Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 11, 2016

என்னென்னமோ படிக்கிறாய்ங்க!


‘தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல்’னு ஸ்கூல் படிக்கும்போது மொத்த உலகத்துக்கே இதுதான்டா பாடத்திட்டம்னு நினைச்சுக்கிட்டு இருந்திருப்போம். ஆனா, கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும்போதுதான், ‘அந்த பேப்பர் கஷ்டம். இந்த சப்ஜெக்ட் ஈஸி’னு விதவிதமான பாடங்கள் நமக்கு அறிமுகமாகும். விஷயம் என்னன்னா, ‘இதுக்கெல்லாமா பாடம் வைப்பீங்க?’னு கண்ணை உருட்டி முழிக்க, உலகெங்கும் இருக்கும் எக்கச்சக்க பாடங்கள். அதில், சுவாரஸ்யமான, காமெடியான பாடங்கள் சிலவற்றைப் புரட்டுவோமா?

சீரியல் பார்ப்பதற்கே வகுப்பும், அதற்கு ஒரு படிப்பும் இருந்தால் நம்புவீர்களா? அமெரிக்காவில் இருக்கும் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் நடக்கிறது இந்தக் கூத்து. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்று, சினிமாவாகவும் உருவெடுத்ததுதான் ‘ஸ்டார் டிரெக்’ சீரியல். பால்வெளியையும், அதை ஆராய்வதற்காக அனுப்பப்படும் விண்கலத்தையும் மையப்படுத்திய இந்த சீரியலைத்தான், ‘பிலாஸபி & ஸ்டார் டிரெக்’ என்ற பாடமாக வைத்திருக்கிறார்கள். வகுப்பறையில் இந்தத் தொடரைத் திரும்ப திரும்பப் பார்த்து, தத்துவம் சார்ந்த கேள்விகளை ‘ஸ்டார் டிரெக்’குடன் ஒப்பிட்டு ஆராய்வதுதான் பாடத்தின் நோக்கமாம்!

டாட்டூ குத்துறதுக்கு பத்து ரூபாய் போதும். ஆனால், ‘டாட்டூ’வைப் பத்தியே படிக்கணும்னா பல டாலர் செலவாகும். இதை ஏன் படிக்கணும்? அப்போதானே அமெரிக்காவின் ‘டாட்டூ கலாசாரம்’ பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும் என்கிறது, அமெரிக்காவில் இருக்கும் பிட்சார் கல்லூரி.

நம் ஊரில் ‘30 நாட்களில் ஆங்கிலம்’ என 20 ரூபாய்க்குப் புத்தகம் அடித்துப் போடாமல், ‘அழகுப் போட்டியில் வெல்வது எப்படி?’ என்பதைப் பாடமாகவே எடுக்கிறது அமெரிக்காவின் ஓபெர்லின் கல்லூரி. 1920-களில் இருந்து இன்று வரை, அழகுப் போட்டிகளின் வரலாறுகளைச் சொல்வதுடன், தேர்ந்தெடுக்கப்படும் முறை, பின்பற்ற வேண்டிய நடைமுறை, நடுவர்கள், ரசிகர்களின் ஆதரவைப் பெறுவது என ஆல்-இன்-ஆல் விஷயங்களையும் அடக்கி, அரியர் வைக்காத அளவுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்களாம். அமெரிக்கா மட்டுமல்லாமல், பல நாடுகளிலும் இந்தப் பாடத்துக்குக் கிளைகள் விரிந்திருக்கின்றன.

நாளிதழ், வார இதழ்களில் கிசுகிசு படிப்பது அவ்வளவு சுகம். ஆனா, எழுதுறது எவ்ளோ கஷ்டம். ஆனால், சுவாரஸ்யமாகவும், ரொம்ப நேரம் யோசிக்க வைக்கும் ட்விஸ்ட்டோடும் கிசுகிசு எழுதுவது எப்படி என்பதைக் கற்றுத்தர கார்னெல் பல்கலைக்கழகம் தயாராக இருக்கிறது. ‘கிசுகிசு எழுதுவது எப்படி?’ படிப்புக்கு வேலை வாய்ப்பு நிச்சயம் என்பதைச் சொல்லித்தான் தெரியணுமா?

‘தெருச்சண்டை கணிதம்’ - பேரைக் கேட்டாலே அதிரும், இந்தக் கணிதப் பாடத்தில் என்ன சொல்லித் தருவார்கள்? ஒரு தெருவில் சண்டை நடந்தால், எத்தனை அடி விழும், யாரை யார் அடிக்கிறார்கள், அடியில் உள்குத்து எத்தனை, வெளிக்குத்து எத்தனை... இப்படி சண்டை நடக்கும் இடத்திலேயே நேரடியாக உட்கார்ந்துகொண்டு கணக்கிடுவதற்கான பாடம் அல்ல இது. தெருச்சண்டை போன்ற எந்த ஒரு சம்பவத்திலும் நடக்கும் நிகழ்வுகளை, அங்கே எழுகிற சத்தங்களை அடிப்படையாகக்கொண்டு ஆராய்ந்து, ஏராளமான கணித முடிவுகளைப் பெறுவது எப்படி, புதிய கணிதங்களை உருவாக்குவது எப்படி? என்பதுதான், இதைப் பாடமாகவே நடத்திக்கொண்டிருக்கும் மஸ்ஸாசுசெட்ஸ் கல்லூரியின் கணிப்பு.

இது மட்டுமா? மரம் ஏறுவதற்கு, ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு, காதலைச் சொல்வதற்கு, சந்தோஷமாகக் காதலிப்பதற்கு... இப்படி கற்பனையே செய்து பார்க்காத விஷயங்களுக்கெல்லாம் பாடம் எடுத்துப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள் பலர்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.