Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 18, 2016

தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியும் தமிழகத்தில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்?


திருச்சி: நூறு சதவீதம் வாக்களிப்புக்காக முழுமூச்சுடன் களம் இறங்கியும் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததால் தேர்தல் ஆணையம் அதிர்ச்சியடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் அரவக்குறிச்சி, தஞ்சை தவிர 232 தொகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது.  இதில் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும், ஆணைய இணைய தளத்திலும் 100 சதவீத வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பிரசாரம் செய்தது.  இது தவிர கேஸ் சிலிண்டர், பால்பாக்கெட், பிரபல நிறுவனங்கள் வழங்கும் பைகள், ஏடிஎம் சென்டர்கள், வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் என பல்வேறு வழிகளில் மே 16ல் தவறாமல் வாக்களிப்பீர் என தேர்தல் ஆணையம் பிரசாரம் மேற்கொண்டது. அத்துடன்  அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்திதுடன், விழிப்புணர்வு பேனர்களையும் தேர்தல் ஆணையம் வைத்துள்ளது.

இதனால் இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருக்கும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்த்தது. ஆனால் நேற்று நடந்த வாக்குப்பதிவில் தமிழகம் முழுவதும் சராசரியாக 74 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. இது கடந்த 2011 சட்டமன்ற தேர்தலை விட 4 சதவீதம் குறைவாகும். அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 88.5 சதவீதமும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 55.2 சதவீதமும் வாக்குகள் பதிவானது.  100 சதவீத வாக்களிப்புக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததால் தேர்தல் ஆணையம் அதிர்ச்சியடைந்துள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக நேற்று நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

இதனால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் காலையில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக தொடங்கியது. மழை காரணமாக நகர்புறங்களில் உள்ள வாக்காளர்கள் பலர் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. மேலும், பல்வேறு வாக்குச்சாவடிகளில் மழைநீர் தேங்கியிருந்தது. மின் தடை ஏற்பட்டிருந்தது. இதனால், வாக்களிப்பதற்காக வந்த பல வாக்காளர்கள் திரும்பிச்சென்றதையும் காண முடிந்தது.  தேர்தலையொட்டி நேற்று(திங்கள் கிழமை) அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து திங்கள்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டதால், அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பலர் சுற்றுலாவுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்றுவிட்டனர். அதற்கு ஏற்றார்போல் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் தான் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் சென்னை, கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் 60 முதல் 70 சதவீத வாக்குப்பதிவும், திருச்சி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் 70 முதல் 80 சதவீத வாக்குப்பதிவும், தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கரூர், அரியலூர் மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கு மேலும் வாக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த தேர்தலை விட தர்மபுரி மாவட்டத்தில் மட்டுமே இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த முறை 81.2 சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்த தர்மபுரி மாவட்டத்தில் இந்த முறை 85 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.