில் சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது. காயம் அடைந்த 200-க்கும் மேற்பட்டவர்களில் 47 பேர் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொதிகலன் வெடித்து விபத்து

மும்பையை அடுத்த தானே மாவட்டம் டோம்பிவிலியில் நேற்றுமுன்தினம் ரசாயன தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். 140 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கொதிகலன் வெடித்த பலத்த அதிர்வு காரணமாக சுற்றுப்புறங்களில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்தன. அலுவலகங்கள், கடைகளில் வேலை பார்த்து கொண்டு இருந்தவர்கள் மீது கட்டிட கண்ணாடிகள் நொறுங்கி விழுந்து அவர்களது உடலை குத்தி கிழித்தன. அதிர்வு காரணமாக சாலையில் நின்ற வாகனங்களின் கண்ணாடிகளும் நொறுங்கின. காளை மாடு ஒன்று அதிர்ச்சியில் மயங்கி விழுந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்வு

இந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் விடிய, விடிய மீட்பு பணிகள் நடந்தன. அப்போது இடிபாடுகளுக்குள் பிணமாக கிடந்த சிலரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சிலர் பரிதாபமாக இறந்தனர். இவ்வாறு மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

உயிரிழந்தவர்களில் 9 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டது. அவர்கள் மும்பை குர்லா மேற்கு பகுதியை சேர்ந்த மகேஷ் பாண்டே (வயது 23), கல்யாணை சேர்ந்த ஞானேஷ்வர் ஹஜாரே (45), டோம்பிவிலியை சேர்ந்த ராஜீவ் சிர்கிரே (50), தானே வாக்ளே எஸ்டேட்டை சேர்ந்த நீலம் தேட்டே (26), டோம்பிவிலி கிழக்கை சேர்ந்த உமேஷ் கஹார் (46), மும்பை சாந்தாகுருசை சேர்ந்த சுமித் (30), சினேகல் (30), நந்தன் விஸ்வாஸ் (33) மற்றும் சூசந்த் காம்பிளே என்று தெரியவந்தது.

இவர்களில் சுமித்தும், சினேகலும் கணவன்- மனைவி ஆவர். மேலும், சுமித் விபத்துக்குள்ளான தொழிற்சாலையின் உரிமையாளர் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

காயம் அடைந்தவர்கள்

இதற்கிடையே காயம் அடைந்த பலர் ஆஸ்பத்திரிக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதனால் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 200-யை தாண்டியது. இவர்களில் 159 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்கள். 47 பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சிகிச்சை பெறும் பலருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. எனவே மருத்துவமனைகளில் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் டோம்பிவிலியை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் தாமாக முன்வந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களின் உயிர்களை காப்பதற்காக ரத்த தானம் செய்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக பலரும் உணவு, தண்ணீர் உள்ளிட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டு வருவதாக தானே கலெக்டர் மகேந்திர கல்யாண்கர் தெரிவித்தார்.

‘திகில்’ காட்சிகள்

இதற்கிடையே தொழிற்சாலை கொதிகலன் வெடித்த விபத்திலும், அதனால் ஏற்பட்ட அதிர்விலும் 70 அடுக்குமாடி கட்டிடங்கள் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 12 கார்கள், 4 மோட்டார் சைக்கிள்கள், 3 ஸ்கூட்டிகள், 2 மாட்டு வண்டிகள் முற்றிலுமாக சேதம் அடைந்து இருப்பதும் தெரியவந்தது.

கொதிகலன் வெடித்ததை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட ரத்தக்களரி காட்சிகள், தொழிலாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓடும் காட்சிகள், பூகம்பத்தை போல கட்டிடங்களில் உள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி விழும் காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன. அந்த ‘திகில்’ காட்சிகள் நேற்று செய்தி சேனல்களில் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது.

வழக்குப்பதிவு

கொதிகலன் விபத்து தொடர்பாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது மான்பாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.