Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 3, 2016

உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியமான பூமியைப் போன்ற 3 அபூர்வ கிரகங்கள்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியமான பூமியைப் போன்ற 3 அபூர்வ கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்து உள்ளனர்.

பூமியை போன்ற 3 கிரகங்கள்

பூமியில் மட்டுமே உயிரினம் வாழ்கிறது. வேறு எந்த கிரகத்திலும் உயிரினம் வாழ்வது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல் உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியமான கிரகங்களும் உள்ளனவா? என்பதும் உறுதி செய்யப்படவில்லை. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக கூறப்பட்டாலும் அங்கு உயிரினங்கள் இருக்கின்றனவா? என்பது இன்னும் அறுதியிடப்படவில்லை.

தற்போது, முதல் முறையாக பூமியைப் போன்று ஜீவராசிகள் வாழ்வதற்கு சாத்தியமான 3 கிரகங்கள் சூரிய குடும்பத்துக்கு அப்பால் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

நவீன தொலைநோக்கியில் ஆய்வு

பல மாதங்களாக இந்த விஞ்ஞானிகள் 60 சென்டி மீட்டர் நீளம் கொண்ட ‘டிரேப்பிஸ்ட்’ என்னும் அதிநவீன தொலை நோக்கி மூலம் ஆய்வு செய்து இந்த கிரகங்களை கண்டறிந்து இருக்கின்றனர். இதில் மிக மிகச் சிறிய குள்ள நட்சத்திரங்களைக் கூட கண்டுபிடிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பெல்ஜியம் நாட்டின் லெய்ஜ் பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வியல் அறிஞர் மைக்கேல் கில்லன் ‘நேச்சர்’ விஞ்ஞான இதழில் தெரிவித்த தகவல்கள் வருமாறு:-

39 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால்...

அளவில் பூமி மற்றும் வீனஸ் கிரகங்களுக்கு ஒப்பான 3 கிரகங்கள் இருப்பதை கண்டறிந்து இருக்கிறோம். இதன் தட்பவெப்ப நிலை பூமி, வீனஸ் கிரகங்களுக்கு இணையானதாகவே இருக்கிறது. இந்த 3 கிரகங்களுமே 39 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் காணப்படுகின்றன. மூன்றும் குட்டியான குளிர் நட்சத்திரம் ஒன்றை சுற்றி வருகின்றன.

இந்த 3 கிரகங்களும் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகளில் வெற்றிகர ஒற்றுமையைக் கொண்டு உள்ளன. அளவில் மட்டும் இன்றி, அனைத்து வகையிலும் பூமிக்கு நிகரானவையாக இவை காணப்படுகின்றன. நமது சூரிய குடும்பத்துக்கு அப்பாலும் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டா என்பதை முதல்முறையாக ‘கெமிக்கல் டிரேசஸ்’ என்னும் ரசாயன தொழில்நுட்ப முறையை பின்பற்றி இவை கண்டறியப்பட்டு இருக்கிறது.

திறந்து விடப்பட்டுள்ளது

சூரிய குடும்பத்துக்கு அப்பால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு உள்ள மிக அபூர்வமான கிரகங்கள் இவைதான். இவற்றில் மிக அருகாமையில் உள்ள 2 கிரகங்கள் குட்டி நட்சத்திரத்தை 1.5 நாள் முதல் 2.4 நாட்களுக்கு ஒரு முறையும், வெகு தொலைவில் உள்ள கிரகம் 74 நாட்களுக்கு ஒரு முறையும் சுற்றி வருகின்றன.

இந்த 3 புதிய கிரகங்களின் கண்டுபிடிப்பு மூலம், உயிரினங்கள் வசிப்பதற்கான வேட்டைக்களம் திறந்து விடப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.