Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 7, 2016

சிரியாவில் அலெப்போ நகர் அருகே விடிய விடிய சண்டை; 73 பேர் பலி முக்கிய கிராமத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்


சிரியாவில் அலெப்போ நகர் அருகே விடிய, விடிய நடந்த சண்டையில் 73 பேர் பலியாகினர். முக்கிய கிராமத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.

உள்நாட்டுப்போர்

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வந்தது. அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வந்த இந்த சண்டையில் 2½ லட்சம் பேர் கொல்லப்பட்டனர். 1 கோடியே 10 லட்சம் பேர் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த நிலையில், அங்கு சண்டை நிறுத்தம் செய்வதற்காக அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 17 நாடுகளின் தலைவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஜெர்மனியில் கூடிப் பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் சமரச உடன்பாடு எட்டப்பட்டது.

சண்டை நிறுத்தம்

அதையடுத்து அல்கொய்தா தீவிரவாதிகள் ஆதரவு பெற்ற அல் நுஸ்ரா தீவிரவாதிகள் ஆதிக்கம் மிகுந்த பகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. பரவலாக அங்கு குண்டு சத்தம் ஓய்ந்தது.

அங்கு அலெப்போ நகரில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காமல் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகள் தாக்குதல் நடத்துவதாகக் கூறி கிளர்ச்சியாளர்கள் அதிபர் ஆதரவு படைகளுக்கு எதிராக சண்டையிடப் போவதாக அறிவித்தனர்.

அதைத் தொடர்ந்து அலெப்போ நகர் பகுதிகளில் அதிபர் ஆதரவு படையினருக்கும், கிளர்ச்சி படைகளுக்கும் இடையே மீண்டும் சண்டை மூண்டது. கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த சண்டையில் சுமார் 300 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

விடிய விடிய சண்டை

இதற்கிடையே அலெப்போ நகர் பகுதியில் சண்டை நிறுத்தம் செய்வதற்காக அமெரிக்காவும், ரஷியாவும் பேசின. அதைத் தொடர்ந்து வியாழன், வெள்ளி என இரு நாட்கள் சண்டை நிறுத்தம் செய்ய அதிபர் ஆதரவு படைகள் முன்வந்தன.

இருப்பினும் அலெப்போ நகரில் இருந்து 15 கி.மீ. தென்மேற்கில் உள்ள கான் டவுமேன் என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) இரவு விடிய விடிய அதிபர் ஆதரவு படைகளுக்கும், அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற அல்நுஸ்ரா முன்னணியினர் உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. அதைத் தொடர்ந்து அந்த கிராமத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.

73 பேர் பலி

இந்த சண்டையில் 73 பேர் பலியாகினர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் கண்காணிப்பகம் குறிப்பிடுகையில், “கான்டவுமேன் கிராமத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த சண்டையில் அல்நுஸ்ரா முன்னணியினர் உள்ளிட்ட கிளர்ச்சியாளர்கள் தரப்பில் 43 பேரும், அதிபர் ஆதரவு படையினர் 30 பேரும் கொல்லப்பட்டனர்” என கூறியது.

இந்த கிராமத்தை ஏற்கனவே கிளர்ச்சியாளர்கள் தங்கள் பிடியின்கீழ் கொண்டு வந்திருந்தனர். அவர்களை கடந்த டிசம்பர் மாதம் அதிபர் ஆதரவு படையினர் விரட்டி அடித்து தங்கள் ஆளுகையின்கீழ் கொண்டு வந்தனர். இப்போது மறுபடியும் அந்தக் கிராமம் கிளர்ச்சியாளர்கள் கைக்கு சென்று விட்டது.

அதே நேரத்தில் கான்டவுமேன் நகரை கிளர்ச்சியாளர்கள் வசப்படுத்தவில்லை என்று சிரியா அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.