Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 18, 2016

பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்; “உள்நாட்டு சட்ட விவகாரங்களில் தலையிட எந்த உரிமையும் இல்லை”


இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டால் தண்டிக்கும் விதத்தில் மத்திய அரசு கொண்டு வர உள்ள சட்ட மசோதாவுக்கு ஐ.நா.விடம் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதிய சட்ட மசோதா

காஷ்மீர், அருணாசல பிரதேச மாநிலங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள். அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. ஆனால் காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாகவும், அருணாசல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாகவும் குறிப்பிடும் வரைபடங்களை சமூக வலைத்தளங்கள் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தின.

இதன்காரணமாக இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டால் ரூ.100 கோடி வரை அபராதம் விதிக்கவும், 7 ஆண்டுகள் வரை தண்டிக்கவும் வகை செய்து ஒரு புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற உள்ளது. இதற்காக நிலப்பரப்பு தகவல் ஒழுங்குமுறை மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த மசோதாவில், கூகுள் நிறுவனம், கூகுள் மேப்ஸ், கூகுள் எர்த் வலைத்தளங்களை இயக்குவதற்கு மத்திய அரசிடம் உரிமம் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் இடம் பெறுகிறது.

பாகிஸ்தான் எதிர்ப்பு 

இந்த சட்ட மசோதாவுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளரிடமும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவரிடமும் பாகிஸ்தான் கொண்டு சென்றுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய பாராளுமன்றத்தில், அந்த நாட்டின் அரசு சர்ச்சைக்குரிய நிலப்பரப்பு தகவல் ஒழுங்குமுறை மசோதாவை அறிமுகம் செய்ய முயற்சி எடுத்து வருகிறது. இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதி மூலமாக ஐ.நா. பொதுச்செயலாளர், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவரிடம் பாகிஸ்தான் தன் கவலையை வெளிப்படுத்தி உள்ளது” என கூறப்பட்டுள்ளது.

மேலும், “இந்தியாவின் அதிகாரபூர்வ வரைபடத்தில் பிரச்சினைக்குரிய காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காட்டப்பட்டுள்ளது. இது தவறானது. சட்டப்படி ஏற்றுக்கொள்ள இயலாதது” எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா கண்டனம்

இந்த விவகாரத்தில், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மூலமாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இதுபற்றிய கேள்விக்கு விகாஸ் சுவரூப் நேற்று பதில் அளிக்கையில், “காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. உத்தேச மசோதா முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு சட்ட விவகாரம். இதில் பாகிஸ்தானோ அல்லது வேறு யாருமோ தலையிட எந்த உரிமையும் இல்லை” என திட்டவட்டமாக கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “இரு தரப்பு பிரச்சினை குறித்து பேசுவதற்கு இந்தியா திறந்த மனதுடன் இருக்கிறது என பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் கூறி சர்வதேச சமூக விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை இந்தியா உறுதியாக நிராகரிக்கிறது” எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.