Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 25, 2016

234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்: அரசியல் கட்சிகள் ஆச்சர்யம்- சீமான்


அ.தி.மு.க.- தி.மு.க.வினர் இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது. தமிழகம் ஏற்றம் அடைய மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் ஒரே வழி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

நெல்லை மாவட்டம், தென்காசி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ,தென்காசி புதிய பஸ் நிலையத்திலும், அம்பாசமுத்திரம் தொகுதி வேட்பாளர் தென்னரசை ஆதரித்து அம்பாசமுத்திரத்திலும் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.கவும் மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. ஆனால், இந்த கட்சிகளின் ஆட்சியால் பொதுமக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. இரு கட்சிகளுக்கு மாற்றாக ஆட்சி அமைக்க, நாம் தமிழர் கட்சி தேர்தலில் களம் புகுந்துள்ளது.

234 தொகுதிகளிலும் சீமான் எப்படி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார் என சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆச்சர்யமாக கேட்கிறார்களாம். எனக்கு தமிழகம் முழுவதும் தமிழ் சொந்தங்கள் இருக்கின்றனர். உடன் பிறப்புகள் ஆதரவு கொடுக்கின்றனர். அவர்கள் ஆதரவோடு தேர்தலில் போட்டியிடுகிறோம்.

இலங்கையில் தமிழ் சொந்தங்கள் படுகொலை செய்யப்பட்டபோது எந்த அரசியல் கட்சியும் தட்டிக் கேட்கவில்லை. தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து செய்யாத திட்டங்களை இனிமேல் திராவிட கட்சிகள் செய்யப்போவதாக கூறுவது ஏமாற்று வேலை. அந்த கட்சிகள் தமிழகத்தை கடனாளியாக்கியதுதான் சாதனை. தமிழகத்தில் தொடர்ந்து பற்றாக்குறை பட்ஜெட்தான் போடப்படுகிறது.

தமிழன் சாதியைப் பற்றி சிந்திப்பான். ஆனால் மொழியைப் பற்றி சிந்திக்க மாட்டான். ஒரு இனத்தின் அடையாளம் மொழி. அதற்கு தமிழர்கள் முக்கியத்துவம் தராதது வேதனை தருகிறது. தமிழனுக்கு ஞாபக மறதியும் அதிகம். அதை பயன்படுத்திக் கொண்டுதான் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மக்களை ஏமாற்றுகின்றன.

கச்சத்தீவை மீட்போம் என்று கருணாநிதி கூறுகிறார். இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்து விட்டு இப்போது மீட்கப் போகிறேன் என ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதி கொடுத்து வருகிறார். ஆட்சிக்கு வந்ததும் அந்த வாக்குறுதியை மறந்து விடுகிறார். தமிழகத்தில் மதுவிலக்கு கேட்டு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றபோது மதுவிலக்கு சாத்தியமில்லை என முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார். தேர்தல் வந்த பின்பு படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்கிறார்.

எனவே பொய்யான வாக்குறுதிகளை அளித்து அ.தி.மு.க., தி.மு.க.வினர் இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது. தமிழகம் ஏற்றம் அடைய வேண்டும் என்றால் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் ஒரே வழி.
இவ்வாறு சீமான் பேசினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.