Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 27, 2016

ரொட்டியில் ரசாயன பொருள் சேர்ப்பது உடனடியாக நிறுத்தம்: ரொட்டி தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பு


புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன பொருளை ரொட்டியில் சேர்ப்பதை உடனடியாக நிறுத்துவதாக ரொட்டி தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ரொட்டியில் ரசாயன பொருள் சேர்ப்பது உடனடியாக நிறுத்தம்: ரொட்டி தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்பு
நாடு முழுவதும் விற்பனை ஆகும் முன்னணி நிறுவன ரொட்டிகள், பன் ஆகியவற்றின் 38 மாதிரிகளை அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சமீபத்தில் பரிசோதனை செய்தது. அதில், மனிதர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் பொட்டாசியம் புரோமேட், தைராய்டு பிரச்சினையை உண்டாக்கும் பொட்டாசியம் அயோடேட் ஆகிய ரசாயன பொருட்கள் ரொட்டிகளில் சேர்க்கப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த ரசாயன பொருட்களுக்கு தடை விதிக்குமாறு உணவு பொருட்களின் தரத்தை கண்காணிக்கும் உயரிய அமைப்பான இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்துக்கு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சிபாரிசு செய்தது. இந்த பொருட்கள் ஐரோப்பிய நாடுகளிலும், வேறு சில நாடுகளிலும் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டியது.

அதை ஏற்றுக்கொண்ட இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம், பொட்டாசியம் புரோமேட் ரசாயன பொருளுக்கு தடை விதிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு சிபாரிசு செய்தது. இன்னும் ஓரிரு வாரங்களில் மத்திய அரசு தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அதற்கு முன்பாக, ரொட்டி தயாரிப்பு நிறுவனங்களே, பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகியவற்றை பயன்படுத்துவதை நிறுத்துவது என்று முடிவு செய்துள்ளன. இதுகுறித்து அகில இந்திய ரொட்டி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ரமேஷ் மகோ, ஹார்வஸ்ட் கோல்ட் நிர்வாக இயக்குனர் அடில் உசைன் ஆகியோர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகியவை இந்தியாவில் தடை செய்யப்படாத ரசாயன பொருட்கள். 20 ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளன. உணவில் சேர்க்க அனுமதிக்கப்பட்ட 11 ஆயிரம் பொருட்களில் இவையும் அடங்கும். எனவே, அவற்றை இதுவரை பயன்படுத்தி வந்தோம். அப்பொருட்கள் கலந்த ரொட்டி, முற்றிலும் பாதுகாப்பானது, ஆரோக்கியமானதுதான்.

இருப்பினும், இந்த ரசாயன பொருள், மக்கள் மனதில் ஏற்படுத்தி உள்ள அச்சத்தை கருத்தில் கொண்டு, பொட்டாசியம் புரோமேட், பொட்டாசியம் அயோடேட் ஆகியவற்றின் பயன்பாட்டை நிறுத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

இன்று (நேற்று) இரவில் இருந்து, இனிமேல் புதிதாக தயாரிக்கப்படும் ரொட்டிகளில் இந்த பொருட்களை சேர்க்க மாட்டோம். அதற்கு பதிலாக, மாற்று ரசாயன பொருளை சேர்க்க தொடங்குவோம். மாற்று பொருள், விலை மலிவாக இருந்தபோதிலும், அதை பயன்படுத்த உயர் தொழில்நுட்பம் தேவைப்படும்.

புற்றுநோயை உண்டாக்கும் ரசாயன பொருள் கலந்திருப்பதாக தகவல் வெளியானதால், ரொட்டி விற்பனையில் 10 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது. அதன் பயன்பாட்டை நிறுத்தினால்தான், இயல்பு நிலை திரும்பும் என்பதால் இம்முடிவை எடுத்துள்ளோம்.

இருப்பினும், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வு முடிவுகளை சரிபார்க்க இந்திய தேசிய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் விஞ்ஞானரீதியான ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.