Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 27, 2016

நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்த, அசாம் பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஏற்படுத்திய பரபரப்பு சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானதால் சர்ச்சை


அசாம் மாநிலத்தில் நடிகையாக இருந்து பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆபாச கருத்து வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பெண் எம்.எல்.ஏ.

நடந்து முடிந்த அசாம் மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜனதா ஆட்சியைக் கைப்பற்றியது. அங்கு பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்ட 6 பெண் வேட்பாளர்களில் 2 பேர் வெற்றி பெற்றனர். அவர்களில் அங்குர்லதா தேகா என்ற பெண்ணும் ஒருவர். அவர் படாத்ரோபா தொகுதியில், காங்கிரஸ் முன்னாள் மந்திரி கவுதம் போராவை சுமார் 6 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அவர் நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர். அசாம் மொழிப்படங்கள் மட்டுமின்றி, வங்க மொழிப்படங்கள், டெலிவிஷன் தொடர்கள் மற்றும் நாடகங்களிலும் நடித்துள்ளார். மாடலிங்கும் செய்துள்ளார்.

பொதுவாக, ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்றால், அவரது பின்னணி, பிரசார பலம், தேர்தல் வாக்குறுதி ஆகியவற்றை குறிப்பிட்டுத்தான் கருத்து தெரிவிப்பார்கள்.

ஆபாச கருத்து

ஆனால், அங்குர்லதா தேகா, வெற்றி பெற்றதில் இருந்து அவரது அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சமூக வலைத்தளங்களிலும், இணையதள பத்திரிகைகளிலும் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவரது சினிமா, மாடலிங் புகைப்படங்களை வெளியிட்டு, அதன் அருகே ஆபாச கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

குறிப்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் இத்தகைய கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். இணையதள பத்திரிகை கட்டுரைகளில், ‘சூடான பெண் எம்.எல்.ஏ.’ என்றுதான் அங்குர்லதா தேகாவை வர்ணிக்கிறார்கள்.

‘சட்டசபையில் அங்குர்லதா தேகா இருப்பதால், இனிமேல் அங்கு 100 சதவீத வருகைப்பதிவு இருக்கும்’ என்றும் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

சில காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒருபடி மேலே போய், ‘அசாமில், பா.ஜனதா ஆட்சியைப் பிடித்ததற்கு முக்கிய காரணமே அங்குர்லதா தேகாவின் கவர்ச்சிதான்’ என்று கூறியுள்ளனர்.

ராம்கோபால் வர்மா

சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் பிரபல டைரக்டர் ராம்கோபால் வர்மாவும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

அவர் அங்குர்லதாவின் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு, ‘எம்.எல்.ஏ. இந்த மாதிரி இருந்தால், நல்ல நாட்கள் வந்தே தீரும். நன்றி அங்குர்லதா, நன்றி மோடிஜி. முதல்தடவையாக நான் அரசியலை நேசிக்கிறேன்’ என்று ராம்கோபால் வர்மா பதிவு செய்துள்ளார்.

அதற்கு உடனடியாக அவருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ‘நீங்கள் பெண்களை மதிக்காதபோது, உங்களை எப்படி நாங்கள் மதிக்க முடியும்? முதலில், பெண்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்’ என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கண்டனம்

இதையடுத்து, ராம்கோபால் வர்மா தனது கருத்துக்கு விளக்கம் அளித்தார். ‘நான் அங்குர்லதாவுக்கு பாராட்டுதான் தெரிவித்தேன். நிறைய எம்.எல்.ஏ.க்கள் அழகாக இல்லாததால், இது ஒரு மாற்றம்தான்’ என்று கூறியுள்ளார். ஆனால், அவரது விளக்கத்துக்கு பிறகும் அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதுபோல், ஆபாச கருத்துகளை பதிவு செய்தவர்களுக்கு அசாம் திரையுலகினரும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபல அசாம் நடிகைகள் பிரஸ்துதி பரஷார், ஜெரிபா வாகித், அசாம் நாடக கதாசிரியர் அபிஜித் பட்டாச்சார்யா, நாடக ஆசிரியர் சத்யகீ புயன் ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, அரசியலில் நுழைந்தபோது சந்தித்த நிகழ்வுகளை இவை நினைவூட்டுவதாக அவர்கள் கூறியுள்ளனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.