Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 31, 2016

‘புதிய அணை தேவை இல்லை’’ முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கேரள முதல்-மந்திரியின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு


முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

டெல்லி பயணம்

அண்மையில் கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றது. அந்த கூட்டணி சார்பில் மார்க்சிஸ்டு கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற பினராயி விஜயன், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி அருண்ஜெட்லி ஆகியோரை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளா- தமிழ்நாடு இடையே உள்ள பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சிறந்தது. கட்டுக்கடங் காத உணர்ச்சிகளுக்கு சவுக்கால் அடித்துக்கொள்வதால் எந்த பயனும் இல்லை. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தேவையற்ற சர்ச்சைகளின் மூலம் தீர்த்து வைக்கப்படக் கூடாது. எங்களைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்பதையே விரும்புகிறோம்.

முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டவேண்டும் என்கிற முந்தைய கேரள அரசின் கொள்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. புதிய அணையை கட்டினால் தற்போதுள்ள பழைய அணையை மாநில அரசு என்ன செய்யும்?

ஒதுக்கி விட முடியாது

சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட முல்லைப் பெரியாறு அணையை மேற்பார்வையிடுவதற்கான நிபுணர் குழு, அணையின் பாதுகாப்பு குறித்து கேரள மக்கள் அச்சம் கொள்வதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் அணை வலுவாக இருக்கிறது எனவும் கூறி இருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அணையை பார்வையிட்டு பல்வேறு ஆய்வுகள் நடத்திய பிறகே இந்த அறிக்கையை அளித்து இருக்கின்றனர். அந்த குழுவினர் கருத்தை ஒதுக்கி விட முடியாது. அணை விவகாரத்தில் எந்த முரண்பாடுகளையும் நாங்கள் கடைபிடிக்க விரும்பவில்லை. அதே நேரம் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் எண்ணமும் இல்லை. நீர்மட்டத்தை உயர்த்தினால் கேரள மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனினும், இதில் எந்த பிரச்சினை என்றாலும் தமிழக அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்போம்.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

காங்கிரஸ் எதிர்ப்பு

முல்லைப் பெரியாறு அணை குறித்து பினராயி விஜயன் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன், துணைத்தலைவர் வி.டி.சதீஷன் ஆகியோர் இது தொடர்பாக முதல்-மந்திரியை கடுமையாக விமர்சித்தும் உள்ளனர்.

உம்மன்சாண்டி கூறும்போது, ‘‘பாதுகாப்பு கருதி 112 ஆண்டு பழமையான முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டவேண்டும் என்கிற தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில் முதல்-மந்திரியின் கருத்து முரண்பட்டதாக உள்ளது’’ என்றார்.

முதல்-மந்திரி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது ஏன் என்பது பற்றி விளக்கம் அளிக்கவேண்டும் என்று வி.எம்.சுதீரன் வற்புறுத்தினார்.

பாதிப்பை ஏற்படுத்தும்

துணைத்தலைவர் வி.டி.சதீஷன், ‘‘இடதுசாரி கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இப்போது முதல்-மந்திரி புதிய அணை தேவை இல்லை என்கிறார். இது கேரள மக்களுக்கு செய்யும் துரோகம். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில் முதல்-மந்திரியின் இந்த கருத்து வழக்கின் நடவடிக்கைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்றார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.